Wide Vision Studio

 Movement for Arts and Media Activities

கலைகள் மற்றும் ஊடகவியல் சார் நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுக்கும் நோக்கில், ‘Wide Vision Studio’ என்னும் பெயரில் ‘சுயாதீனச் செயற்பாட்டு இயக்கம்’ ஒன்றினை 1999 இல் இலங்கையின் கிளிநொச்சியில் இருந்து சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் ஆரம்பித்தார். (Wide Vision Studio: Movement for Arts and Media Activities) இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது.

‘Living Moments: Photographs of Amarathaas’ (வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள்) என்னும் பெயரில் ஒரு ஒளிப்படப் பெருநூல் Wide Vision Studio சார்பில் உருவாக்கப்பட்டு 2006 இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமரதாஸ் உருவாக்கிய ஒளிப்படங்களைக் கொண்டு, ‘வாழும் கணங்கள்’ என்னும் பெயரில் ஒளிப்படக்காட்சி நடாத்தப்பட்டது.
 
1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ‘தேடல்’ என்னும் பெயரில் ஒரு பதிப்பகம் Wide Vision Studio இயக்கத்தின் ஒரு அலகாக உருவாக்கப்பட்டது. அதன் சார்பில், ‘இயல்பினை அவாவுதல்: அமரதாஸ் கவிதைகள்’ என்னும் கவிதைத் தொகுதி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இலங்கையின் இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், Wide Vision Studio என்னும் பெயரில் ஒரு ‘வலைத்தளம்’ (blog) உருவாக்கப்பட்டது.  2019 இல், widevisionstudio.com இணையத்தளம் உருவாக்கப்பட்டது.

Wide Vision Studio சார்பில், ஊடகவியல் மற்றும் கலைகள் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இறுதிப் போர்க்காலத்திலும் பின்-போர்க்காலத்திலும் அமரதாஸ் உருவாக்கிய ஒளிப்படங்களைக் கொண்டு, பல்வேறு நாடுகளில் ஒளிப்படக்காட்சி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் அமரதாஸ் உருவாக்கிய ஒளிப்படங்களைக் கொண்டு,’THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் பெயரில் ஒரு ஒளிப்படப் பெருநூல் Wide Vision Studio சார்பில் 2022 இல் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் 2022 ஒக்டோபர் மாதத்தில் அந்த ஒளிப்பட நூலின் ‘வெளியீட்டு நிகழ்வு’ நடாத்தப்பட்டது. பின்னர், சுவிற்சர்லாந்து நாட்டில் 2022 நவம்பர் மாதத்தில் அந்த நூலின் ‘வெளியீட்டு நிகழ்வு’ நடாத்தப்பட்டது.Wide Vision Studio என்பது, பொதுவாக அறியப்படுகிற ‘அமைப்பு’ மாதிரியானதல்ல. அது, கலைகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த சுயாதீனச் செயற்பாட்டு இயக்கம் ஆகும். கலந்துரையாடலுக்கான, கற்றலுக்கான, படைப்பாக்கத்திற்கான, உண்மைகளைக் கண்டடைவதற்கான, வரலாற்று ஆவணப்படுத்தலுக்கான, புது விடயங்களை அறிதலுக்கான, தேடலுக்கான வெளியாக அது விரியக்கூடியது. அது ஒரு அறிவியக்கம் ஆகும். widevisionstudio.com இணையத்தளமானது, சுயாதீன ஊடக வெளியாக அமைந்திருக்கும்.

Wide Vision Studio இயக்கத்தினை அடையாளப்படுத்தும் வகையிலான ‘இலச்சினை’ (logo) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் விரிந்த கைகளின் உருவத்தில், பறக்கும் ஒரு பறவையின்  தோற்றமும் W மற்றும் V ஆகிய எழுத்துகளின் தோற்றமும் இருக்கும். காட்சி விரிவை (Wide Vision), விரிந்த தேடலைக் கோடிகாட்டும் வடிவமைப்பினை அந்த இலச்சினை கொண்டிருக்கிறது.

அமரதாஸ்
2019-06-26