அனுபவங்களே படைப்புகளை வழிநடத்துகின்றன – அமரதாஸ் நேர்காணல்
கிராமங்களூடாகவும் மண்பட்டினங்களூடாகவும் கடற்கரை ஓரக் கிராமங்களூடாகவும் அவர் மண்ணையும், மனிதர்களையும், மரம் செடி கொடிகளையும், சூரியனையும், நிலவையும், கடலையும் தரிசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். ஒளிப்படங்கள் மூலம் வரலாற்றை எழுதுதல், மனித வாழ்வைப் பேசுதல், ஒளிப்படம் மூலம் கதை சொல்லுதல், ஆவணப் பிரதி எழுதல் போன்ற விடயங்களிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். இவருடைய கவித்துவம் நிறைந்ததும் கலைத்துவம் மிக்கதுமான பல ஒளிப்படங்களை, ‘எரிமலை’ மூலமும் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். அமரதாஸ் அவர்களை நாம் ‘எரிமலை’ சஞ்சிகைக்காக நேர்காண விரும்பினோம். அதற்குத் தூண்டுதலாக அவரது ‘இயல்பினை அவாவுதல்’ எனும் கவிதைத் தொகுதி அமைந்தது. மு.பொ. அவர்களும் அமரதாஸ் பற்றி என்னுடன் சிலாகித்திருந்தார். தவபாலன் அவர்களும் இவருடனான நேர்காணலைக் காண்பதற்கு உற்சாகம் அளித்தார். இருவருமாக அவரிடம் கேள்விகளைத் தொடுத்தோம். அத்தகையதொரு கலைப் பயணியின் நேர்காணலை நாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பரப்பை அகலப்படுத்தியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே.




ஒளிப்படக்கலையில் தங்களுடைய பாணி எத்தகையது ?
கலைகள் எல்லாவற்றிற்குமிடையே அந்தரங்கமான ஆழமான ஊடாட்டம் இருக்கிறது. ஒளிப்படக்கலையில் எனது பாணி என்று எதையும் நான் வகுத்துக் கொண்டு ஈடுபடவில்லை. ஒளிப்படக்கலையில் என் ‘இஸ்ரப்படி’ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், அவ்வளவு தான். என் ‘இஸ்ரப்படி’ என்பதற்குள் என்பாணி இருக்கக் கூடும். பயணங்களின் போது எனது கமெராவை எடுத்துச் செல்வேன். எனது கமெரா எப்போதும் என்னுடனேயே இருக்கும். என்னை ஈர்க்கும், பாதிக்கும் அம்சங்களை ஒளிப்படங்களாக்குவேன்.
எனது தரிசனங்களைச் சக மனிதருக்குத் தரமுனையும் எனது கலைச் செயற்பாடுகளில் ஒன்று தான் ஒளிப்படக் கலைச் செயற்பாடு. கலைஞனின் விருப்பு வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வரையறையினுள்ளோ நெகிழ்ச்சித் தன்மையற்ற இறுகிய கோட்பாட்டினுள்ளோ நான் சிக்குப்படுவதை விரும்பவில்லை. எனது ஒளிப்படங்களின் கோணங்கள், ஒளியமைப்பு, காட்சியமைப்பு போன்றவற்றில் எனது ஆளுமை, தனித்துவம் மிளிரக்கூடும். அதுவே எனது பாணியாக இனங்காணப்பட வாய்ப்பிருக்கிறது. எனினும், எனது பாணி இதுவென்று எதையாவது சொல்லிக் கொண்டு படைப்புச் செயலில் நான் ஈடுபட விரும்பவில்லை.



போர்கால வாழ்வின் அனுபவங்களையும் தாங்கள் கலைப்படைப்புக்களாகவும் கொணர்ந்திருக்கிறீர்கள். போர் வாழ்வியல் அனுபவம் ஒன்றைக் கலைப்படைப்பாக்கும் உந்துதல் உங்களுக்குள் எவ்வாறு கிளர்ந்தது ?
நான் வாழும் காலம் போர்க்காலமாக வாய்த்திருக்கின்றது. அனுபவங்களே படைப்புக்களை வழிநடத்துகின்றன. அப்படி இருக்கையில் போர்க்கால வாழ்வனுபவம் எனது படைப்புக்களில் பிரதிபலிக்கக் கூடும். போர்க்காலத்தில் போர் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. போரானது, தனது சூழலை மனித வாழ்வெங்கும் படரவிடக் கூடியது தான். எனினும், போர்க்காலத்திலும் மனித வாழ்வு சந்தோசங்களையும், காதலையும், முரண்களையும் மற்றும் பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கிறது தானே. எனது படைப்புக்களை வாழ்வனுபவங்களின் பிறப்புக்களாகவே காண்கிறேன். வாழ்வில் விதம் விதமான அனுபவங்களைத் தேடியலைபவன் நான். எனது அனுபவங்கள் எல்லாமே படைப்புகளாகி விடவில்லை. படைப்பாக்கத்திற்கு அவகாசம் தேவை. தேவையும், நல்ல சூழ்நிலையும் கூடி வரும்போது தான் நல்ல படைப்புக்கள் தோன்ற முடியும்.


கவிதா ஆளுமையை உங்களுக்குள் எப்போது கண்டடைந்தீர்கள்? தங்களின் கவிதைகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனக் கருத்துக்கள், தங்களை வந்தடைந்திருக்கின்றனவா ?
எனது கவிதா ஆளுமையை எப்போது கண்டடைந்தேனென்று கூறுவது கடினம். எனது கவிதைகளை நானே ஒரு வாசகனாக அல்லது விமர்சகனாக இருந்து பார்க்கும் போதும், எனது கவிதைகள் பிறரால் விமர்சிக்கப்படும் போதும் எனது கவிதா ஆளுமையை உணர முடிகிறது. தவிர்க்க முடியாமல் எனது படைப்புகளுக்கான விமர்சகனாகவும் நான் இருந்து விட நேர்கிறது. இதுவே எனது பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது. என்னுள்ளிருக்கும் விமர்சகன் அல்லது வாசகன் எப்போதும் என்னைத் தட்டிக்கொடுத்துக்கொண்டும், ‘நொட்டிக்கொண்டும்’ இருப்பவன். எனது கவிதைகள் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் செவிசாய்ப்பதுண்டு. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாடு எனக்குண்டு. பிறரின் கருத்துக்களை எனது கருத்துக்களில் உரசிப்பார்த்துக் கொள்வேன். எனது கருத்துக்களை வளப்படுத்திக் கொள்ள, மாற்றுக்கருத்துக்களைக் கண்டடைய, பிறரின் கருத்துக்கள் தேவைப்படுகின்றன. எனது கவிதைகள் குறித்த கருத்துக்களை, பலர் ஊடகங்கள் வழியாகவும் நேரிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமான படைப்பாளிகளும் விமர்சகர்களும் வாசகர்களும் அடங்குவர். அவர்களுள் மு.பொன்னம்பலம், உமா வரதராஜன், புதுவை இரத்தினதுரை, அறிவுமதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கருணாகரன், அ.யேசுராசா, நிலாந்தன், கா.வே.பாலகுமாரன், சு.வில்வரத்தினம், அந்தனி ஜீவா, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஓட்டமாவடி அறபாத், பஹிமா ஜஹான், விவேக், சி.சிவசேகரம், பௌசர், தி.தவபாலன் போன்றோரின் கருத்துக்கள் என்னை அதிகம் ஈர்த்திருக்கின்றன.
ஒளிப்படத்தைக் காட்சிப் படிமமாக வளர்த்துச் செல்லும் பாங்கு, கவிதை இயக்கத்தின் போதும் பங்காற்றுகிறதா ? ஒளிப்பட அனுபவம் கவிதைக்கு வலுச்சேர்க்கும் வண்ணமாய் அமைகிறதா ?
எனது கவிதை, ஒளிப்படம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளதாகக் கூறமுடியாது. அடிப்படையில் இரண்டும் தனித்துவமான வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் கொண்ட கலைகள். எனினும், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு வளம் சேர்த்திருப்பதாகவே நினைக்கிறேன். எனது கவிதைகளின் காட்சிப் பண்பின் அடிப்படையாக, எனது ஓவிய ஈடுபாடும் ஒளிக்கலைச் செயற்பாடுகளும் அமைந்திருக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரையில்,கலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான தேவைகளும், தனித்துவமான வெளிப்பாட்டுச் சாத்தியங்களும் இருக்கின்றன. எனவே தான் சமூகத் தளத்தில் வெவ்வேறு கலைவடிவங்களும் தளைத்திருக்கின்றன. கலைகள் எல்லாவற்றுக்குமிடையே அந்தரங்கமான, ஆழமான ஊடாட்டம் இருப்பதை உணர முடிவது தான் சுவாரசியமானது. இந்த ஊடாட்டம் மிகவும் முக்கியமானது, தவிர்க்க முடியாதது. நான் ஈடுபடும் ஒவ்வொரு கலை வடிவங்களும் எனது ஒட்டுமொத்தமான படைப்பாக்கச் செயற்பாட்டைச் செழுமைப்படுத்துகின்றன என்றே தோன்றுகிறது. எனது வெவ்வேறு வகையான கலை முயற்சிகளும் எனது கவியுலகின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்ல முடியாது. எனது கலை முயற்சிகளெல்லாம் என் கவியுலகினைச் சுத்திகரிக்கின்றன, செழுமைப்படுத்துகின்றன, பலப்படுத்துகின்றன. உணர்வனுபவத்தின் காட்சிப்படுத்துகை தான் (visualisation) படிமத்தின் அடிப்படை எனக் கண்டுகொண்டால், படிமம் என்பது கவிதையின் ஒரு அம்சமாக, கூறாகத் தென்படாமல் முழுக்கவிதையே படிமத்தை நிகழ்த்துவது தென்படும். ஒரு நல்ல கவிதையின் வாசிப்பனுபவம் வாசிப்பின் நிறைவில் வாசகரிடத்தில் முழுப்படிமம் ஒன்றைத் தோற்றுவிக்க வல்லது.படிமம் பல்பரிமாணத் தன்மை கொண்டது, பல்பரிமாணத் தன்மையைக் காட்டக் கூடியது. படிமக் கவிதை, குறியீட்டுக் கவிதை, மரபுக் கவிதை, உருவகக் கவிதை என்பதெல்லாம் அநாவசியமான பிரிப்புக்கள். விமர்சன வசதிக்காக இத்தகைய பிரிப்புக்கள் நடந்திருக்கின்றன. கவிதை, கவிதையாக இருக்கவேண்டுமென்பதுதான் முக்கியம். படிமம்,குறியீடு போன்றவற்றைக் கவிதையின் உத்திகள் என்று கொண்டால், அவற்றை வலிந்து கவிதையில் புகுத்துவது கவிதைக்குப் பங்கம் விளைவித்துவிடும். படைப்புச் செயற்பாடானது இயல்பாக, பிரக்ஞை பூர்வமாக அமைய வேண்டியது. நல்ல கவிதையானது நல்ல படிமத்தை நிகழ்த்தக் கூடியது. கவிதையின் படிமமானது வாசகரின் கவிதைப் புரிதலுக்குத் தடையாக இருக்கக் கூடாது. அது, புதிய அனுபவத்தை, காட்சிப் புலத்தை விரித்து உரையாடலை மேற்கொள்ள வேண்டும். எனது கவிதைகளில் படிமங்களின் ஆதிக்கமில்லை. காட்சிக்கலைகளில் எனது ஈடுபாடு கூடியிருப்பதன் காரணமாக எனது கவிதைகள், காட்சிப்பண்பு மிக்கவையாக படிமத்தன்மை கொண்டவையாக இயல்பாகவே அமைந்து விடுகின்றன.
புதிய தலைமுறைப் படைப்பாளிகளின் கவிதைகளின் போக்கு எவ்வாறானதாக இருக்கிறது ? அவர்கள் குறித்தும் அவர்களது கவிதைப் போக்குகள் குறித்தும் பேச முடியுமா ?
புதிய தலைமுறைப் படைப்பாளிகளின் படைப்புத் தரம் பற்றிய கேள்விக்குப் பதிலளிப்பது சற்றுக் கடினமானது. புதிய படைப்பாளர்களிடமிருந்து அதிகம் படைப்புத் தரத்தை எதிர்பார்க்க முடியாது. எனினும், புதிய படைப்பாளிகளிடம் தமது படைப்புத் தொடர்பான பொறுப்புணர்வும்,தேடலும்,கலந்துரையாடலும் தேவை. தமது படைப்புக்களின் சமூகப் பயன்பாடு குறித்தும் அவர்கள் அக்கறை கொள்வது நல்லது. புதிய தலைமுறைப் படைப்பாளர்கள் சிலரிடம் மட்டுமே ஆரோக்கியமான போக்கைக் காண முடிகிறது.
வெளிநாடுகளில் உணவகங்கள், பாடசாலைகள், மாநகரசபை மண்டபங்கள், பெரிய பூங்காக்கள், குறிப்பாக பிரான்ஸில் லுக்சம்பெர் மெற்றோவுக்கு அருகிலுள்ள பூங்கா போன்றவற்றில் உலகின் மிக முக்கியமான மாற்றங்களையும் பேரழிவுகளையும் அடையாளமிழத்தலையும் ஆக்கிரமிப்பையும் அகதிகளாக வெளியேறுவதையும் வன்முறையையும் காட்சிப்படுத்தும் பிரமாண்டமான ஒளிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களின் ஒளிப்படங்களையும் இவ்வாறான இடங்களில் பயன்படுத்துவதில் ஈடுபடுகிறீர்களா ?
பொது இடங்களில் நல்ல ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தும் பழக்கம் ஈழத்தில் மிகவும் குறைவு. இங்கு தென்னிந்திய சினிமா நடிகர்களின் படங்களும் ‘சீனறிகள்’ என்ற பெயரில் இயற்கைக் காட்சிப் படங்களும் பெருமளவில் கலண்டர்களாகவோ வாழ்த்து அட்டைகளாகவோ பிரசுரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இல்லாத வீடுகளே இல்லையென்று சொல்லுமளவிற்கு இவற்றின் ஆதிக்கம் பெருகியிருக்கிறது. ஈழத்து வாழ்வின் பல்வேறு தேவைகளுக்கும் ஒளிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் பயன்படுத்துகையில் காலத்தின் பதிவை,விழிப்புணர்வை,புதுமையை, நல்ல ரசனையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. எனது ஒளிப்படங்களைக் கலண்டர்களாக, வாழ்த்து அட்டைகளாக, வேறு சில வடிவங்களாகப் பிரசுரித்துப் பரவலாக்கும் விருப்பமுண்டு. அதற்கான பொருளாதார வசதியும் விநியோக முறையும் சரியான சூழ்நிலையும் கூடி வரவில்லை.









ஒளிமூலம் திரையுள் வீழ்த்தும் விம்பங்களின் ஓட்டத்தொடர்ச்சியில் நீங்கள் கலைத்துவப்படுத்தும் ஒரு நிகழ்வை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
ஒளிப்படங்களுக்கான காட்சித் தேர்வென்பது எனது அகம் சார்ந்தது. அதனை விவரிப்பது கடினம். எனது ஆளுமை, ரசனை, அனுபவம், சமூகப் பார்வை, கருத்து நிலை, அரசியல், வசதிப்பாடு போன்ற எல்லாம் கலந்ததாகவே எனது தேர்வுகள் அமையுமென்று தோன்றுகிறது. ஒரு இயக்கத்தின் அல்லது நிகழ்வின் உச்சக்கட்டம் நிகழும் கணத்தை ஒளிப்படமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். அந்தக் கணத்திற்காகக் காத்திருப்பேன். அப்படியொரு கணத்தின் பதிவானது உயிர்ப்புள்ளதாக, சலனத்தன்மை கொண்டதாக, பல்பரிமாண அனுபவங்களைத் தோற்றுவிக்கக் கூடிய படிமமாக அமைந்து விடும்.
கமெராவின் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து செல்கின்றன. அதற்கமைய தங்களால் இயங்க முடியாது. அவ்வாறு இருக்கையில் தங்களுக்குள் ஒரு சோர்வு தட்டுவது உண்டா ? அத்தகைய சோர்வு நிலையை உடைத்து எவ்வாறு மேலெழும்புகிறீர்கள் ?
கமெராவின் தொழில் நுட்பங்கள் மாறிவருவதால் ஒரு ஒளிப்படக் கலைஞனுக்கு அடிப்படையான பாதிப்புக்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. இப்போது பிலிம் தேவைப்படாத டிஜிற்றல் கமெராக்கள் பரவலான புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஒளிப்படம் எடுப்பது முதல் ஒளிப்படப் பிரதியாக்கல் செய்வது வரையில், தொழில் நுட்ப ரீதியில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டிருக்கின்றன. எனினும், ஒளிப்படக்கையில் காட்சிப் பண்பு அல்லது விம்பங்களின் அடிப்படைத் தன்மை மாறிவிடவில்லை. எந்தவகையான மாற்றங்களும் கலைகளின் அடிப்படைகளைச் சிதைக்காமல், மாறாக வளர்த்துச் செல்லவே உதவும். புதிய மாற்றங்களுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு கலைஞன் தன் இயல்பில் பயணிக்க வேண்டியதுதான். எனது ஒளிப்படங்கள் மேம்படுவதற்கு தொழில் நுட்ப சாதனங்கள் சில தேவைப்படுகின்றன. நல்ல ஒளிப்படம் எடுப்பதென்பது தனியே ஒரு தொழில் நுட்பச் செயற்பாடல்ல, அது ஒரு கலைச் செயற்பாடு. கமெரா என்னும் தொழில் நுட்ப சாதனம் ஒரு தேர்ந்த கலைஞனிடத்தில் இருக்குமானால் நல்ல ஒளிப்படங்கள் தரும். நல்ல ஒளிப்படத்தை உருவாக்குவதில் கலைஞனின் பங்கு தான் பிரதானமானது. எனினும், நல்ல ஒளிப்படங்களின் உருவாக்கத்திற்கு, தேவையான தொழில் நுட்பச் சாதனங்களின் பிரயோகம் அவசியமென்பதை மறுக்க முடியாது. ஒரு ஒளிப்படக் கலைஞனுக்கு , சந்தர்ப்பங்களுக்கேற்ப வெவ்வேறு வகையான லென்சுகள், பில்ரர்கள், வெவ்வேறு வகையான வசதிகள் கொண்ட கமெராக்கள் தேவைப்படலாம். என்னிடம் இருப்பது சாதாரண பிலிம் கமெரா. என்னிடம் நல்லதொரு டிஜிற்றல் கமெரா இருந்தால் மிகவும் குறைந்த செலவில் ஒளிப்படங்களை எடுக்க முடியும். மேலும் ஒரு கணணி இருந்தால் ஒளிப்படக்கலைச் செயற்பாடுகளுக்கு வசதியாக இருக்கும். எனது ஒளிப்படங்களின் பரவலாக்கத்திற்கும் விரைவான செயற்பாட்டிற்கும் நல்லதொரு டிஜிற்றல் கமெரா, கணணி போன்றவை தேவைப்படுகின்றன.
ஈழத்தில் ஒளிப்படக் கலை வளர்ச்சியடையாமைக்கு என்னென்ன காரணங்களைத் தாங்கள் முன்வைக்கிறீர்கள் ?
ஈழத்தில் ஒளிப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்பிக்கும் வகையிலான செயற்பாடுகள் இல்லை. ஒளிப்படக்கலை பற்றி எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அரிதாகவே இருக்கிறது.
உங்கள் ஒளிப்படங்கள் எந்தளவிற்கு ஊடகப் பரவல் ஆகியுள்ளன? அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அவை உங்களுக்குள் எத்தகைய உணர்வுகளைத் தந்தன ?
எனது ஒளிப்படங்கள் ஓரளவுக்கு ஊடகப் பரவல் ஆகியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். வெளிச்சம் இதழ்கள், ஈழ நாதம் பத்திரிகைகள், தெரிதல் இதழ், லண்டனில் பத்மநாப ஐயர் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியாகிய யுகம் மாறும் என்ற சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளின் தொகுப்பு, மற்றும் சில கவிதைத் தொகுதிகள், நூல்கள் போன்றவற்றில் எனது ஒளிப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. லண்டனில் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ்ப் படைப்புக்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்றின் அட்டை எனது ஒளிப்படத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது. அண்மையில் வெளியாகிய, கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ‘பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்’ என்ற கவிதைத் தொகுதியில், ஓவியர் மருது வின் ஓவியங்களுடன் எனது ஒளிப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. நண்பர் தவபாலன் நடாத்தும் ‘ஈழ விசன்’ என்ற இணையத்தளத்தில் அதிகமான ஒளிப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் எனது ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தக் கூடிய வகையில் எனது நேர்காணல் ‘தமிழீழ தேசியத் தொலைகாட்சி’யில் ஒளிபரப்பாகியுள்ளது.














ஒளிப்படங்கள் மொழியின் துணையின்றிப் பேசும் சக்தி படைத்தவை. உலகளாவிச் செல்லும் தன்மை படைத்தவை. அத்தகைய கலையைக் கையில் வைத்திருக்கும் தங்களின் எதிர்காலப் போக்கு எவ்வாறு அமையும்?
ஒளிப்படக் கலையினதும் பிற கலைகளினதும் ஈடுபாடுகளின் வழியே இப்போது சலனப் படக் கலையில் ஈடுபடத்தொடங்கியிருக்கிறேன். சில புனைவுசாராப் பட (Documentary) முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்து இயக்கியிருக்கிறேன். சினிமாக் கலையில் கூடுதல் ஈடுபாடும் விருப்பமும் தேடலும் படிப்பும் பட்டறிவும் எனக்குண்டு. திரைக்கதைக்கான சினிமா இயக்குநருக்கான பயிற்சிகளைப் பெற்றிருக்கிறேன். குறும் படங்களை எழுதி இயக்கும் விருப்பமிருக்கிறது. அதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். நிறைய நேரமும் கடின உழைப்பும் அதிக பணமும் தொழில் நுட்ப வசதிகளும் சினிமாவில் ஈடுபடத் தேவைப்படும். எல்லாம் கூடிவரும் போது, நான் சினிமா இயக்குநராகிவிடக் கூடும்.

நேர்காணலை நிகழ்த்தியவர்கள் – தா.பாலகணேசன், தி.தவபாலன்
போர்க்காலத்திலே வன்னியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இந்த இந்த நேர்காணல், பிரான்ஸில் இருந்து வெளியான ‘எரிமலை’ இதழிலே பிரசுரமானது.