கூட்டுக் களவாணிகளின் மோசடி அறிக்கை குறித்து அமரதாஸ் அவர்களின் மறுப்பு அறிக்கை

எனது போர்க்கால ஒளிப்படங்கள் சில, என்னுடையவை அல்ல என்ற மோசடியான கருத்தை அவதூறாக முன்வைக்கும் ‘அறிக்கை’ ஒன்று ரகசியமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அது, 22.11.2019 அன்று கசியவிடப்பட்டிருக்கிறது. அதனைத் தயாரித்தவர்களது பெயர்கள் அல்லது ‘அடையாளங்கள்’ எதுவும் அதிலே இல்லை. அதன் முடிவில், ‘தமிழீழ ஊடகப் போராளிகள்’ என்ற பொருத்தமற்ற குறிப்பு மட்டுமே உள்ளது. அந்த அறிக்கையானது, நேரில் என்னை எதிர்கொள்ளும் திராணியற்ற ‘கூட்டுக் களவாணிகள்’ சிலரின் மோசடியான சதி முயற்சியாகும். ஆதாரங்கள் இல்லாத வெற்றுக் குற்றச்சாட்டுகள், வதந்திகள், பொய்கள், அவதூறுகள் ஆகியவற்றின் வடிவமாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ‘நோர்வே தமிழ்ச் சங்கம்’ சார்ந்த சிலரும் ‘முன்னாள் போராளிகள்’ என்று சொல்லிக்கொள்ளும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் எனக்கெதிரான இந்தச் சதி நடவடிக்கையின் பின்னே ரகசியமாகச் செயற்பட்டிருக்கக்கூடும். தம்மை வெளிப்படுத்திப் பேசத் திராணியற்றவர்கள், அவதூறாக மொட்டை அறிக்கை தயாரித்துக் கசியவிடுவது எந்தவகையிலும் நியாயமானதில்லை. இத்தகைய மோசடி நடவடிக்கைகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை மறைமுகமாக அல்லது தந்திரமாகச் சம்மந்தப்படுத்துவது, மோசமான உள்நோக்கம் கொண்ட செயலாகும். இத்தகைய சதிச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், போரிலே பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் இனத்தின் நீதிக்கான போராட்ட முன்னெடுப்புகளுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களுடன் இயங்கக்கூடிய நாசகார சக்திகளுக்குத் துணைபோகிறவர்களாக இருக்கக்கூடும்.

‘எனக்கு எதிரான’ ஆதாரம் ஏதாவது தம்மிடம் இருப்பதாக அந்த அறிக்கை தயாரித்தவர்கள் நம்பினால், என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு எதுபற்றியும் என்னுடன் விவாதிக்கலாம். அல்லது என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். அந்த அறிக்கையிலே சம்மந்தப்பட்டவர்களின் ‘அடையாளங்கள்’ மறைக்கப்பட்டுள்ளதால், சட்டரீதியான நடவடிக்கை எதுவும் என்னால் மேற்கொள்ள முடியாதிருக்கும். பொய்யை ஒருவர் சொன்னாலென்ன, கூட்டுச்சேர்ந்து சிலர் சொன்னாலென்ன, பொய் பொய்யே தான். தீர விசாரிக்கும் போதும் அறிவியல் ரீதியில் ஆராயும் போதும் மட்டுமே உண்மை புலனாகும்.  

அந்த மோசடி அறிக்கையினைத் தயாரித்துக் கசியவிட்டவர்கள், தம்மைத்தாமே ஒரு பொறியில் விழுத்தியிருக்கிறார்கள். அவர்களால், இனி நேரில் வந்து என்னுடன் விவாதிக்கவோ எனக்கெதிராக எதையும் நிரூபிக்கவோ முடியாது. தம்மை யாரென்று அவர்கள் இனங்காட்டினால், அந்த அறிக்கையே அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்தும் கருவியாக மாறும். அறிக்கையின் உள்ளே அப்பட்டமான பொய்களும் திரிபுவாதங்களும் உள்ளன. அவற்றை அம்பலப்படுத்தும் வகையிலான ஆதாரங்களும் உண்மை அறியும் பொறிமுறையும் என்னிடம் உள்ளன. எங்கேயும் எப்போதும் அறத்தின் வலிமையுடன் கூட்டுக்களவாணிகளை எதிர்கொள்ள என்னால் முடியும். முடிந்தால், யாராக இருந்தாலும் நேரில் என்னைச் சந்தியுங்கள்.   

போரில் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் சாட்சியக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் என்னை, வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் தாக்க முனையும் சக்திகளைக் கடந்து அற வழியிலே பயணித்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நெருக்கடிகளுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலே தான், ஈழத்தமிழர் சார்ந்த எனது முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அந்த அறிக்கையில், என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் புனையப்பட்ட பொய்கள் உள்ளன. அவற்றுக்குத் தனித்தனியாக விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பொய்களின் அல்லது அவதூறுகளின் உள்நோக்கம் வெளிப்படையானது. எனினும், பொதுவெளியிலே எனது தரப்பு நியாயங்கள் சிலவற்றை முன்வைக்க வேண்டியிருப்பதாகக் கருதுவதால், சுருக்கமான ஒரு மறுப்பு அறிக்கையினை வெளியிடவேண்டியிருக்கிறது.

நெருக்கடிகள் நிறைந்த போர்ச்சூழலுக்குள், எனது சொந்த ஒளிப்படங்களை மட்டுமே கொண்ட தனிநபர் ஒளிப்படக்காட்சி நிகழ்வைப் பெரிய அளவிலே சுயாதீனமாக முன்னெடுத்திருக்கிறேன். ஒரு பெரிய ஒளிப்பட நூலையும் ‘வாழும் கணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு, ஒளிப்படக்கலை சார்ந்த தீவிரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கிறேன். ‘கடமைக்காக’ மட்டும் நான் கமெரா தூக்கிய ஒரு நபர் இல்லை. கொடிய போர்க்காலத்தில் ஒளிப்படங்களை உருவாக்கியது மட்டுமல்லாமால், இயன்றவரை ‘வெளியில்’ அனுப்பியிருக்கிறேன். போர்க்காலத்திலும் பின் போர்க்காலத்திலும் எனது ஒளிப்படங்களின் டிஜிடல் பிரதிகளைப் பலரிடம் பல்வேறு தேவைகள் சார்ந்து வழங்கியிருக்கிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில பிரிவுகள் ஊடாகவும் எனது போர்க்காலப் படங்கள் ‘வெளியில்’ அனுப்பப்பட்டன என்பதை நான் இப்போது மறைக்க வேண்டியதில்லை. ஒரு சுயாதீன ஊடகராக இருந்து, நெருக்கடியான போர்க்காலத்தின் உண்மைகளையும் அவலங்களையும் பதிவுசெய்து வெளிப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தேன். போர் முடிந்த பின்னர், எனது ஒளிப்படங்களைப் பல்வேறு வழிகளிலே சர்வதேசமயப்படுத்தியிருக்கிறேன். எனது போர்க்கால ஒளிப்படங்களைக் கொண்ட ஒளிப்படக்காட்சி நிகழ்வுகள் பலவற்றைப் பல்வேறு நாடுகளில் நடாத்தியிருக்கிறேன். இறுதிப் போர்க்காலத்தில் ஒளிப்படங்களை நான் உருவாக்கியபோதும் அவற்றை ‘வெளியில்’ அனுப்பியபோதும் அருகில் இருந்த நண்பர்கள் சிலர் இப்போதும் உயிருடன் உள்ளனர். 

எனது இன மக்களின் சொத்துகளாக அமைந்திருக்கக்கூடிய எனது ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையினை, ஆவண மதிப்பினை யாராலும் நீர்த்துப்போகச் செய்ய முடியாது. எனது பெயருடன் இதுவரையிலே நான் வெளியிட்டிருக்கும் படங்களை, என்னுடையதில்லை என்று எவராலும் ‘நிரூபிக்க’ முடியாது. எந்த ஒரு அமைப்பின் பெயரிலும் நான் பதுங்கிக்கொள்வதில்லை. அற விழுமியங்களுடன் சுயாதீனமாக நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னமும் வெளியிடப்படாத Through the grey zones என்னும் எனது ஒளிப்பட நூலில், எனது ஒளிப்படங்களை மட்டுமே நான் பயன்படுத்தியிருக்கிறேன்.  

Sri Lanka’s Secrets என்ற நூலுக்கென Trevor Grant என்னும் அவுஸ்திரேலிய ஊடகருக்கு, என்னுடைய படங்களையும் தன்னுடையவையாகச் சொல்லி வழங்கிய ‘மறவன்’ என்னும் மோசடியாளரை எனக்குத் தெரியும். அவரையும் அவரது ஊழலையும் அறிந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இறந்து போன Trevor Grant என்ற ஊடகரைச் சாட்சிக்கு அழைக்க முடியாதெனினும், அவருடன் சேர்ந்து பணியாற்றிய, உண்மை அறிந்த சிலர் இப்போதும் இருக்கிறார்கள். Sri Lanka’s Secrets என்ற நூலில் இருக்கும் எனது போர்க்கால ஒளிப்படங்களை, விஞ்ஞானபூர்வ ஆதாரங்களோடும் நம்பகத்தன்மையோடும் என்னால் உறுதிப்படுத்திக் காட்ட முடியும். (அதில் இருக்கும் அனைத்துமே என்னுடையவை என்று நான் எங்கும் சொன்னதில்லை.)

எனது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் மக்கள் சார்ந்த பெரும்பாலான போர்க்காலப் படங்கள், எனது பிரதான கமெராவிலே பதிவாகியிருக்கும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனது கமெராவில் என்னை நானே படமாக்கியிருக்கிறேன். அத்தகைய அனைத்துப் படங்களுக்குமான அடிப்படைத் தரவுகள் துல்லியமாக ஒத்துப்போகும். போர்காலப் படங்கள் அல்லது ‘சர்ச்சைக்குரிய படங்கள்’ யாராலே பதிவுசெய்யப்பட்டன என்பதை உறுதிப்படுத்தக்கூடிய துல்லியமான, நம்பகமான சான்றுகளே இப்போது அவசியமானவை. எனது பெயருடன் நான் வெளியிடக்கூடிய படங்கள் அனைத்தையும் என்னுடையவையாக நிரூபிக்கும் துல்லியமான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறேன். அத்தகைய ஆதார வல்லமை இல்லாமல், பொதுவெளியிலும் சர்வதேச மட்டங்களிலும் அவற்றை முன்வைத்து வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் இயங்க முடியுமா? 

மோசடியின் உச்சமாக, நான் பாவித்த எனது பிரதான காமெராவையே என்னுடையதில்லையென்று அறிக்கையிலே காட்ட முயன்றிருக்கிறார்கள். எனது பிரதான கமெராவில் (Nikon Corporation, Model : Nikon D70s, S/N-1001842) நானே ஒளிப்படங்களைப் பதிவுசெய்திருக்கிறேன் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். உலகெங்கும் பரவலாகப் பயன்பாட்டிலுள்ள எனது ஒளிப்படங்களின் டிஜிடல் மூலப்பிரதிகளில் இருந்து, அடிப்படைத் தரவுகளை (metadata) அறிவது கடினமானதல்ல. அவற்றை யாராலும் கணினி வழியாக அறிந்துகொள்ள முடியும். அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, எனக்கு எதிராக எதையும் நிரூபித்துவிட யாராலும் முடியாது. சட்டரீதியான நடவடிக்கைகளிலோ ஒளிப்படவியல் நிபுணத்துவம் கொண்டவர்களின் பகுப்பாய்வு நடவடிக்கைகளிலோ அல்லது சுயாதீனக் குழுவொன்றின் கண்ணியமான விசாரணை நடவடிக்கைகளிலோ அனைத்து விதமான ஆதாரங்களும் துல்லியமாகப் பரிசீலிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்படலாம். உரியவர்கள் நேரிலே சந்தித்து அனைத்தையும் பரிசீலிக்காமல், பொதுவெளியில் வெறுமனே விவாதித்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. குற்றம் சாட்டுபவர்களே குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பது அடிப்படையானது. ஆக, குற்றம் சாட்டுபவர்கள், ஆரோக்கியமான முன் முயற்சிகளை அல்லது நல்லெண்ண முயற்சிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சுயாதீன ஊடகராகவும் அறக்கோபம் கொண்ட கலைஞராகவும் நான் போர்க்காலத்தில் என்னவெல்லாம் செய்திருக்க முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறேன். ‘பொது நன்மை’ கருதிச் சில விடயங்களைத் ‘தவிர்த்து’ நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. இதை, என்னால் விரித்து விலாவாரியாகச் சொல்ல முடியுமெனினும், அவசியமில்லை என்று கடந்து சென்றுவிடுகிறேன். எது எப்படியிருந்தாலும், என்னைப் பற்றியோ போர் சார்ந்த விடயங்களிலோ பொய்களையும் உண்மைக்கு மாறான தகவல்களையும் நான் சொல்வதில்லை. அதில் நான் கவனமாகவே இருக்கிறேன். என்னைப் பாதுகாக்கும் நோக்கில், பொய்களின் நிழலிலோ அல்லது அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்ய விழையும் அமைப்புகளின் நிழலிலோ நான் ஒதுங்கிக்கொள்ள மாட்டேன்.      

பொதுவெளியில் எனது அடையாளங்களைப் பகிரங்கப்படுத்தி நான் செய்துகொண்டிருக்கும் பணிகள் எனக்குப் பல்வேறு ஆபத்துகளைத் தரக்கூடியவையே. நான் சார்ந்த எல்லா நிகழ்வுகளையும், எனது தனிப்பட்ட விடயங்கள் அனைத்தையும் பொதுவெளியிலே நான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அவசியம் ஏற்படுகிறபோது, உண்மை சார்ந்து எதையும் வெளிப்படுத்தத் தயங்க மாட்டேன். எதை, எப்போது, எப்படிச் செய்யவேண்டும் என்பதிலே தெளிவாக இருக்கிறேன்.  

உழவு இயந்திரப் பெட்டியில் ஒரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் சிறுவனின் படம், TamilNet என்ற இணைய தளத்தில் 2009-03-17 அன்று வெளியாகியிருக்கிறது. அது, இன்னொரு வெளிநாட்டு இணைய தளத்திலும் 2009-04-22 அன்று வெளியாகியிருக்கிறது. அதனை 2009-03-16 அன்று நான் மாத்தளன் வைத்தியசாலையில் பதிவுசெய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, TamilNet இணைய தளத்தின் செய்திப்பதிவில் மூன்றாவதாக இருக்கும் படமும் (உழவு இயந்திரப்பெட்டியிலே காயப்பட்டிருக்கும் மக்கள்) நான் எனது கமெராவிலே பதிவு செய்தது தான். அத்துடன் வேறு பல படங்களையும் அந்த இடத்திலே பதிவாக்கியிருக்கிறேன். அவை என்னாலேயே பதிவுசெய்யப்பட்டன என்பதை, நிரூபிக்க முடியும். அந்தப் படங்கள் இரண்டும், போர் நடந்துகொண்டிருந்தபோது என்னாலே பதிவாக்கப்பட்டு, சமகாலத்தில் ‘வெளியிலே’ சென்றவையாகும். 

இது உடனடியான எனது எதிர்வினையாகும். இன்னமும் சொல்ல வேண்டிய விடயங்கள் உள்ளன. என்னை முன்வைத்து, விசமிகள் சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற நாசகார நடவடிக்கைகள் பற்றி மேலும் விரிவாகப் பேச முடியும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைகளைத் தொடரவேண்டியிருக்கிறது. வீண் சலசலப்புகளுக்குள் என்னை வலிந்து செலுத்திக்கொண்டிருக்க முடியாது. அவசியமான சந்தர்ப்பங்களிலே, எனக்கு எதிரான அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் உரிய முறையில் எதிர்கொள்வேன். மறைந்திருந்து என்மீது குற்றம் சாட்டுபவர்கள், தம்மைத் துல்லியமாக இனங்காட்டிய பின்னர் தம்மிடமிருப்பதாகச் சொல்லும் ஆதாரங்களுடன் என்னைச் சந்திக்க முன்வந்தால், அவர்களைச் மூன்றாம் தரப்புச் சாட்சியாளர்கள் முன்னிலையில் சந்தித்துப் பேசத் தயாராகவே இருக்கிறேன்.

எனது நடவடிக்கைகள் அனைத்துமே அறிவுபூர்வமானவை, நிதானமானவை, போரிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்குச் சார்பானவை. யாரையும் கொச்சைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டவையல்ல. அனைத்து விதமான நெருக்கடிகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஓர்மத்தையும் அறத்தின் திமிரையும் உண்மையின் பலத்தையும் கொண்டிருக்கிறேன். என்னைப் புரிந்துகொள்ளவும் எனக்கு ஆதரவளிக்கவும் தமிழ்ச்சமூகம் முன்வர வேண்டும். 

குறிப்பு : மேலே பயன்படுத்தப்பட்டுள்ள எனது ‘தன்னுருவ’ ஒளிப்படமானது, போர்க்காலத்தில் எனது பிரதான கமெராவினால் உருவாக்கப்பட்டது (2009-02-23). இதுவரை வேறெங்கும் நானாக வெளியிடாதது. இத்துடன் சேர்த்து,  அன்றைய நாளிலே பல ஒளிப்படங்கள் என்னாலே உருவாக்கப்பட்டன. அவையெல்லாம் ‘கோர்வையாக’ என்னிடமுள்ளன. கைகூப்பி அழுதுகொண்டிருக்கும் ஒரு தாயின் ஒளிப்படமும் அவற்றிலே அடங்கும்.

அமரதாஸ்
2019-11-23