ஓவியர் மாற்கு – எளிமையில் ஆழம் தேடிய கலை இயக்கம்
ஈழத்தின் மிக முக்கியமான ஓவியராக அறியப்படுகிற திரு. அ. மாற்கு, உலகளாவிய தமிழ்ச்சூழலின் முக்கியமான ஓவியர்கள் வரிசையில் இடம்பெறக் கூடியவர். 1933-06-29 அன்று பிறந்தவர். ஓவியராக மட்டுமல்லாமல் ஓவிய ஆசிரியராகவும் சிற்பியாகவும் இருந்திருக்கிறார். அவரிடம் ஓவிய மாணவர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அவரிடம் ஓவியம் பயின்ற சிலர், பிற்காலத்தில் ஓவியக்கலையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறார்கள்.
கலை இலக்கியம் சார்ந்த தேடல் மிகுந்திருந்த என் பதின்பருவ காலத்தில், யாழ்ப்பாணத்தின் குருநகர்ப் பகுதியில் இருந்த ஓவியர் மாற்குவின் நேரடித் தொடர்பு எனக்குச் சாத்தியமானது. மாற்குவுடனும் அவரது படைப்புகளுடனும் மிக நீண்ட கால நெருக்கம் கொண்டிருந்த திரு. அ. யேசுராசா, மாற்குவை எனக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். தனித்துவம் கொண்ட ஓவியங்களாலும் சிற்பங்களாலும் நிறைந்திருக்கும் மாற்குவின் வீட்டிற்கு, அடிக்கடி நான் செல்வதுண்டு. அவருடன் இருந்து ஓவியங்கள் வரைந்த பெறுமதியான அனுபவங்கள் மறக்கவே முடியாதவை. ஓவியக்கலை சார்ந்து, நல்லதொரு வழிகாட்டியாக அவர் இருந்திருக்கிறார். அவரது சிற்ப மற்றும் ஓவிய இயக்கத்தை அருகிலேயே இருந்து அவதானிக்க முடிந்திருக்கிறது. பல்வேறு சாதனங்களையும் பயன்படுத்தி, ஓவியங்களைத் தொடர்ந்து வரைவதற்கான ஊக்கத்தை எனக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.
ஒரு ஓவியத்தையோ அல்லது சிற்பத்தையோ உருவாக்குவதற்கு, அவற்றுக்கெனவே தயாரிக்கப்பட்ட சாதனங்களை மட்டும் அவர் நம்பியிருப்பதில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடிகள் நிலவிய போர்க்காலத்தில், எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருக்கும் சாதாரணமான பொருட்களை வைத்துக்கொண்டு படைப்புச்செயலில் இறங்கிவிடுவார். கரித்துண்டைக் கொண்டோ சாதாரண பென்சிலைக் கொண்டோ ஒரு வியத்தகு ஓவியத்தை விரைந்து உருவாக்கக் கூடியவர். அவரது கோடுகள் எளிமையானவை, தனித்துவமானவை, புதுமையான தொனியில் அசைவியக்கத்தை நிகழ்த்தக்கூடியவை. கழிவுப் பொருட்களாக நாம் வீசிவிடக்கூடிய ‘பிளாஸ்டிக்’ பொருட்களிலும் தகர டப்பாக்களிலும் சிறிய அளவிலான சிற்பங்களை அவர் உருவாக்கியிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ‘மினிமலிசம்’ என்ற சொல்லானது, பரவலான புழக்கத்தில் இப்போது இருக்கிறது. மாற்கு வைப் பொறுத்தவரையில், மினிமலிசக் கலைஞராகவே தன் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். பல்வேறு நெருக்கடிகளும் தட்டுப்பாடுகளும் மலிந்திருந்த போர்க்காலமும் புத்தாக்க மனநிலையும் அதற்குக் காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.
மாணவர்களின் அருகாமை அமையும் போதெல்லாம் சலிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்தார். ஓவிய மற்றும் சிற்பக் கலைச் செயற்பாடுகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, அவரது சுயாதீனப் படைப்பியக்கத்திற்குத் தடையாக இருக்கவில்லை. எது எப்படியிருந்தாலும், சமூக அக்கறை கொண்ட கலைஞராக இயங்கிய அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய ‘ஊடக வெளிச்சம்’ மற்றும் ‘சமூக வரவேற்பு’ போதிய அளவு கிடைக்கவில்லை. ஓவியம் மற்றும் சிற்பம் போன்ற கலைகள் தொடர்பிலான அக்கறைகள் அரிதாகவே இருந்த சமூகச் சூழ்நிலைகளில், மாற்கு என்னும் கலைஞரின் வீச்சான இயக்கம் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் (2019 பெப்ரவரி) மறைந்த கருணா, மாற்குவின் குறிப்பிடத்தகுந்த மாணவர்களுள் ஒருவர். அவரும் நானும் வெவ்வேறு காலங்களில் மாற்குவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறோம். மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், வன்னிக்குச் சென்று பல்வேறு அவலங்களைச் சந்தித்துகொண்டிருந்த மாற்கு, கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருந்த கருணாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக்காலத்திலே பயன்பாட்டிலிருந்த ‘ஏரோகிராம்’ எனப்படும் கடித உறையில், ஒரு ஓவியத்தாலும் சில வரிகளாலும் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது அந்தக் கடிதம். இடம்பெயர்ந்த நிலையிலே மரமொன்றின் கீழே இருக்கும் ஒரு குடும்பத்தினரோடு ஒரு நாயும் கூட இருப்பது போன்ற காட்சியை வரைந்து, ‘எங்கட ஊரில் எங்கட நாய்க்கும் ஒரு வீடிருந்தது’ என்று எழுதியிருந்தார் மாற்கு.
நெருக்கடியான போர்க்காலத்திலே முதுமையும் நோயும் கண்டிருந்த அவர், 2000-09-26 அன்று மன்னாரிலே சாவடைந்தார். அவரை அறிந்திருந்த பலரும், அவரது சாவை அறிந்திருக்கவில்லை அப்போது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரனின் பிரத்தியேக ஒழுங்கமைப்பிலே சில போராளிகளுக்கு ஓவியப் பயிற்சிகளை வழங்கியவர் மாற்கு. அதுமட்டுமல்லாமல், பிரபாகரனின் மூத்த மகனுக்கும் ஓவியப் பயிற்சிகளை வழங்கியவர். அக்காலத்தில், மாற்குவைத் தனிப்பட்ட முறையிலே பிரபாகரன் சந்தித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் இருந்த திரு.கிட்டு, ஓவியங்கள் வரைவதற்கான சாதனங்கள் சிலவற்றை யாழ்ப்பாணத்தில் இருந்த மாற்குவிற்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில், ஓவிய ஆசிரியராக மாற்கு இருந்த காலத்திலே மாணவராக இருந்தவர் கிட்டு. பிற்காலத்தில், ஐரோப்பாவிலே கிட்டு இருந்தபோது ஓவியராகவும் இருந்தார்.
பல்வேறு அச்சாக்க வெளியீடுகளில் மாற்குவின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. அவரின் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் சிலரின் தனிப்பட்ட சேகரிப்பில், அவரது படைப்புகள் பாதுகாப்பாக இருக்கக்கூடும். அவையெல்லாம் உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவரது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளிக்கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். மாற்குவைக் கௌரவிக்கும் வகையிலும், மாற்கு உட்பட வேறு சில கலைஞர்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், ‘தேடலும் படைப்புலகமும்’ என்ற பெயரிலே 1987 ஆம் ஆண்டிலே ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறைக் கலாமன்ற மண்டபத்திலே 2014-03-30 அன்று மாற்குவின் ஓவியக்காட்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2019-09-19
அமரதாஸ்