துயராடு காதை

இலங்கையின் உள்நாட்டுப் போர், 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதி தீவிரமடைந்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் தமிழ் மக்களைத் திணித்து, அவலங்களை விதைத்துக்கொண்டிருந்தது போர் மிருகம். உணவின்றி, காயங்களுக்கு மருந்துகளின்றி, உறவினரையும் சொத்துகளையும் இழந்தலைந்த அப்பாவி மக்கள், சிறீலங்கா அரச படையினரின் கனரக ஆயுதங்களாலே கொல்லப்படுவது வாடிக்கையாகியிருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு அணியினரது ‘பிடியில்’ இருந்து சறுக்கிய பதின்மத்தினர், கூடாரங்களிலும் பதுங்கு குழிகளிலும் பீதியுடன் முடங்கிக் கிடந்தனர்.

2009 ஏப்ரல் இறுதிப் பகுதியில், என் தற்காலிகக் கூடாரமும் எனது நெருங்கிய உறவினர் தங்கியிருந்த கூடாரமும் முள்ளிவாய்க்கால் பகுதியிலே அடுத்தடுத்து நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன.

2009 ஏப்ரல் 29 ஆம் நாள். அன்றைய பகல், ஒரு பெரிய அரூப விசப் பாம்பாய் என் கூடாரத்தினை ஊடறுத்து  சீறிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே காயப்பட்டிருந்த காலில் வீக்கம் கூடியிருந்தது. உடலெங்கும் மனம் முழுதும் பெரு வலி… முன்னைய இரண்டு தினங்களிலே தெருவெங்கும் நான் திரிந்து உருவாக்கிய ஒளிப்படங்களை, வலி பெருகும் அன்றைய நாளின் மாலையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். திக்குத்தெரியாமல், இடம்பெயர்ந்து அலைந்துகொண்டிருந்தனர் அப்பாவி மக்கள். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் யுத்தத்தின் சத்தங்கள்… 

திடீரென, என் கூடாரத்தின் அருகிலே விழுந்த எறிகணையின் வெடிப்பில் உடல் அதிர்ந்தது. எத்தனையோ தடவைகள் மயிரிழையிலே உயிர் பிழைத்திருந்த நான், இன்னொரு முறையாக அப்போது உயிர் பிழைத்திருப்பதை உணர்ந்தேன். செவிப்பறைகள் இரைந்து வலித்தன. தொலைவிலிருந்து கேட்பது போலிருந்த மரண ஓலம், அருகிலிருந்த உறவினரின் கூடாரத்துள்ளிருந்து எழுவதை அறிந்தேன். வலையர்மடத்தடியில் இருந்தபோது ஏற்கெனவே படுகாயப்பட்டிந்த என் மூத்த அண்ணன், அப்போது என்னருகில் நிலைகுலைந்துபோயிருந்தார். மரண ஓலம் மேற்கிளம்பிய கூடாரத்தினுள்ளே, எனது நெருங்கிய உறவினர்களில் ஒருவர் (மைத்துனன்) கொல்லப்பட்டிருந்தார். வேகமாக நகர முடியாதிருந்தது. எனினும், என்னை என் கமெரா இயக்கியது. என் கமெராவினுள்ளே படிந்துகொண்டிருந்தது, பேரவலத்தின் தீரா நிழல்.

கொல்லப்பட்டிருந்த மகனின் உடலைக் கட்டியணைத்து ஓலமிட்டுக்கொண்டேயிருந்த அப்பாவையும், இன்னொரு கொடிய நாளிலே இழந்துவிடப்போகிறோமென்று சுற்றியிருந்து துயராடிய மற்றைய உறவினர் அறிந்திருக்கவில்லை அப்போது. (அவரும் எனது மூத்த சகோதரனும் சகோதரனின் மூத்த மகனும் பிறிதொரு நாளின் எறிகணைத் தாக்குதலிலே கொல்லப்பட்டனர்.)  

  – அமரதாஸ்
2020-04-29

2009 ஏப்ரல் 29 அன்று மாலை, என்னால் உருவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. எறிகணைத் தாக்குதலிலே கொல்லப்பட்டிருப்பவர் எனது மைத்துனன். இரண்டு கரைகளிலுமிருந்து துயராடும் பெண்களில் ஒருவர், அவரது (மைத்துனன்) அம்மா. பின்னாலிருப்பவர், கொல்லப்பட்டிருப்பவரின் சகோதரன். கொடிய போரில் இருந்து தப்பிப் பிழைத்து, இப்பொழுதும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஒளிப்படம், ‘SRI LANKA’S SECRETS : HOW THE RAJAPAKSA REGIME GETS AWAY WITH MURDER’ என்ற நூலில் (Trevor Grant எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. – அமரதாஸ்

2009 ஏப்ரல் 29 ஆம் நாளில், எறிகணை விழுந்த இடம் இது.

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து இடப்பெயர்விற்குத் தயாராகும் நிலையில், 2008 மே மாத காலத்திலே இந்த ஒளிப்படத்தினை உருவாக்கியிருந்தேன். கீழே நின்று ஓடுகளை வாங்குபவர் எனது மூத்த சகோதரன். அவரிடம் ஓடுகளைக் கொடுப்பவர் மைத்துனன். கூரையில் இருக்கும் ஏனைய இருவரும் சகோதரனின் பிள்ளைகள். கூரையின் நடுவில் இருப்பவரைத் தவிர ஏனைய மூவரும் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களிலே கொல்லப்பட்டனர். – அமரதாஸ்