வெற்றுப் பாத்திரங்களில் நிறையும் பசி அல்லது வாங்க மறந்த கஞ்சி      

This photograph was made by Amarathaas at Mullivaikkal during the Sri Lankan Civil War.

2009 ஆம் ஆண்டின் மே மாத நடுப்பகுதியிலே முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த இறுதிப்போரானது, ஏப்ரல் மாதத்திலே தீவிரமடைந்திருந்தது. விபரிக்கக் கடினமான அலவங்களையெல்லாம் மக்கள் அனுபவித்துக்கொண்டிருந்த போர்க்காலம் அது. எப்போதும் எதுவும் நிகழக்கூடும் என்ற நிச்சயமற்ற நிலைமை…

கூறுகிய நிலப்பரப்பைச் சூழ்ந்து இறுக்கிய கொடிய போரிடையே, பல மில்லியன் தமிழர்கள் சிறையுண்டிருந்தனர். பாதுகாப்பான உறைவிடங்களில்லை, போர்க்காயங்களுக்கு மருந்தில்லை, பசியெரிந்து புகையும் வயிறுகளுக்குப் போதிய உணவில்லை…  

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுசரணையோடு இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால், கஞ்சி வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பசி பெருகிக் கஞ்சிக்குக் காத்திருந்தவர்கள், சிறீலங்கா அரச படையினரின் கோரமான தாக்குதல்களிலே கொல்லப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன.

This photograph was made by Amarathaas at Mullivaikkal during the Sri Lankan Civil War.

ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஒரு நாள் (2009-04-23), முள்ளிவாய்க்கால் கடற்கரையோர மணற்பரப்பிலே கால்களும் கைத்தடியும் புதையப் புதைய நடந்து ஒளிப்படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். நாவறண்டு வயிறு புகைந்துகொண்டிருந்தது. கடற்கரையோரமாக ஓரிடத்திலே கஞ்சிக்கென வரிசைகட்டியிருந்த மக்களை நோக்கி நடந்தேன். அவர்களது கைகளில் இருந்த வெற்றுப் பாத்திரங்களில் நிறைந்துகொண்டிருந்தது பசி. அங்கு ஒளிப்படங்களை உருவாக்கிக்கொண்டிருந்த என்னை, ஒருவித வெறுப்புணர்வுடன் விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் சிலர்.

கஞ்சி வாங்கிய பலரும் கலைந்து போயினர். வரிசையிலே கால்கடுக்க நின்று கொஞ்சமாய் வாங்கிய கஞ்சியைப் பக்குவமாய் எடுத்துச்சென்று தன் பிள்ளைக்குப் பருக்கிய தந்தையைப் போலவே நானும் அப்போது பசித்திருந்தேன்.

This photograph was made by Amarathaas at Mullivaikkal during the Sri Lankan Civil War.

கஞ்சிக்குக் காத்திருந்தோரை ஒளிப்படமாக்கும் உத்வேகத்தில், கஞ்சி வாங்க மறந்திருந்திருந்தேன் அன்று. அதை இன்று தான் உணர்கிறேன். அன்று நான் வாங்க மறந்த கஞ்சி, யாருடைய நெருப்பையாவது அணைத்திருக்கக்கூடும்.

அமரதாஸ்
2020-05-14    

This photograph was made by Amarathaas at Mullivaikkal during the Sri Lankan Civil War.

2009-04-23 அன்று முற்பகல், என்னால் உருவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. இந்த ஒளிப்படம், ‘SRI LANKA’S SECRETS : HOW THE RAJAPAKSA REGIME GETS AWAY WITH MURDER’ என்ற நூலில் (Trevor Grant எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. – அமரதாஸ் 