அம்பலமாகும் ரகசியங்கள் – Official Secrets திரைப்படம் குறித்து…


அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஈராக் நாட்டில் முன்னெடுத்த மோசடியான போரை அல்லது போர்க்குற்றத்தை அம்பலப்படுத்திய ஒரு பிரித்தானியப் பெண்ணின் கதையினைத் திரையில் நிகழ்த்துகிறது ‘Official Secrets’ திரைப்படம்.

பிரித்தானிய அரசுத் தகவல் தொடர்புத் தலைமையகத்திலே (GCHQ – Government Communications Headquarters) பணியாற்றிய Katharine Gun என்பவர், ஈராக் மீதான முறைகேடான போருக்கான முன்னெடுப்பை அம்பலப்படுத்தும் நோக்கில் ரகசிய ஆவணத்தைக் கசியவிட்டார். அது, The Observer என்ற ஊடகத்தில் வெளிவரக் காரணமாக இருந்தார். இத்தகைய உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையானது, ‘The Spy Who Tried to Stop a War : Katharine Gun and the Secret Plot to Sanction the Iraq Invasion’ என்னும் நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.    

சிறந்த நடிப்பில் என்னைக் கவர்ந்தவர் Monica Bellucci. அவரது சாயலில் இருக்கும் Keira Knightley, என்னைக் கவர்ந்த இன்னொரு நடிகை. Official Secrets திரைப்படத்தின் மையப்பாத்திரமாக Keira Knightley நடித்திருக்கிறார். பாத்திரவார்ப்புக்கேற்ற அவரது நுட்பமான நடிப்பு, இத் திரைப்படத்தின் பெரும் பலமாகும். Gavin Hood என்பவரால் இயக்கப்பட்டு, 2019 இல் வெளிவந்திருக்கிறது.

அண்மைக்காலத்தில் வெளியான, சிறந்த போர் எதிர்ப்புத் திரைப்படங்களில் ஒன்றாக இதைச் சொல்ல முடியும். அதிக உரையாடல்களைக் கொண்டிருக்கும் திரைப்படம் இது. உரையாடல்களைச் சார்ந்திருக்கக்கூடிய கதைக்களம் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆழமான அரசியலை நுட்பமாகக் கட்டவிழ்க்கும் வகையிலான வசனங்கள், இத் திரைப்படத்தின் இயல்பிற்கு அவசியமானவையே. தவிர, எளிமையான காட்சியமைப்புகளும் இடையிடையே இணைக்கப்பட்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஆவணக்காட்சித் துண்டுகளும்’ இசைக்கோர்ப்பும் இத் திரைப்படத்தை வலுப்படுத்துகின்றன.

போருக்கு எதிரான தனது ரகசியச் செயலைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளப்போவதாகத் தன் கணவனுடன் Katharine Gun உரையாடும் நெகிழ்ச்சியான இடமும், விசாரணை அதிகாரியின் முன் அச் செயலைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் இடமும் இத் திரைப்படத்தின் அரிய தருணங்கள். இப்படியான வேறு சில அரிய தருணங்களையும் சுட்டிக்காட்ட முடியும். 
 

Katharine Gun விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலையாகி வெளிவரும் சமயத்தில், ‘இத்தகைய செயலை மீண்டும் செய்வீர்களா?’ (”Would you do it again?”) என்று சூழ்ந்திருக்கும் ஊடகர்கள் மத்தியிலிருந்து ஒருவர் கேட்பார். அதன் பின்னர், ‘எனக்கு எந்த வருத்தமும் இல்லை, இத்தகைய செயலை மீண்டும் செய்வேன்’ (”I have no regrets. Yes, and I would do it again, yes.”) என்று Katharine Gun உறுதிபடச் சொல்வார். இது, Katharine Gun தோன்றும் ஆவணக்காட்சி (Keira Knightley நடித்ததல்ல). உலக சினமாவில், இத்தகைய மிடுக்கான காட்சிகளை அரிதாகவே காணமுடியும். Katharine Gun என்னும் ஒரு தீர்க்கமான பெண்ணை, அவளின் நிஜ முகத்தை இத் திரைப்படத்திலே தரிசிக்க முடிந்தது.
 
     
உண்மை சார்ந்து மக்கள் நலன் சார்ந்து செயற்படும் வல்லமையாளர்களுக்கு ஊடகத்துறையும் சட்டத்துறையும் எப்படியெல்லாம் உதவமுடியும் என்பதையும், வல்லரசுகளின் உதிரிகளாக இயங்கும் கூட்டுக்களவாணிகளின் மோசமான போர்க்குற்றங்களை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியும் என்பதையும் திரைக்கதையின் போக்கிலே புரிந்துகொள்ள முடியும்.
 
இலங்கையிலும் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் பின்னணியில், இத்தகைய நேர்த்தியானதொரு தமிழ்த் திரைப்படம் இதுவரை சாத்தியமாகவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான்.
 
2020-10-23
அமரதாஸ்