இனிய நினைவுகளில் நிறைந்த கனகரத்தினம்
ஓய்வு நிலை அதிபரும் என் பால்யகால ஆசிரியருமான அ. கனகரத்தினம் அவர்களுக்கு இன்று எண்பதாவது பிறந்த நாள். அவருக்கு எனது காதலின் வாழ்த்து… என்னுள்ளே என்றும் செழித்திருக்கின்றன, அவர் சார்ந்த நினைவுகளும் அவர் மீதான தீராக் காதலும்… நேசத்துக்குரியவர்களையும் வழிகாட்டிகளையும் சாதனையாளர்களையும் வாழும்போதே வாழ்த்துவதும் கவனப்படுத்துவதும் அவசியமாகும்.
நான் சிறுவனாக இருந்து கல்வி கற்றுக்கொண்டிருந்த பாடசாலைக்கு ஆசிரியராக வந்த கனகரத்தினம் அவர்கள், நற்குணங்களாலும் நற்செயல்களாலும் அன்பினாலும் என் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். அன்று ஏற்பட்ட ‘அன்புறவு’ இன்று வரை நீடிக்கிறது. என் மீது, பிரத்தியேகமான அன்பும் அக்கறையும் கொண்டிருப்பவர் அவர். வெள்ளை மேலாடையும் ஓலைத்தொப்பியும் அணிந்துகொண்டு, சைக்கிள் ஒன்றை உன்னி உழக்கியபடி எதிர்க்காற்றிலே அவர் பிரயாணிப்பதை அடிக்கடி பார்க்க நேர்ந்திருக்கிறது. அவரது வாழ்வியலின் குறியீடாக, ‘அக் காட்சி’ என்னிற் பதிந்திருக்கிறது.
இலங்கை உள்நாட்டுப் போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வன்னியின் வெவ்வேறு இடங்களிலே கல்வியியல் சார் பணிகளைப் பொறுப்புணர்வோடும் சமூக அக்கறையுடனும் மனிதாபிமானத்துடனும் தொடர்ந்தவர்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில், கிளி/ பாரதிபுரம் வித்தியாலய அதிபராக இருந்தார். (இன்று, பாரதிபுரம் ம. வி 1 AB தரப் பாடசாலையாக அது விளங்குகிறது.) கடுமையான போர்ச் சூழ்நிலைகள் காரணமாக, அவரது பாடசாலை இடம்பெயர்ந்து அக்கராயன் ஆரோக்கியபுரம் பகுதியில் (8 ஆம் கட்டை) அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அதிபராக இருந்த கனகரத்தினம் அவர்கள், வகுப்பறையிலே ஒரு நாள் சோர்வாக இருந்த இரண்டு மாணவர்களை அழைத்து உரையாடியிருக்கிறார். அவர்களுக்குப் பசி யும் வயிற்றுவலியும் இருந்ததை அறிந்திருக்கிறார். காலை உணவின்றிப் பாடசாலைக்கு அவர்கள் வந்திருப்பதையும், வேறு பல மாணவர்கள் காலை உணவின்றிப் பாடசாலைக்கு வருவது வழக்கமாக இருப்பதையும் விசாரித்து அறிந்திருக்கிறார். ஸ்கந்தபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து இயங்கிக்கொண்டிருந்த மாவட்டச் செயலகத்திற்கு உடனடியாகச் சென்று, தனது பாடசாலையிலே தொடரும் அவல நிலையினை அப்போது அரச அதிபராக இருந்த தி. இராசநாயகம் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். தொடரும் அவல நிலையினை நிவர்த்தி செய்து, மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டியிருப்பது குறித்து உரையாடியுள்ளார். ஒரு மூடை அரிசியும் சீனியும் மாணவர்களுக்காகப் பெற்றுக்கொண்டு, பாடசாலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். போரினால் இடம்பெயர்ந்து வறுமையில் வாடிய சிறுவர்கள் பயன்பெறும் வகையிலே ‘இலைக்கஞ்சி சத்துணவுத் திட்டம்’ கனகரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், அரச அதிபர் தலைமையிலான மாவட்ட அத்தியாவசிய சேவைக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினதும் ‘கியூடெக்’ நிறுவனத்தினதும் உதவியுடன், கிளிநொச்சி கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘இலைக்கஞ்சி சத்துணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. அதற்கு ‘யுனிசெப்’ நிறுவனம் அனுசரணை வழங்கியது. அப்போது, கிளிநொச்சி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்த ம. பத்மநாதன் அவர்களது நேரடியான பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அவரே, இறுதிப் போர்க்காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பு நிலையில் இருந்தவர். அவருடன், திரு. கனகரத்தினம் பற்றியும் வேறு சில விடயங்கள் பற்றியும் இன்று காலை உரையாட முடிந்தது. போர்க்காலத்தில், வன்னியிலே நடைபெற்ற எனது கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வில் அவர் கலந்துகொண்டதை மறக்காமலிருக்கிறார்.
நீண்டகாலத்திற்குப் பின்னர், கனகரத்தினம் அவர்களின் எண்பதாவது பிறந்த தினமாகிய இன்று, வாழ்த்துச் சொல்லி அவருடன் தொலைவிலிருந்து உரையாட முடிந்தது. எனது பாடசாலைக் கால ஆசிரியர்களில், இனிய நினைவுகளுடன் இன்னமும் தொடர்பில் இருப்பவர் அவர்.
ஒரு வருடத்தின் மாதங்கள் முடிவடையும் திகதிகளை நினைவில் வைத்திருக்க வசதியாக, ‘செய்யுள்’ அல்லது பாடல் ஒன்றினை நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார். அதனை இன்று வரை நினைவில் வைத்திருக்கிறேன். எந்த மாதம் எந்தத் திகதியில் முடிவடையும் என்பதை, அப் பாடலின் அடிப்படையிலே எப்போதும் உடனடியாகச் சொல்லிவிட என்னால் முடிகிறது. அப் பாடலை நான் பலருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இன்று அவருடன் உரையாடுகையில், அப் பாடலை அவருக்குச் சொன்ன போது மகிழ்ச்சியடைந்தார். இன்று மீளவும் அவரைப் பாடவைத்துக் கேட்டேன். பால்ய காலத்துக்குத் திரும்பிய இனிய நிகழ்வு…
சித்திரை ஆனி
சேர் புரட்டாதி
உத்தம கார்த்திகை
ஓர் முப்பதாகும்
நத்திய மாசி
நாலேழாகும்
மற்றன மற்றைய
முப்பத்தொன்றே
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ‘லீப்’ வருடம் கணக்கிடப்படுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடத்தின் மாசி மாதங்களும் 28 ஆம் நாளில் முடிவடைவதாகக் கணக்கிடப்படுகிறது. ‘லீப்’ வருடத்தின் மாசி மாதத்துடன் ஒரு நாள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டு, 29 ஆம் நாளில் முடிவதாகக் கணக்கிடப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் (2020), ‘லீப்’ வருடமாகும்.
சந்தத்துடன் கூடிய இந்தப் பாடலை நான் விதவிதமாகப் பாடிப் பார்த்திருக்கிறேன். ‘மோனை’ வகைப்பட்ட ‘சந்தம்’ உள்ளார்ந்து இருப்பதால், இசையுடன் பாடவும் பாடமாக்கி நினைவில் வைத்திருக்கவும் இலகுவாக அமைந்திருக்கிறது.
‘முதலெழுத்தொன்றுதல்
மோனை ஆகும்.
இரண்டாம் எழுத்தொன்றுதல்
எதுகை ஆகும்.’
இத் தொடரை எனக்குச் சொல்லித் தந்தவர், பண்டிதர் பரந்தாமன் அவர்கள். ‘மரபுக் கவிதை’ சார்ந்த யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகியவற்றை எனக்குப் பிரத்தியேகமாகக் கற்பித்த அவர், பண்டிதர் கந்தமுருகேசனார் அவர்களின் கடைசி மாணவர். என்னைத் தனது கடைசி மாணவன் என்று சொல்லுவார். அவரைப் பற்றியும் பின்னர் விரிவாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
2020-11-25
அமரதாஸ்