போர்க்காலத்தின் நிச்சயமற்ற வழிகளிலே குழந்தைகளைச் சுமந்தலையும் சனங்கள்

போர்க்காலத்தின் நிச்சயமற்ற வழிகளிலே, கொல்லப்பட்ட குழந்தைகளைச் சுமந்துகொண்டு நடைப் பிணங்களாய் அலையும் சனங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் இரவு, மோசமான எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலே காப்பிடம் தேடி உறவினர்களுடன் விரைந்துகொண்டிருந்தேன். எங்கும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர் மக்கள். மிக மிக அருகிலேயே சிறீலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் இருந்தது. அந்தப் பக்கமாய் விரைந்துகொண்டிருந்த மக்களை, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் வழிமறித்து வேறு திசையில் அனுப்பிக்கொண்டிருந்தனர். (ஏற்கெனவே எனக்குத் தெரிந்த ஒருவரும் அங்கிருந்தார். போர் முடியும் போது, அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்.) குண்டுச் சத்தங்களும் அவலக் குரல்களும் இருட்டை ஊடறுத்துக்கொண்டிருந்தன.

குண்டுகள் வெடிக்கும் போதும் அவ்வப்போது தோன்றி மறையும் வாகனங்களின் ஒளியிலும், நிகழ்ந்துகொண்டிருக்கும் அனர்த்தங்களை ஓரளவே பார்க்க முடிந்தது.இரவின் நெருக்கடியில் ஒளிப்படங்களை உருவாக்க முடியவில்லை. சன நெரிசலுக்கு மத்தியில், என்னைக் கடந்து ஒருவர் வேகமாய் நடந்துகொண்டிருந்தார். துணியொன்றிலே சுற்றித் தோளிலே அவர் சாய்த்திருந்த குழந்தையின் தலையும் கைகளும் தள்ளாடிக்கொண்டிருந்தன. ‘அண்ண… குழந்தை கவனம்’ என்று அவரிடம் சொன்னேன். ‘முடிஞ்சுது’ என்று தழுதழுக்கும் குரலைக் காற்றில் அலைய விட்டு அவர் நடந்துகொண்டேயிருந்தார். அந்தகாரத்தில் அவரைப் பின்தொடர முடியவில்லை. அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் என்னுள்ளே இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

முன்னொரு இரவிலே கண்டதைப் போலொரு காட்சியைப் பின்னொரு பகலில் நான் காண நேர்ந்தது. அத் தருணத்தில், என்னால் அதை ஒளிப்படமாக்க முடிந்திருந்தது.

அத்தகைய ஒளிப்படங்களை, நான் கையாள நேர்கிற அவசியச் சந்தர்ப்பங்களில் மேலெழும் துயரை, இனம்புரியா உணர்வுகளை வார்த்தைகளில் எடுத்துரைக்க முடிவதில்லை. கொடிய போரிலே இறந்த, இறந்துகொண்டிருக்கிற, இறக்கவிருக்கிற குழந்தைகளைத் தோள்களிலும் கைகளிலும் சுமந்து கொண்டு சாரை சாரையாய் இடம்பெயர்ந்து அலையும் ‘நடைப் பிணங்களின்’ சித்திரங்கள், என் இரவுகளின் நித்திரைகளிலே சலனிக்கின்றன.  

ஒளிப்படம் பற்றிய குறிப்பு: 2009 பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில், ஒரு குழந்தையைத் தன் தோளிலே சாய்த்து அணைத்தபடி குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலே பாதுகாப்புத் தேடி இவர் நடந்துகொண்டிருந்தார். அந்தக் கொடும் பகலில், இந்த ஒளிப்படத்தை உருவாக்கினேன். இவரது தோளில் இருக்கும் குழந்தையும் இவரும், மூர்க்கமாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த போரில் இருந்து தப்பிப்பிழைத்திருப்பார்களோ என்னவோ…? இந்த ஒளிப்படமானது, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் உருவாக்கியிருக்கும் இதையொத்த வேறு சில ஒளிப்படங்களை நினைவுபடுத்துகிறது. இதனை, என் புதிய  ஒளிப்பட நூலில் இடம்பெறச் செய்திருக்கிறேன். இது, Trevor Grant உருவாக்கிய SRI LANKA’S SECRETS என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

அமரதாஸ்
2021-05-01