ஊடக உலகில் ஊடாடும் போலிச் செய்திகள்

 
// எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 423) //
 
மானுட அறிவியல் வளர்ச்சியின் விளைவாக அச்சு ஊடகங்கள் தோன்றி வளர்ச்சியடைந்தன. அச்சு ஊடகங்களின் வீச்செல்லையைத் தாண்டி, இலத்திரனியல் ஊடகங்களின் வீச்செல்லையானது தற்காலத்தில் விரிவடைந்திருக்கிறது. ஊடகவியல் சார் சாதனங்களின் பெருக்கத்துடன், ஊடக அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறது. மனித வாழ்வியலில், செய்திகளின் தேவை அவசியமானதாகி இருக்கிறது. இத்தகைய நிலையில், உலகெங்கும் பெருமளவிலான ‘போலிச் செய்திகள்’ (fake news) ஊடாடுகின்றன என்பது ஆபத்தான உண்மையாகும்.
 
முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், ஏற்றத்தாழ்வுகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பிளவுகள் நிறைந்துள்ள சமகால உலகத்தில், போலிச் செய்திகளின் உருவாக்கமும் பரவலாக்கமும் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. எனினும், இத்தகைய விபரீதங்களைப் பல்வேறு நிலைகளில் நாம் பரிசீலிக்கவும் புரிந்துகொள்ளவும் கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த ‘தீர்க்கமான’ முடிவுகளை அல்லது ஆய்வுகளை நோக்கிச் செல்வதற்கு, உண்மையான அல்லது சரியான செய்திகள் அவசியமானவை.
 
ஊடகங்களில் வெளிவருகிற ஒரு செய்திக்கு ‘நம்பகத்தன்மை’ அவசியமானது. ஒரு செய்தியை வெளியிடும் ஊடகமானது, அச் செய்தி தொடர்பான ஆதார வல்லமையினைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஊடகத் துறை சார் நெறிமுறைகளிலும் ஊடக மொழிப் பிரயோகத்திலும் போதிய பரிச்சயம் கொள்ளாமல், ஊடகர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் தற்காலத்திற் பெருகியிருக்கிறார்கள். அத்தகையோரின் அசமந்தக் காரியங்களால், செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி விடுகிறது.
 
பெரும்போக்கு (mainstream) ஊடக நிறுவனங்களின் செய்திகள், சரியாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்க்கை ஆகும். செய்திகள் அனைத்துமே சரிபார்க்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமானது, பெரும்பாலான மக்கள் மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், எல்லா வகையான ஊடகங்களிலும் தனிப்பட்ட வலைப்பின்னல்களிலும் போலிச் செய்திகள் அதிகமதிகம் பரவலாக்கப்பட, மக்களே பெரும்பாலும் காரணமாக இருந்துவிடுகிறார்கள். போலிச் செய்திகள் விடயத்திலே பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவும் அசமந்தப் போக்கு ஆபத்தானது.
 
போலிச் செய்திகளாலும் தவறான தகவல்களாலும் பலவிதமான எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றால், வன்முறைச் சம்பவங்களும் உயிரிழப்புகளும் கூட நிகழ்ந்து விடுகின்றன. தொழில் நுட்ப அறிவியல் நன்மைகளை உள்வாங்கி வளர்ச்சிப் பாதையிலே பயணிக்கக்கூடிய ஊடக உலகமானது, அடிப்படைத் தேவையாக இருக்கும் ஊடக அறநெறிகளையும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும்.

முகநூல், ருவிட்டர், வட்சப், வைபர், யூ ரியூப், டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்கள், போலிச் செய்திகளின் விபரீதமான பரவலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

சமூக ஊடகங்களும் போலிச் செய்திகளும்

அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்று அறியப்படுகிற அனைத்து விதமான ஊடகங்களிலும் போலிச் செய்திகள் ஊடாடுகின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் அவற்றின் ஊடாட்டம் பெருமளவிற் காணப்படுகிறது.

தனி மனிதர்களுக்கு இடையிலான உறவு நிலைகளிலும் சமூக நடவடிக்கைகளிலும்  ஊடகத் தளங்களிலும் சமூக வலைத்தளங்கள் சாதகமான பயன் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இன அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம், வெறுப்பரசியல், போலிச் செய்திகள் போன்றவற்றைத் தமிழ்ச் சுழலில் விதைப்பதற்கான களங்களாகவும் சமூக வலைத்தளங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. போலிச் செய்திகளை உருவாக்கிப் பரப்பவும் தனி நபர்களை ஒன்றிணைத்து அடிப்படைவாதக் குழுக்களாக்கவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.  

பெரும்பாலும், சமூக வலைத்தளங்கள் வழியாகவே ‘போலிச் செய்திகள்’ பரப்பப்படுகின்றன. அவை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். சமூக வலைத்தளங்களிலும் ‘ஊடக அறங்கள்’ கடைப்பிடிக்கப்பட வேண்டியவையே. ஊடகத் துறைகளில் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் சமூக வலைத்தளங்களின் பாவனையாளர்கள் உள்வாங்க வேண்டியிருக்கிறது. அதே நேரம், ஊடக அறங்கள் குறித்த உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியும் இருக்கிறது.
 
எழுத்து வழிச் செய்திகளாக மட்டுமே அல்லாமல், ஒளிப்படங்களாகவும் (photograph) காணொலி நறுக்குகளாகவும் (video) ‘மீம்ஸ்’ வடிவங்களாகவும் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. கடந்தகால அசம்பாவிதம் ஒன்றின் காணொலி நறுக்கு அல்லது ஒளிப்படம், தவறுதலாகவோ திட்டமிடப்பட்டோ அண்மைக்கால அசம்பாவிதம் ஒன்றின் பதிவாகச் சித்தரிக்கப்பட்டு ‘வைரல்’ ஆக்கப்படும் ஆபத்து நிகழக்கூடும்.
 

போலிச் செய்தி என்றால் என்ன?

போலிச் செய்தி எனப்படுவது, உண்மைக்கு மாறான அல்லது திரிபுபடுத்தப்பட்ட தகவலைக் கொண்டிருக்கும் என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
 
தமிழ்ச்சூழலில், மிக நீண்ட காலமாக ‘வதந்தி’ என்னும் வார்த்தைப் பிரயோகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிக அண்மைக் காலத்தில், ‘போலிச் செய்தி’ என்னும் பிரயோகமானது பொதுப் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. ஒத்த தன்மை கொண்ட பிரயோகங்கள் போல அவை தோன்றினாலும், ‘போலிச் செய்தி’ என்னும் பிரயோகத்தினைப் பிரத்தியேகமான அர்த்த பரிமாணத்துடன் பிரயோகிக்க முடியும்.
 
ஒருவரை அல்லது பலரை ஏமாற்றுவது, ஒருவரையோ பலரையோ தவறாகப் பயன்படுத்தி சுய லாபம் சம்பாதிப்பது, தனிமனித அவதூறுகளை விதைப்பது, இழிவுபடுத்துவது, இருக்கும் பிரச்சினைகளைத் திசை திருப்புவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது  போன்ற அடிப்படையான உள் நோக்கங்களைப் போலிச் செய்திகள் கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட அல்லது நலிந்த சமூகத்தின் மத்தியில் மேலாதிக்கம் செலுத்த முனையும் ஆதிக்க சிந்தனைகள், சமூக சமத்துவமின்மை, போலித் தரவுகள், பொருளாதார லாப நோக்கம், அரசியல் அதிகார நோக்கம், சமூக விரோதச் சிந்தனைகள், ஜனநாயக விரோதப் போக்கு, காழ்ப்புணர்வு, துதிபாடல், அடிப்படைவாத நிலைப்பாடுகள், வெறுப்பரசியல், பிறழ்வு உளவியல், மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு அடிப்படைகளில் இருந்து போலிச் செய்திகள் கட்டமைக்கப்படுகின்றன. 
 
சமூகக் குழுக்கள், மத நிறுவனங்கள், அரசியற் கட்சிகள், இயக்கங்கள், விடுதலைப் போராட்ட அமைப்புகள், அரசுகள் போன்ற எல்லா மட்டங்களிலும், போலிச் செய்திகளின் உருவாக்கமும் பரவலாக்கமும் நிகழக்கூடும்.
 
போலிச் செய்திகள் எப்படி உருவாகின்றன?
 
போலிச் செய்திகளின் உருவாக்கம் மற்றும் பரவலாக்கம் போன்றவற்றுக்குப் பல்வேறு காரணிகள் இனங்காணப்படலாம். உளவியல் மற்றும் சமூகவியற் காரணிகள் முக்கியமாகவும் ஆழமாகவும் ஆராயப்பட வேண்டியவை.
 
ஒரு செய்தியானது, மொழிபெயர்ப்பு செய்யப்படுகையிலோ மீள் உருவாக்கம் செய்யப்படுகையிலோ திரிபுபட வாய்ப்பிருக்கிறது. அத்தகைய திரிபுபடல்கள் போலிச் செய்திகளுக்குக் காரணங்களாக இருக்கலாம். ஒரு தரப்பின் செய்தி, இன்னொரு தரப்பினால் திட்டமிட்டுத் திரிபுபடுத்தப்படுவதாலும் விபரீதமான போலிச் செய்திகள் விளைகின்றன.

தவறான அனுமானங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருவதும் தவறான அனுமானங்களை ஊடக வெளிகளிற் பகிர்வதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தீய விளைவுகளின் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய அதிகாரம் மிக்க தரப்புகள், தமக்குச் சாதகமாகத் தொழிற்படக்கூடிய போலிச் செய்திகளைப் புதிதாக உருவாக்கிப் பரப்புகின்றன. அத்தகைய தரப்புகள், தமக்கெதிராக வினையாற்றக்கூடிய செய்திகளின் பரவலாக்கத்தைத் திசைதிருப்பும் நோக்கிலே புதிய புதிய போலிச் செய்திகளை உருவாக்கிப் பரப்புகின்றன. 

நிறுவனங்கள் பலவும், தமக்குச் சார்பான கருத்துகளை மக்கள் மனதிலே பதியவைக்க, போலிச் செய்திகளை விதவிதமாக உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான போலிச் செய்திகள், மோசமான உள்நோக்கங்களால் உருவாக்கப்படுகின்றன.

அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் பிரதிநிதிகள் சார்ந்தும் பெரும்பாலான போலிச் செய்திகள் உருவாகின்றன. அதீதமாகப் போற்றப்படுகிற அல்லது அதீதமாக இகழப்படுகிற விடயங்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வதே நல்லது. எப்போதும் எதையும் பரிசீலனை செய்யக்கூடிய மனப் பக்குவத்தினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதீத நம்பிக்கைகள் மற்றும் அதீத விசுவாசம் போன்றவை எப்போதுமே ஆபத்தானவை.

போலிச் செய்திகளின் பெருக்கத்திற்கான முக்கிய உந்து சக்திகளில் ஒன்றாகத் ‘தேசிய அடிப்படைவாதம்’ அமைந்திருக்கிறது. மத அடிப்படைவாதம், இன அடிப்படைவாதம் போன்றவற்றின் பெயராலும் போலிச் செய்திகள் அதிகமாகப் பரவுவதை அவதானிக்க முடியும். உண்மைத் தன்மையை அறிய முற்படாமல், தேசிய அடிப்படைவாதம் சார்ந்த போலிச் செய்திகளைப் பரப்புகிற செயலைப் பலர் ‘தேசியக் கடமையாக’ நினைக்கிறார்கள். இதற்குள்ளே தொழிற்படுகிற ‘விபரீத உளவியல்’ விரிவாக ஆராயப்படவேண்டியது. தேசியவாதிகளாகவோ போராளிகளாகவோ அரசியல்வாதிகளாகவோ தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் சிலர், தமது ஊழல்களையும் தாம் சார்ந்திருக்கும் அமைப்புகளின் தவறுகளையும் மறைத்து, பிழைப்புவாத நடவடிக்கைகளைத் தொடரும் உள்நோக்கோடு போலிச் செய்திகளைத் தேசியவாதச் சாயம் பூசிப் பரப்பி வருகிறார்கள். அத்தகையவர்கள், உண்மைகளை வெளிப்படுத்த முனைவோர் சார்ந்த போலிச் செய்திகளை இணையத்தளங்களிலும் தனிப்பட்ட வலைப்பின்னல்களிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தமது அடையாள அரசியலுக்குப் பங்கம் வந்துவிடும் என்ற பதற்றம், அத்தகையவர்களிடம் இருந்து வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

போர் மற்றும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிற சந்தர்ப்பங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கிற காலங்களிலும் தொற்று நோய்கள் பரவுகிறபோதும் தேர்தல்கள் நடைபெறும் காலங்களிலும் அரசியற் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றும் சந்தர்ப்பங்களிலும், போலிச் செய்திகள் பரவுவதை அவதானிக்கலாம். இத்தகைய அசம்பாவிதங்கள் சார்ந்த பெரும்பாலான செய்திகள், சம்மந்தப்பட்ட தரப்பினரின் திட்டமிடலில் அல்லது அசமந்தப் போக்கில் விளைந்தவையாக இருக்கும்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் பெருந்தொகையான போலிச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. அவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை.        

ஒரு அண்மைக்கால உதாரணம்

இலங்கையில் நடந்த தொடர் குண்டுத் தாக்குதல் சார்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினாற் தேடப்படும் 6 சந்தேக நபர்களின் ஒளிப்படங்களை, இலங்கையின் காவல் துறையினர் 2019-04-25 அன்று வெளியிட்டிருந்தனர். அந்த ஆறு பேரில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவார்கள்.

ஒளிப்படங்களை வெளியிட்ட பின்னர், காவல் துறை ஊடகப் பிரிவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அப்துல் காதர் பாஃதீமா காதீயா என்ற பெண்ணுடையது எனத் தெரிவிக்கப்பட்ட ஒளிப்படம், அந்தப் பெண்ணுடையது இல்லையென்று அந்த அறிக்கையிற் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, ஒளிப்பட மாறாட்டம்  நிகழ்ந்திருக்கிறது.

மாறிய ஒளிப்படத்தில் இருக்கும் அமாரா மஜீத் என்ற பெண்ணின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண் அமெரிக்காவிற் பிறந்தவர். ஒளிப்பட மாறாட்டம் தொடர்பிலான பதிவொன்றைத் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ளார்.

போலிச் செய்திகளை இனங்காண்பது எப்படி?

போலிச் செய்திகள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாயினும், சாதாரண பொது மக்களைப் பொறுத்தவரையில் அது இலகுவானதாக இருப்பதில்லை. பொய்யிலே கொஞ்சம் உண்மையைக் கலந்துகட்டி உருவாக்கப்படும் போலிச் செய்தியோ, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சொற்பிரயோகங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போலிச் செய்தியோ நம்பகத்தன்மையுடன் தோன்றக்கூடும். அதைச் சரிபார்க்க, மிகுந்த பொறுப்புணர்வும் பக்குவமும் தேவைப்படும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். இந்திய அரசினால், புதிய 2000 ரூபா தாள் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பயன்பாட்டுக்கு வரமுன்னரே, அதில் ‘நானோ சிப்’ இருப்பதாகச் செய்தி பரவியது. செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சமிக்ஞையினைப் பிரதிபலித்து, பணத்தின் இருப்பிடத்தை அந்த ‘சிப்’ காட்டும் என்று அந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அது போலிச் செய்தியாகும். இப்படியான செய்திகளில் இடம்பெறும் தொழில்நுட்பச் சொற்கள், போலியான நம்பகத்தன்மை வழங்கும் வகையிற் பிரயோகிக்கப்படுகின்றன.

ஒரு செய்தியை உருவாக்கியவர் பற்றியும் அது வெளிவருகிற காலத்தின் ஏனைய செய்திகள் பற்றியும் அதன் மூலாதாரத்தையும் அறிந்துகொள்வது அவசியம். ஒரு செய்தி, ஒருதலைப்பட்சமாக இருக்கிறதா என்று ஆராய வேண்டியதும் அவசியமாகும்.

செய்திகளைச் சரிபார்க்க, Snopes.com மற்றும் Factcheck.org போன்ற இணையத்தளங்கள் மற்றும் சில செயலிகள் உதவுவதாகச் சொல்லப்படுகிறது. கூகிள் போன்ற தேடுபொறிகளை, நம்பகத்தன்மை கொண்ட சில இணையதள ஊடகங்களைப் பயன்படுத்திச் செய்திகளைச் சரிபார்க்க முயற்சிக்கலாம்.

போலிச் செய்திகள் எப்படிப் பரவுகின்றன?

தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கத்தின் விளைவாக அன்றாடம் வந்து குவியும் செய்திகளின் மத்தியில், பகுப்பாய்வு செய்து உண்மை அறியும் செயல் முறைகளில் எல்லோராலும் ஈடுபட முடிவதில்லை. செய்திகளை முழுமையாகப் படிக்காமல், தலைப்புகளை மட்டுமே பலர் படித்துவிட்டு சமூக வலைத்தளங்களிற் பகிர்ந்து விடுகிறார்கள். அவை, உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முயல்வதில்லை. குழுக்களாகச் செயற்படுகிறவர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் பகிரும் செய்திகளைப் பெரும்பாலானவர்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள்.
 
ஏற்கெனவே வெளியாகிய உண்மைச் செய்தி ஒன்றின் வினைத்தாக்கங்களை மடைமாற்றும் வகையில், புதிய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. எது சரி எது தவறு என்ற குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் ‘அறிவுச் சோம்பேறிகள்’ பகிர விழைகிறார்கள் அல்லது நம்பி விடுகிறார்கள்.
 
போலிச் செய்திகளின் பரவலாக்கத்தைத் தடுப்பது எப்படி?
 
போலிச் செய்திகளின் பரவலாக்கத்திற்கு, மக்கள் மத்தியில் நிலவும் அறியாமையும் மூட நம்பிக்கைகளும் அச்சமும் விருப்பார்வமும் வெறுப்புணர்வும் முக்கிய காரணங்களாகின்றன. தங்களுக்கு வசதியானதாக, விருப்பத்திற்குரியதாக இருக்கும் செய்திகளை, மனிதர்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள்.
 
போலிச் செய்திகளின் பரவலாக்கத்தைத் தடுத்து அவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு, சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய விழிப்புணர்வு அவசியமானது. ஏதாவது ஒரு வழிமுறையில் நமக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்துவிட்டால், அது யாரால் எதற்காகப் பகிரப்பட்டிருக்கிறது என்று ஆராய வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால், பகிர்ந்தவரிடம் செய்தி மூலத்தைக் கேட்கப் பழக வேண்டும். எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாதிருக்கும் சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புறக்கணித்து விடுவது நல்லது. அச்சமூட்டக்கூடிய, உணர்திறன் மிகுந்த செய்திகள் வேகமாகப் பரவக் கூடியவை. அத்தகைய செய்திகளைப் பார்க்க நேர்ந்தால், அவற்றின் உண்மைத்தன்மையை இயன்றவரை சரிபார்க்க வேண்டும்.
 
சமூக ஊடகங்கள் தடை செய்யப்படுவது, போலிச் செய்திகளின் பரவலாக்கத்தை நிறுத்த உதவுமா?
 
அதிகாரம் மிக்க தரப்பினரால் நெருக்கடியான சில சந்தர்ப்பங்களிற் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படுவதுண்டு. தடை நடவடிக்கையானது, போலிச் செய்திகளின் பெருக்கத்தைக் குறைக்க உதவக் கூடும். ஆனால், உண்மையானதும் அவசியமானதுமான செய்திகள் கூடப் பகிரப்பட முடியாத நெருக்கடி நிலை ஏற்படும்.
 
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கை அரசு சமூக ஊடகங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்தது. வெளிநாடு ஒன்றிலிருந்த இலங்கைத் தூதுவர் ஒருவரிடம் (மனிஷா குணசேகர), ‘இக்கட்டான சூழலில், இலங்கையில் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டது ஏன்?’ என்ற கேள்வி ஒரு ஊடகத்தினால் முன்வைக்கப்பட்டது. ‘பொய்யான செய்திகள் பரவக் கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக அவை தடைசெய்யப்பட்டன.’ என்ற விதமான பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
இத்தகைய தடை நடவடிக்கைகளை, உண்மையான செய்திகளும் பரவி விடக்கூடாது என்பதற்கானதாகவும் இன்னொரு வகையில் விளங்கிக்கொள்ள முடியும். தடை நடவடிக்கைகள், தற்காலிக நன்மைகளை ஏற்படுத்தினாலும் கூட, அவை சனநாயக விரோதப் போக்கைக் கொண்டவையாகவோ தனிமனித உரிமைகளை மீறுவதாகவோ அமைந்துவிடக் கூடியவை. எது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். 
 
போலிச் செய்திகளின் விளைவுகள் எத்தகையவை?
 
போலிச் செய்திகள், உலகளாவிய ரீதியிற் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகின்றன. தனிமனித உளவியலில், சமூக மட்டங்களில் மோசமான விளைவுகளைப் போலிச் செய்திகள் ஏற்படுத்துகின்றன. அவை, மோசமான அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் சமூகக் குழப்பங்களுக்கும் பல்வேறு உயிரிழப்புகளுக்கும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. மூட நம்பிக்கைககள், மோசமான தனிமனித அவதூறுகள், சமூகப் பதற்றங்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை அவை கட்டவிழ்த்து விடுகின்றன.
 
‘வட்சப்’ வழியாகப் பரவிய போலிச் செய்திகளால், இந்திய அளவில் இருபதுக்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் அண்மைக் காலத்தில்  நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
ஒரு அசம்பாவிதம் 
 
‘400 நபர்களைக் கொண்ட, சிறுவர்களைக் கடத்தும் கும்பல் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டினுள் நுழைந்திருக்கிறது. அக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சிறுவர்களைக் கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்பவர்கள்.’ இப்படி ஒரு போலிச் செய்தி, 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் ‘வட்சப்’ வழியாகப் பரவியிருக்கிறது.
 
அந்த நேரத்தில், மலேசியாவில் இருந்த இரண்டு நபர்கள், சென்னையில் வசித்து வந்த ருக்மணி என்ற முதிய பெண் உறவினரிடம் சென்றிருக்கிறார்கள். தமது குலதெய்வக் கோயில் திருவண்ணாமலைப் பகுதியில் இருப்பதாக நம்பி, அதைத் தேடி அந்த முதிய பெண்ணுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். கூடவே வாடகைக்கு எடுத்த வாகனத்தின் சாரதியும் இருந்திருக்கிறார். கோயிலைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்த நால்வரும் வழிமாறி ஒரு கிராமத்தினுள்ளே சென்றிருக்கிறார்கள். ‘சிறுவர் கடத்தல்’ பற்றிய போலிச் செய்தியாற் பாதிக்கப்பட்டிருந்த அந்தக் கிராம மக்கள், அந்த நால்வரையும் மோசமாகத் தாக்கியிருக்கிறார்கள். அந்த மோசமான வன்முறையில், ருக்மணி என்ற முதிய பெண் கொல்லப்பட்டிருக்கிறார்.
 
சிறுவர் கடத்தல் பற்றிப் பரவிய போலிச் செய்திகளின் விளைவாக, வேலை தேடிச் சென்ற பலரும் சுற்றுலா சென்ற சிலரும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிற் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
 
சிறுவர் கடத்தல் பற்றிய போலிச் செய்தியின் தோற்றுவாய்
 
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்ற இரண்டு நபர்களுக்கும் ஒரு கிராம மக்களுக்கும் இடையிலே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் இருந்த ஒருவர், அந்த இருவரைப் பற்றியும் தவறான செய்தியைப் புனைந்து ‘வட்சப்’ வழியாகப் பகிர்ந்திருக்கிறார். சிறுவர் கடத்தும் நபர்கள் இருவர், கிராமத்திலே திரிவதாகவும், அவர்களைக் கண்டதும் கொலை செய்யுமாறும் அந்தச் செய்தி பகைமையுணர்வுடன் புனையப்பட்டிருக்கிறது. அது பரவியதன் விளைவாக, அந்த இரண்டு நபர்களும் பின்னர் பொதுமக்களாற் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
தனிப்பட்ட பகைமை காரணமாக யாரோ திட்டமிட்டு உருவாக்கிய சிறுவர் கடத்தல் பற்றிய போலிச் செய்தி, இந்தியா முழுமைக்கும் பல்வேறு மொழிகளிற் பரவியதோடு பல்வேறு கொலைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது.
 
இரண்டு சிறுவர் கடத்தல் நபர்களைக் கொண்டதாக ஜார்கண்ட் மாநிலத்திற் புனையப்பட்ட ஒரு போலிச் செய்தியானது, தமிழ்நாட்டில் 400 சிறுவர் கடத்தல் நபர்களைக் கொண்டதாக உருமாறியிருக்கிறது.
 
இத்தகைய அசம்பாவிதங்களுக்கு சமூக வலைத்தளங்கள், போலிச் செய்திகள் மட்டுமே காரணங்களாக இருப்பதில்லை. தனிமனித வன்முறை மனோபாவம், சமூக மட்டங்களில் நிலவும் சனநாயக விரோதப் போக்கு, அடிப்படைவாத சிந்தனைகள் மற்றும் அரசியற் குளறுபடிகள் போன்ற பல்வேறு காரணிகள் இத்தகைய அசம்பாவிதங்களுக்குப் பின்னணியிற் தொழிற்படுகின்றன.
 
முடிவாக
 
துல்லியமானதும் பாரபட்சமற்றதுமான உண்மைச் செய்திகளை வழங்குவது, சமூக அறிவு மட்டத்தை விருத்தி செய்யும் வகையிலான கற்பித்தற் செயற்பாடுகளைத் தொடர்வது, சமூக ஆரோக்கியத்துடன் கூடிய மகிழ்ச்சிப்படுத்தற் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற மிக அடிப்படையான நோக்கங்கள் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் பலவற்றினதும் வகிபாகம், பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். ஊடக அறப்பிறழ்வைக் கொண்டவையாக, அடிப்படைவாதப் பண்புகள் நிறைந்தவையாக, போலிச் செய்திகளைப் பரப்புகிறவையாக, உண்மைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறவையாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் காட்சியளிக்கின்றன.

சமூக வலைத்தளங்களையோ ஊடகங்களையோ தொழில்நுட்ப சாதனங்களையோ பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதர்களும், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. நிகழ்காலத்தில் கண்மூடித்தனமாகப் பகிரப்படுகிற ஒரு போலிச் செய்தி, எக்காலத்திலும் பல்வேறு ‘குழப்பங்களை’ நிகழ்த்தி விடக்கூடும். எது எப்படியிருந்தாலும், ஊடகங்களை எதிர்கொள்வதற்கான ‘பக்குவம்’ எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்.

முகநூல் வழியாக Cambridge analytica என்ற நிறுவனம் மேற்கொண்ட பிரச்சாரச் சதி நடவடிக்கையானது, அமெரிக்காவின் சனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் என்பவர் தெரிவுசெய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய விடயங்கள், ஆழ்ந்து கவனிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டியவை.
 
ஊடகவியலானது, சனநாயகத்தின் நான்காவது தூண் என்று நம்பப்படுவது நடைமுறை உண்மையாக விளங்க வேண்டும். ஒரு நாட்டையோ இனத்தையோ வழிப்படுத்தக்கூடிய, சனநாயகத்தின் ஏனைய மூன்று தூண்களையும் நெறிப்படுத்தக்கூடிய வல்லமையும் பொறுப்புணர்வும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.
 
ஒரு செய்தியை முன்வைக்கிறவர், அதற்கான முழுப் பொறுப்பையும் எடுக்க வேண்டியவர் ஆகிறார். ஊடக வெளிகளிலும் சமூக மட்டங்களிலும் செய்திகளோடு புழங்கும் ஒவ்வொருவரையும் ஊடக அறநெறிகளும் சட்ட நடைமுறைகளும் வழிப்படுத்த வேண்டும்.
 
// எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. //
 
2019-04-26 
அமரதாஸ்