விடைபெறல்

போர்க்களத்திற்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஒரு உக்ரேனியத் தந்தை, தனது மகளிடமிருந்து அழுதபடியே விடைபெறும் சூழ்நிலையிற் பதிவாகிய ‘காணொலி’, உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்ய-உக்ரேனியப் போரின் காட்சிப் பதிவுகள், 2009 இல் அழிவுகளோடு நிகழ்த்தி முடிக்கப்பட்ட இலங்கை இறுதிப் போரின் அனுபவ நினைவுகளை என்னுள்ளே கிளர்த்திக்கொண்டிருக்கின்றன.

கூடிவாழும் மனிதர்கள், வெவ்வேறு திசைகளிற் பிரிந்துபோகும் படியான நிர்ப்பந்தச் சூழ்நிலைகளைப் போர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இலங்கையின் இறுதிப் போர் தீவிரமடைந்திருந்த நிலையிலே பாதிக்கப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், கடற்கரையில் உறவினர்களிடமிருந்து இறுதியாக விடைபெறும் சந்தர்ப்பத்தில் இந்த ஒளிப்படத்தை உருவாக்கினேன்.

25-02-2022
அமரதாஸ்