‘எல்லாளன்’ திரைப்படமும் ஒரு ஜீவனும்

அனுராதபுரம் வான்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலை மையமாகக் கொண்ட ‘எல்லாளன்’ திரைப்படத்தில் ‘நடிக்க’ வந்திருந்த ‘ஜீவன்’ இது. அத் தாக்குதலில் இன்னுயிர்களைத் ‘தியாகம்’ செய்துகொண்டுவிட்ட கரும்புலிகள் வளர்த்த ஜீவன். திரைப்படப் படப்பிடிப்பின் போது மிகுந்த ஈடுபாடு காட்டியது.

தன்னை வளர்த்த அந்தப் பாசக்காரர்களை இந்த ஜீவன் எப்போதும் தேடிக்கொண்டிருப்பதாகவே எனக்குத் தெரிந்தது அப்போது. இந்த ஜீவனின் உணர்வுகள் எப்படியாக இருக்கும் என்று நான் அப்போதெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். இதற்கு, ‘போராட்டம்’ பற்றியோ ‘கரும்புலிகள்’ பற்றியோ எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை.

‘எல்லாளன்’ என்னும் திரைப்படத்திற்காக இந்த ஜீவனின் நடிப்பில் உருவாக்கப்பட்ட பல காட்சிகள், இப்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தில் இல்லை. ஆனால், ஒரு முக்கியமான காட்சி உண்டு. கடும் பயிற்சியை முடித்த ஒரு கரும்புலிப் போராளி, ஓய்வுக்காகத் தனது கட்டிலுக்கு வருவான். அப்போது இந்த ஜீவன், அவனது கட்டிலிற் படுத்திருக்கும். இதை எழுப்பாமல், தடவிக் கொடுத்துவிட்டு அந்தக் கட்டிலின் அருகில் ஒரு பாயை விரித்துப் படுத்துக்கொள்வான் அவன். (இது உண்மையாகவே நிகழ்ந்த சம்பவம்.)

இன்று கரும்புலிகள் நினைவு தினம். அது பற்றிய பதிவுகளை முகநூலிற் கடந்துகொண்டிருக்கையில், இந்த ஒளிப்படம் தான் என் நினைவில் மினுங்கிக்கொண்டிருந்தது. என் ஆவணக் கோவைகளுக்குள்ளே நீண்ட நேரம் தேடி, இதைக் கண்டடைந்தேன். திரைப்படத்திற்கான படப்பிடிப்புக் காலத்தில், அடர்ந்த காட்டுக்குள் என் கூடவே இருந்தது இந்த ஜீவன். அதன் பிறகு எங்கு போனதோ…?

இந்த ஜீவனுக்கும் எனக்கும் இருந்த ‘உணர்வு நெருக்கம்’, இந்த ஒளிப்படத்திலே ‘படிமம்’ ஆகியிருக்கிறது. போர்க்காலத்தில், இது போன்ற அரிய பல ஒளிப்படங்கள் தொலைந்துபோயின. எஞ்சியிருக்கும் முக்கியமான ஒளிப்படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. வன்னியின் அடர் வனம் ஒன்றினுள்ளே தங்கியிருந்த காலத்தில், என் கமெராவில் உருவாக்கப்பட்ட ஒளிப்படம் இது.

இது ‘மாணிக்கம்’. அந்தப் பாசக்காரப் பயலுகள் செல்லமாக வைத்த பெயர் ‘மாணிக்கம்’. தமது தாக்குதலுக்கான பயிற்சிக்காக ஓடுபாதையில் அவர்கள் ஓடும் போது, மாணிக்கமும் சேர்ந்து ஓடுவானாம். அவர்களை ‘வழி நடத்தியவர்’ சொன்னார். மனசுக்குள் இப்போதும் இனம்புரியாத வலி… கடைசியில், மாணிக்கத்தையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்களே…

(இந்தத் திரைப்படத்தில் ஒரு எலிக்குஞ்சு முதன்மையாகச் சம்மந்தப்பட்டிருந்தது. எலிக்குஞ்சுகளுக்கும் கரும்புலிப் போராளி ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்வான தருணத்தைக் காட்சிப்படுத்தும் தேவைக்காக, மிகுந்த சிரமப்பட்டு எலிக்குஞ்சுகளைத் தேடிப்பிடித்தோம். இந்தத் திரைப்படத்தில் சம்மந்தப்பட்டிருந்த ஒரு எலிக்குஞ்சைத் திரைப்படக் கமெராவின் மீது ஊரவிட்டும் கையில் வைத்தும் தனியாக ஒளிப்படங்கள் உருவாக்கியிருந்தேன் அப்போது.)

2017-07-05
அமரதாஸ்