ஐவர் கொண்ட குடும்பத்திற்கு அஞ்சலி (2024-05-19)

இலங்கையில் 2009 இல் முடிவிற்கு வந்த இறுதிப் போரிலே தியாகச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்குமான அஞ்சலி நிகழ்வு, டென்மார்க் நாட்டில் 2024-05-18 அன்று நடைபெற்றிருக்கிறது. பிரபாகரனின் அண்ணன் திரு. வேலுப்பிள்ளை மனோகரன் மற்றும் அவரது மகன் திரு. கார்த்திக் மனோகரன் ஆகியோர், அந்த நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் பலரும் அந்த அஞ்சலி நிகழ்விற் கலந்துகொண்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பான அடையாளங்களையும் பெயர்களையும் கோசங்களையும் பயன்படுத்திக்கொண்டு நிறுவனமயமாகி இயங்க முற்படுவோர் எவராலும், கடந்த 15 வருடங்களில் இத்தகைய திரள் நிலை அஞ்சலி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படவில்லை. (சிலர், தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்திவந்திருக்கிறார்கள்.) பிரபாகரனும் அவரது மனைவியும் மகள் துவாரகா வும் உயிரோடு இருக்கிறார்கள் என்று பொய் சொல்லி ‘ஊழல் அரசியல்’ செய்யச் சிலர் முற்படுகின்ற நிலையில், டென்மார்க் நாட்டில் நடைபெற்றிருக்கும் அஞ்சலி நிகழ்வு முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய அஞ்சலி நிகழ்வுகள், ‘விடுதலை அரசியல்’ சார் விழிப்புணர்வோடும் சனநாயகப் பண்புகளின் அடிப்படைகளோடும் அஞ்சலிக்குரியோர் தொடர்பான தெளிவான புரிதல்களோடும் தொடரப்படவேண்டியவை. வெற்றுச் சடங்குகளாகவோ மத ரீதியான ‘வழிபாட்டு’ நிகழ்வுகளாகவோ நாசகார உள்நோக்கம் கொண்ட அரசியல் முன்னெடுப்புகளாகவோ இத்தகைய அஞ்சலி நிகழ்வுகள் மாறிவிடக்கூடாது.

மே 18 ஆம் நாள், தமிழின அழிப்பு நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளிலேயே பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான அஞ்சலி நிகழ்வைத் தனியாகத் தொடர்ந்து நடாத்துவது பொருத்தமானதா என்னும் கேள்வியைப் பொதுவெளியில் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

காலப்போக்கிலே அஞ்சலி நிகழ்வு விரிவாக்கம் பெறும்போது, தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகளின் கவனக்குவிப்பு மற்றும் வினைத்திறன் குறைவடையக்கூடும்.

உண்மையில், 2009 மே 18 இல் இறுதிப் போர் சார்ந்த அனைத்துமே முடிந்திருக்கவில்லை. உண்மைகளை மூடிமறைத்துப் போர்க்குற்றங்களை நிகழ்த்திக்கொண்டே 2009 மே 18 அன்று போரை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இலங்கை அரசு அவசரகதியில் அறிவித்தது. 2009 மே 18 இன் பின்னரான சில நாட்களிலும், போர்க்குற்றங்களும் படுகொலைகளும் பல்வேறு அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன.

சிறீலங்கா அரச தரப்பினரது ‘வெற்றிக் கொண்டாட்ட’ நாளாக, 2009 மே 18 ஆக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 18 தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டது. இந்த வகையில், மே 18 தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறக்கூடியவை.

இன்னொரு முக்கிய விடயத்தை வெளிப்படையாக முன்வைக்க வேண்டியிருக்கிறது.

பிரபாகரனின் ‘தியாகச்சாவு’ நிகழ்ந்துவிட்டதை, என்னளவில் நான் உறுதிப்படுத்திப் பல வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அது எப்போது எப்படி நிகழ்ந்தது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாதிருந்தது.

ஏற்கெனவே நான் பார்த்திருக்கக்கூடிய அரிதான சில ஒளிப்படங்கள், பல்வேறு தரப்பினர் மூலம் அறியக்கிடைத்த முரண்பட்ட தகவல்கள், நிகழ்தகவுகளின் அடிப்படையிலான சொந்த ஆய்வு முடிவுகள், பிரபாகரன் தொடர்பான சொந்த அனுபவங்கள் போன்றவற்றின் அடிப்படைகளில் இருந்து பார்க்கும்போது, மே 18 இல் அல்லது மே 17 இல் பிரபாகரனின் சாவு நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

பல்வேறு நோக்குநிலைகளின் முடிவாக, பிரபாகரனின் சாவு 2009 மே 19 அன்று காலை நிகழ்ந்திருப்பதாகத் தெரியவருகிறது. அன்றைய நாளில், அவரது உடல் சார்ந்த காட்சிப் பதிவுகள் பொதுவெளியிற் பகிரப்பட்டன. அநாகரிகமான முறையிலே சிறீலங்கா அரச தரப்பினராற் கையாளப்பட்ட அவரது உடல், அவசரகதியில் அழிக்கப்பட்டுவிட்டது.

அவரது தியாகச்சாவு குறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும். 

அவரோடும் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரோடும் பழகிய, உரையாடிய பல்வேறு அனுபவங்களை முன்வைத்துச் சில கட்டுரைகளை வருங்காலத்தில் எழுதும் எண்ணம் இருக்கிறது. அவரை வலிந்து புனிதப்படுத்துவதாகவோ இழிவுபடுத்துவதாகவோ அவை இருக்காது.

அவர் சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் சேர்த்து அவரையும் அவரது தலைமைத்துவத்தையும் மறுவாசிப்புச் செய்யக்கூடிய விரிவான பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை இருக்கிறது. அத்தகைய பதிவுகள், ‘விடுதலை அரசியல்’ சார்ந்து செயற்படக்கூடிய எவருக்கும் பல்வேறு படிப்பினைகளை வழங்கக்கூடும்.

முடிவாக, எல்லா வகையிலும் ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வரலாம். தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளாக நிலைபெறுகிற மே 18 இல், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லோரையும் உள்ளடக்கிய அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பது ஆரோக்கியமானதல்ல. மே 19 இல் அத்தகைய அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் (13 வயது), கைதியாக்கப்பட்டிருந்து 2009 மே மாதம் 19 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபாகரனுக்கும் போராளியாக இருந்து தியாகச் சாவடைந்த அவரது மகள் துவாரகா வுக்கும், வருடாந்தம் நவம்பர் 27 இல் முன்னெடுக்கப்படுகிற ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகளில் இனியாவது அஞ்சலி செலுத்தப்படுமா?

2024-05-19
அமரதாஸ்