விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு அஞ்சலி
ஈழத்தமிழரின் உரிமைகளுக்காவும் அநீதிகளுக்கு எதிராகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துச் செயற்பட்ட விராஜ் மென்டிஸ் அவர்கள் நேற்று (2024-08-16) மறைந்துவிட்டார். அன்னாருக்கு அஞ்சலி…
இலங்கையில், தமிழ்ச் சமூகத்தின் கண்ணியமான இருப்பின் வழியாகவே சிங்களச் சமூகத்தின் கண்ணியமான இருப்பு சாத்தியப்படும் என்று நம்பிச் செயற்பட்ட சிங்கள இனத்தைச் சேர்ந்த பல்துறைத் திறனாளர்களில் ஒருவர் விராஜ் மென்டிஸ்.
‘அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு’ (IMRV-Bremen), ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட அகதிகள் உரிமை அமைப்பாகும். அதன் தலைமை இயக்குநராக இருந்து, தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, சர்வதேச மட்டங்களிற் பல்வேறு செயற்பாடுகளையும் பரப்புரைகளையும் பல தசாப்தங்களாக மேற்கொண்டவர்.
எண்பதுகளின் பிற்பகுதியில், குறைந்தபட்சம் 60,000 சிங்களர்களின் படுகொலைகளோடு சிங்கள இளைஞர்களின் எழுச்சியானது கொடூரமாக நசுக்கப்பட்டபோது, தென்னிலங்கையில் நடைபெற்ற கொடூரமான குற்றங்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்தத்தில் அவரது பங்கு முக்கியமானது.
ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டக் களங்களில் உறுதுணையாக இருந்துவந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த பல்துறைத் திறனாளர்கள் மறைந்துவருவது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இன்னமும் வாழ்ந்துவரும் இத்தகைய திறனாளர்களை இனங்கண்டு, அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அவசியமான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தமிழ்ச் சமூத்தினர் முன்வரவேண்டியது அவசியமாகும்.
2024-08-17 அமரதாஸ்