ஊடகர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல்
இலங்கையின் வடபகுதியில் இருக்கும் கிளிநொச்சி நகரில், ஊடகராகச் செயற்படும் திரு. தமிழ்ச்செல்வன் இரண்டு நபர்களால் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது கண்டனத்திற்குரிய மோசமான வன்முறைச் சம்பவம் ஆகும்.
இத்தகைய விவகாரங்கள் சார்ந்த சட்ட ரீதியான நடவடிக்கைகள், விரைவாகவும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ளப்பட வேண்டியவை.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பின்போது தமிழ்ச்செல்வன் இனங்காட்டியிருக்கிறார். எனினும், அந்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டு, 2025 மார்ச் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகளுக்குப் பாதகம் இல்லையெனில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் சார்ந்த விபரங்களை, தமிழ்ச்செல்வன் வெளியிடுவது நல்லது.
(மேலதிக விபரங்களை வீடியோ இணைப்பிற் காண முடியும்.)
தாக்குதல் நடைபெற்றபோது பார்த்த பொதுமக்கள் உதவிக்குச் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகிறபோது, அயலில் இருக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. சுய பாதுகாப்பு அச்சம், சமூகப் பொறுப்பின்மை, வன்முறை மனோபாவ இயல்பாக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எது எப்படியிருந்தாலும் ஆபத்தில் உதவாத நிலைமையினை, ஒரு சமூக உளவியல் சார் பிரச்சினையாகவே அணுகவேண்டியிருக்கிறது. ஆபத்தில் உதவக்கூடியவர்களுக்கு சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பும் ஆதரவும் போதிய அளவிற் கிடைப்பது அரிது. இது சமூக அவலமாகத் தொடர்கிறது.
சிறீலங்கா அரச தரப்பினராலும் போராட்ட இயக்கங்களாலும் சமூக விரோதக் குழுக்களாலும், மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மற்றும் படுகொலைகள் பலவும் பொது மக்கள் முன்னிலையிலே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2024-12-31
அமரதாஸ்