அரங்கியற் கலைஞர் குழந்தை ம. சண்முகலிங்கம் மறைவு

 
ஈழத்தின் அரங்கியற் கலைஞர் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள், தமிழ்ச் சமூகத் தளங்களில் அரங்கியல் சார்ந்து நீண்ட காலம் காத்திரமாகச் செயற்பட்டவர்.
 
வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகிய அரங்கச் செயற்பாட்டாளர்கள் பலருக்கான வளவாளராக அவர் இருந்திருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட நாடகப் பிரதிகளை எழுதியிருக்கும் அவர், பிறமொழி நாடகப் பிரதிகள் பலவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
 
இலங்கை உள் நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அவரோடு பழகவும் அவரது கலை முயற்சிகள் சிலவற்றிற் பங்கேற்கவும் முடிந்திருக்கிறது.
 
போர் முடிவுற்ற பின்னர், மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் சார்பில் மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று 2010 இல் நடாத்தப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராகவும் வளவாளராகவும் நான் செயற்பட நேர்ந்தது. அரங்கியல் உத்திகளின் மூலம் ஆளுமை விருத்தியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைத்த அந்தப் பயிற்சிப் பட்டறையிலே, குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களையும் பிரதான வளவாளராக இணைத்திருந்தேன். (மனநல வைத்தியர்களான திரு. சிவயோகன், திரு. சிவதாஸ் போன்றவர்களும் வளவாளர்களாகச் செயற்பட்டனர்.) அப்போது அவருடன் நெருங்கிப் பழகவும் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது.
 
வயது வேறுபாடு காண்பிக்காமல், நகைச்சுவை உணர்வுடன் பழகக்கூடியர். எளிமையும் அனுபவச் செழுமையும் கொண்டிருந்த கலைஞர் அவர்.
 
நிறை வாழ்வு கண்டு 93 வயதில் மறைந்திருக்கும் அரங்கியற் கலைஞர் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள், நம் சமூக மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.
 
2025-01-19
அமரதாஸ்
 
ஒளிப்படம்: பயிற்சிப் பட்டறை ஒன்றில் இணைந்து செயற்பட்டபோது பதிவுசெய்யப்பட்டது.