ஊடகர் ஆனந்தி சூரியப்பிரகாசம்

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், ‘BBC தமிழோசை’ வானொலி நிகழ்ச்சிகள் மூலம் ஊடகராக நன்கு அறிமுகமானவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள்.
போரினாற் பாதிக்கப்படும் சிறுவர்கள், சமூக மட்டங்களில் ஒதுக்கப்படும் பெண்கள், பாலியல் சார் தொழிலாளர்கள் உட்படப் பல்வேறு தரப்பினர் சார்ந்த விடயங்களையும் தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வெளிக்கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டவர் ஊடகர் ஆனந்தி.
‘வடபுலம் சென்றேன் கண்டேன்’, ‘நல்லதோர் வீணை செய்வோம்’, ‘இரவில் கசங்கும் மலர்கள்’, ‘ஓரெழுத்தில் அதன் முச்சிருக்கு’, ‘சருகாகும் தளிர்கள்’ போன்ற பல வானொலித் தொடர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை நேரடியாகச் சந்தித்து நேர்காணல் செய்து, ‘தாயகப் பயணம்’ என்ற நிகழ்ச்சியில் இணைத்திருந்தார். தனது முதலாவது வானொலி நேர்காணலை ஆனந்தி க்கு 1993 இல் வழங்கியிருந்தார் பிரபாகரன்.
‘Be wise about sex’ என்னும் நிகழ்ச்சியை ‘யுனெஸ்கோ’ நிதியுதவியுடன் BBC ஊடக நிறுவனம் தயாரித்தது. ‘பாலியல் விவேகப் பக்குவம் கொள்க’ என்று தமிழிற் பெயர் வைத்து 30 பகுதிகளாகத் தமிழில் உருவாக்கி வழங்கினார் ஆனந்தி. அது, ‘எயிட்ஸ்’ போன்ற நோய்களைத் தடுக்கும் நோக்கில் அமைந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. திரு. நாராயண ரெட்டி போன்ற மருத்துவர்கள் மற்றும் மும்பாய் நகரங்களில் வசிக்கும் ‘எயிட்ஸ்’ நோயாளிகள் போன்ற பலரது அனுபவங்களை நேர்காணல்கள் மூலம் பதிவுசெய்திருந்தார். பாலியல் விழிப்புணர்வு சார்ந்த அந்த நிகழ்ச்சி, ஆனந்திக்குப் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.
தமிழ்த் திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் அதிகமதிகம் ஒலிபரப்பிக்கொண்டிருந்த பெரும்பாலான தமிழ் வானொலிச் சேவைகளுக்கு மத்தியில், சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை ‘BBC தமிழோசை’ மற்றும் ‘வெரித்தாஸ் தமிழ்ப்பணி’ போன்ற வானொலிச் சேவைகள் தயாரித்து வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மறைந்த ஊடகர் ஆனந்தி, வானொலி ஊடகத்துறை சார்ந்த தனது அனுபவங்களை விரிவாக எழுதி நூலாக்கியிருக்க வேண்டும். மிக முக்கியமான ஊடகப் பயணங்களில் ஒன்றாக அவர் கருதியிருந்த அவரது பயணம் ஒன்றின்போது அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது.
அன்னாருக்கு என் அஞ்சலி…
அமரதாஸ்
2025-02-23