அவளின் கலகம்

 
ஒரு பெண்ணும் பன்னிரண்டு ஆண்களும் இணைந்து செயற்படும் ஒரு நாடகக் குழுவிற்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை மையப்படுத்தி நுட்பமாக நெய்யப்பட்டிருக்கிறது, 2024 இல் வெளியான ‘ஆட்டம்’ (Aattam) என்னும் மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதை.
 
நாடகக்குழுவினர் தங்கியிருக்கும் இடமொன்றில் அக் குழுவின் பெண் மீது பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் நிகழ்த்தப்படுகிறது. ஒரு இரவில் யாரும் பார்க்காதபோது அச் செயலைச் செய்தவரை அடையாளம் கண்டு அவரை வெளியேற்றுவதற்காக நாடகக் குழுவினருக்குள் விவாதங்கள், விசாரணைகள் நடைபெறுகின்றன. 
 
இவற்றின் வழியே மனித மனங்களின் சந்தர்ப்பவாதங்களையும் உண்மை அறியும் வழிமுறைகளில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளையும் உணர்த்தக்கூடியதாக அமைந்திருக்கிறது திரைக்கதை. 
 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை போன்ற கூறுகள் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. 
 
குறிப்பிட்ட இடத்தில் ஒரு நோக்கத்திற்காகக் கூடியிருப்பவர்களின் உரையாடல்கள், விசாரணைகளின் அடிப்படையில் நுட்பமாகத் திரைக்கதைகள் அமைக்கப்பட்ட வேறு சில திரைப்படங்கள் இருக்கின்றன. 1957 இல் வெளிவந்த ’12 Angry Men’ என்னும் அமெரிக்கத் திரைப்படம் நல்லதொரு உதாரணமாகும். அதில் ஒரு கொலை மையப் பிரச்சினையாக இருக்கும். ‘ஆட்டம்’ திரைப்படத்தின் மையப் பிரச்சினை ‘பாலியல் துஸ்பிரயோகம்’ ஆகும்.
 
மரபார்ந்த ஆண் மேலாதிக்கவாதச் சூழலில் ஆர்ப்பாட்டமின்றியே இயல்பாகக் ‘கலகம்’ செய்யக்கூடியதாகப் பெண் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்று நடித்திருப்பவரின் சின்னச் சின்ன அசைவுகளும் சக்தி மிக்கவையாக (powerful),  இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. 
 
நாடகக் குழுவில் இருந்து வெளியேறி, தன்னைச் சுற்றி நடந்தவற்றை இறுதியில் நாடகமாக்கிக் காட்சிப்படுத்துகிறாள் அப் பெண். அவளது பார்வையில், நாடகக் குழுவின் ஆண் நண்பர்கள் எல்லோருமே தவறிழைத்தவர்கள் ஆக்கப்படுகிறார்கள். 
 
அண்மைக்காலத்தில் வெளிவந்து அதிகம் பேசப்படாதிருக்கும் இத் திரைப்படமானது, குறிப்பிடத்தகுந்த மலையாளத் திரைப்படங்களின் வரிசையில் வைக்கப்படக்கூடியது.
 
அமரதாஸ்
2025-03-03