செம்மணி நிலத்தின் அவலங்கள்

யாழ். மாவட்டத்தின் ‘செம்மணி’ என்னும் பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுள்ள ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதியின் ஒளிப்படம், போலிச் செய்தியோடு சமூக வலைத்தளங்களிற் பகிரப்படுகிறது.
தன் குழந்தையை அணைத்த நிலையில் ஒரு தாயின் எலும்புக்கூடு கிடைத்ததாக உருவாக்கப்பட்ட போலிச் செய்தியோடு, தனியாகக் கிடைத்திருக்கும் எலும்புக்கூட்டுத் தொகுதியின் ஒளிப்படம் பகிரப்படுகிறது.
ஊடகர் திரு. டிலக்சன் மூலம் கிடைத்திருக்கும் தெளிவுத்திறன் கூடிய ஒளிப்படத்தில், குழந்தையின் எலும்புக்கூட்டுத் தொகுதி இல்லை என்பது புலனாகிறது. வலது கை நெஞ்சிலும் இடது கை வயிற்றுப் பகுதியிலும் மடக்கி வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதனால், ஒரு குழந்தையை அணைத்திருப்பது போன்ற பாவனை வெளிப்படுகிறது.

குழந்தையுடையது என்று கருதப்படக்கூடிய எலும்புத் தொகுதி தனியாக மீட்கப்பட்டதாகவும் குழந்தையை அணைத்தபடி எந்த எலும்புத் தொகுதியும் இதுவரை மீட்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் ஆண்களுடையவையா அல்லது பெண்களுடையவையா என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகூட அறிக்கைகள் இன்னமும் வெளிவரவில்லை என்று சொல்லப்படுகிறது.
போலிச் செய்திக்கு வலுச்சேர்க்கும் வகையிலே செயற்கை நுண்ணறிவு மூலம் (AI) சித்தரிக்கப்பட்ட படங்களைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். நேரடியாகப் பதிவுசெய்யப்பட்ட பல ஒளிப்படங்கள் பொதுவெளியிலேயே இருக்கும்போது, சித்தரிக்கப்பட்ட படங்களைச் செய்திகளோடு பயன்படுத்தும் போக்கு ஆரோக்கியமானதல்ல. இத்தகைய போக்கு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும்; அசலான ஒளிப்படங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடும்.
இதுவரை 22 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் செம்மணி என்னும் இடத்தில் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் மீதான பெரும் அநீதிகளையும் மோசமான குற்றச்செயல்களையும் அம்பலப்படுத்தும் அவசரகதியிலே போலிச்செய்திகளை எவரும் பரப்பாமல் இருக்க வேண்டும்.
‘செம்மணி’ நிலத்தின் மனிதப் புதைகுழிகள் மட்டுமல்ல, சந்தேகத்திற்குரிய அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய முறையில் அகழப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் (AI) சித்தரிக்கப்பட்டு, போலிச் செய்தியோடு சமூக வலைத்தளங்களிற் பகிரப்படுகின்ற படம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் (AI) சித்தரிக்கப்பட்டு, போலிச் செய்தியோடு சமூக வலைத்தளங்களிற் பகிரப்படுகின்ற படம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் (AI) சித்தரிக்கப்பட்டு, போலிச் செய்தியோடு சமூக வலைத்தளங்களிற் பகிரப்படுகின்ற படம்.
2025-06-27
அமரதாஸ்