SON OF SAUL திரைப்படத்தை முன்வைத்து….

SON OF SAUL என்ற திரைப்படம் இப்போதுதான் ஒருமுறை பார்த்து முடித்தேன். மனக்குமுறல் அடங்கிவிடவில்லை. அது இனி ஒரு போதும் முழுதாக அடங்கிவிடப் போவதுமில்லை.
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் லட்சக்கணக்கான அப்பாவி யூதர்கள் நாசிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றை மையப்படுத்தியது SON OF SAUL திரைப்படம். அண்மையில், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான Academy விருது உட்பட வேறு சில விருதுகளையும் பெற்றிருக்கிறது.
 
 
 
 
கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்படும் யூதர்கள் ஒரு பக்கம்…. படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களை அப்புறப்படுத்தும், படுகொலை செய்யப்படவிருக்கும் யூதர்கள் இன்னொரு பக்கம்….இத்தகைய கொலைக்களத்துக்குள், படுகொலை செய்யப்பட்ட தனது மகனின் உடலை எரிக்கப்படாமலும் சிதைக்கப்படாமலும் பாதுகாத்து, தனது உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யூத மத வழக்கப்படி புதைப்பதற்கு அதீத பிரயத்தனம் மேற்கொள்ளும் ‘சவுல்’ என்ற மையப் பாத்திரப்படைப்பைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தரமான திரைக்கதை இது. இத் திரைப்படம் பற்றி நுணுக்கமாக நிறைய விடையங்களைப் பதிவு செய்ய முடியும். இது ஒரு அவசியமான உடனடிப் பதிவு.
 

 

திரைப்படம் முழுதும் நிறைந்திருக்கும், அவலத்தையும் ஓர்மத்தையும் வெளிப்படுத்தும் சவுலின் கண்களில் கண்ணீர் வழியவே இல்லை. வரண்டு போன அந்தக் கண்களின் கோணத்தில், அவற்றின் சாட்சியாக விரியும் காட்சிகளைக் காணும் அனுபவம் கூட அவலமானது தான். நாகரிக வளர்ச்சியும் பகுத்தறிவு வளர்ச்சியும் கண்டுவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கும் மானுட குலத்தின் மத்தியில் இப்படியெல்லாம் அநீதிகளும் கொடுமைகளும் நடந்திருக்கிறது , நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் இவ்வுலகின் பேருண்மையாகவும் பேரவலமாகவும் இருக்கிறது.

 

அதீத வன்முறையும் கோரமும் கொண்ட சூழல், அதிகமதிகம் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்படாமல் மிகவும் நாசூக்காகவும் அழுத்தமாகவும் கலாபூர்வமாகவும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற சினமாவின் மிகப் பிரதானமான கூறுகளால் கையாளப்பட்டிருக்கிறது.

 

 
மிக நெருக்கடியான தருணத்திலும் கையில் கிடைத்த ஒரு கமெரா வினால் யூதர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளைப் பதிவு செய்யும் ஒருவனைப் பாதுகாத்து, அந்தக் கமெராவினைப் ‘பவுல்’ பறித்தெடுத்துப் பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் காட்சியும் வேறு பல காட்சிகளும், முள்ளிவாய்க்கால் படுகொலைக் களத்தின் பல்வேறு நேரடி அனுபவங்களை மீட்டுப்பார்க்க வைத்தன. போர்க்காலத்தின் போது, தீவிரமான இடப்பெயர்வுகளின் போது ஆங்காங்கே என்னால் புதைத்து வைக்கப்பட்ட சில கமெராக்களும் பல ஆவணங்களும் இப்போது அழிந்துபோயிருக்கக் கூடும். ஆனால் நினைவுகள் அழிவதில்லை.
 

 

பவுலால் யாரையும் நிரந்தரமாகப் பாதுகாக்க முடியாமல் போவதையும், அவனின் ஓயாத முயற்சிகளையும் , தீர்க்கமான உலர்ந்த அவலக் கண்களையும் கடைசிவரை சுமந்துவந்த மகனின் உடலைப் புதைக்கக் கூட முடியாமல் ஓடுகிற தண்ணீரில் கைவிட நேரும் அவலத்தையும் என்றும் மறந்துவிட முடியாது.
 

 

இத் திரைப்படத்தினை ‘லாஸ்லோ நெமஸ்’ என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதலாவது திரைப்படம். உலகின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டது இது. ஹங்கேரி க்குப் பக்கத்தில் தான் இருக்கிறேன். இந்த ஹங்கேரியத் திரைப்படத்தின் இயக்குநரையும் மையப் பாத்திரமேற்ற நடிகரையும் ஒளிப்பதிவாளரையும் என்றாவது ஒரு நாள் ஐரோப்பாவில் நான் சந்திக்கக் கூடும். சந்திக்க முடிந்தபோது அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் அன்பையும் நேரில் தெரிவித்து சில கேள்விகளையும் முன்வைத்துவிடுவேன். இதுபோல ஒரு தரமான திரைப்படத்தையாவது ஈழத் தமிழரின் போராட்ட, அவல வாழ்வு சார்ந்து நான் உருவாக்கி விட வேண்டும் என்னும் உத்வேகம் அதிகரிக்கிறது.

 

 
SON OF SAUL பார்க்கும்போதும் பார்த்து முடிந்த பிறகும் இருந்த, இருக்கிற மனக்குமுறல், நான் வாழும் காலம் வரைக்கும் நீடிக்கும் என்றே படுகிறது. முன்னரும் இது போலவே என்னுள் சில திரைப்படங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. Atom Egoyan இயக்கி வெளிவந்த, ஆர்மேனிய இனப்படுகொலை பற்றிப் பேசும் Ararat , ருவாண்டா வில்,சிறுபான்மையினரான டூட்சி இனத்தவர்கள் மீது ஹூட்டு இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிப் பேசும் வகையில் Terry George என்பவரால் இயக்கப்பட்ட Hotel Rwanda , யூத இனப்படுகொலை பற்றிப் பேசும் Steven Spielberg இயக்கிய Schindler’s List , Jack Gold இயக்கிய Escape from Sobibor , Roman Polanski இயக்கிய The Pianist , Tim Blake Nelson இயக்கிய The Grey Zone , மற்றும் Roland Joffe இயக்கிய The Killing Fields , Oliver Stone இயக்கிய Salvador போன்ற அத்தகைய திரைப்படங்கள் சினமா வரலாற்றில் முக்கியமானவை.
 

 

இத்தகைய திரைப்படங்களை, இன அழிப்பைச் சந்தித்த தமிழர்கள் எல்லோரும் நெஞ்சைத் திடப்படுத்திக்கொண்டும், ரசனை ரீதியில் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டும் பார்க்க வேண்டும். இன அழிப்பு தொடர்பாக அதிகமதிகம் பேசும் தமிழ்த் திரைத்துறை சார்ந்தோரும் மற்றோரும் இத்தகைய திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச மட்டங்களில் தாக்கங்களை விளைவிக்கும் வகையில் இத்தகைய திரைப்படங்களை, சமூகப் பொறுப்போடும் அறவுணர்வோடும் கலைத்தரத்துடனும் உருவாக்கி உலகெங்கும் ஒளிரச் செய்ய முன்வரவேண்டும்.

 

 
SON OF SAUL Film Trailer https://youtu.be/uh2toNTE7rA

 

கீழே உள்ள இணைப்பில் SON OF SAUL திரைப்படத்தின் தெளிவான பிரதியை ஆங்கில உப தலைப்புக்களுடன் தரவிறக்கம் செய்து பார்க்க முடியும்.