A Gun & A Ring திரைப்படத்தை முன்வைத்து….
A Gun & A Ring என்ற திரைப்படமானது, ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வியலின் நெருக்கடிகளை அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் பேச விழைகிறது. இன ரீதியான ஒடுக்குமுறைகளும் உள் முரண்பாடுகளும் யுத்தமும் அவற்றின் விளைவுகளும் ஈழத்தமிழர்களுக்கு வாரி வழங்கியிருக்கும் நெருக்கடிகளும் அனுபவங்களும் கொஞ்சமல்ல. இன்று உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத்தமிழினத்தின் நெருக்கடிகளை வகைமாதிரிகளாக்கி, புலம்பெயர் வாழ்வியலின் கோலங்களை வரைய முற்படுகிறது இத் திரைப்படம். இத்தகைய ஒரு திரைப்படத்தை உருவாக்க முன்வந்த தயாரிப்பாளரான விஷ்ணு முரளி, இயக்குநரான லெனின் எம்.சிவம் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள்.
A Gun & A Ring திரைப்படம், ஒன்றுக்கொன்று சம்மந்தமுள்ள வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு தேவைகள், பிரச்சினைகள் கொண்ட பாத்திரங்களுடன் பயணிக்கும் திரைக்கதையமைப்பைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதை மாந்தர்களையும் உருவாக்கி அவர்களுக்குள் லாவகமான ஊடாட்டத்தை ஏற்படுத்துகிறார் இயக்குநர். துப்பாக்கியும் மோதிரமும் தொடர்ந்து வரும் படிமங்களாகி வெவ்வேறு தடங்களில் பயணிக்கும் திரைக்கதையை ஒருங்கிணைத்து, இத் திரைப்படத்தின் அழகியலுக்கு வலுச்சேர்க்கின்றன. துப்பாக்கியும் மோதிரமும் வாழ்வியலின் சிதைவுகளுக்கும் நம்பிக்கைகளுக்குமான குறியீடுகளாகின்றன. மையப் பாத்திரம் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைச் சுற்றிப் பின்னப்படும் உலகின் வெற்றிகரமான பெரும்போக்குத் திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பைப் போன்றதல்ல இது. இத்தகைய திரைக்கதையமைப்பை நேர்த்தியாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் கையாள்வதென்பது இலகுவானதல்ல. திரைக்கதையின் போக்கில் சில இடங்களில் தென்படும் பலவீனமான இடங்களை இனங்கண்டு செம்மைப்படுத்தியிருந்தால் இத் திரைப்படத்தின் தரம் மேலும் வலுப்பெற்றிருக்கும் என்று படுகிறது. இதுபோன்ற திரைக்கதையமைப்பினைக் கொண்ட நல்ல பல திரைப்படங்களை உலக சினமாவில் காண முடியும்.
பாத்திரங்களின் கடந்தகால நினைவுகளையும் படத்தில் இடம்பெறாத காட்சிகளையும் கோடிகாட்டும் வசனங்களும் இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் இத் திரைப்படத்தின் பலங்கள். தொழில் முறை சாரா நடிகர்களும் காட்சித்துண்டுகளும் (shots) கையாளப்பட்டிருக்கும் விதம் இயக்குநரின் ஆளுமையைக் காட்டுகிறது. பாத்திர வார்ப்புக்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து அவர்களை அளவோடு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இதில் அபி யாக நடிக்கும் தேனுகா, ஆரம்பத்தில் சோகத்தையும் பிறகு காதலையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு இடத்தில் தன் உறவினர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டதைச் சொல்லும்போது உடைந்து அழுவதைக் கூட அவரது நல்ல நடிப்பிற்கு உதாரணமாகச் சொல்லாம். பொதுவாகவே நடிப்பில் மிக இலகுவானது அழுது நடிப்பது. ஆனால் அதில் கொஞ்சம் பிசகினாலே நடிப்பு சொதப்பலாகிவிடும். மிகவும் சிரமமானது நகைச்சுவையாக நடிப்பது. தேனுகா அழுகையைக் கூட இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தொடர்ந்தும் நடிப்புலகில் கால் பதிப்பது நல்லது. கொஞ்ச நேரமே செவ்வந்தியாக வரும் கிருத்திகாவின் நடிப்பும், சிறுமியாக வரும் தேனுஷா வின் நடிப்பும், பாஸ்கி மற்றும் வேற்று இனத்தவர்களின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக் கூடியன. பெரும்பாலும் இத் திரைப்படத்தில் வருகிற பலரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பொருத்தமான இடங்களில் மிக மெதுவாக உள்ளார்ந்த லயத்தோடு நகர்த்தப்படும் காட்சிகளுக்கு, படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் உதவியிருக்கின்றன. எனினும் சில இடங்களில் காட்சித் துண்டுகளின் (shots) கோணங்களையும் (angle) அளவுகளையும் (duration) அசைவுகளையும் (movement) மாற்றியமைத்திருந்தால் சில காட்சிகளின் அழுத்தமும் அழகியலும் மெருகேறியிருக்கும் என்று படுகிறது. மிகத் தெளிவான திரைக்கதை, shooting script, storyboard போன்றவற்றின் பயன்பாடுகளும் முன்னேற்பாடுகளும் திரைப்பட உருவாக்கத்தை சற்று இலகுபடுத்தவும் அழகுபடுத்தவும் உதவும். மேலும் சில காட்சிகளின் சாராம்சங்களை (Essence) வெளிக்கொணரக்கூடிய வகையிலான மனநிலை ஒளியமைப்பினைப் (mood light) பிரயோகித்திருக்க முடியும். ஒளிப்பதிவிலும் இசையிலும் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று படுகிறது. சர்வதேசப் பார்வையாளர்களை மனதில் கொண்டு அல்லது எல்லோருக்கும் எக்காலத்திலும் புரியக்கூடிய வகையில் சில விடையங்கள் சார்ந்து சில காட்சிகளை மேலும் செம்மைப்படுத்தியிருக்கலாம். அங்காங்கே சில பிசிறல்கள் இருந்தாலும் ஒரு நல்ல சினமாவின் லட்சணங்களோடு வந்திருக்கும் திரைப்படம் தான் இது. ஈழ சினமா என்ற போர்வையில் அங்கங்கே முளைவிடும் தென்னிந்திய தமிழ் சினமாவின் பிரதிபலிப்பான முயற்சிகளுக்கு மத்தியில் இத் திரைப்படத்திற்கான முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.
இத் திரைப்படம் குறித்து, அதன் பலங்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து மேலும் மிக விரிவாக உரையாட முடியும். இது சுருக்கமான பதிவு தான். இதில் செயற்கைத்தனமான துருத்தலான அம்சங்கள் சில இடங்களில் உள்ளன. குறிப்பாக முதற் காட்சியையும் முடிவுக் காட்சியையும் சொல்ல முடியும். அவை மிக நுட்பமாக அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை தம்மை அப்படித்தான் வெளிப்படுத்திக்கொள்கின்றன. படம் பார்த்தவரால், தேர்ந்த ஒரு ரசனையாளரால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு திரைப்படத்திற்கு ஆரம்பமும் முடிவும் (beginning, ending) மிகவும் முக்கியமானவை. மிக நன்றாகவே நடிக்கும் நடிகர்கள் சில இடங்களில் அவசியமில்லாமல் அடக்கி வாசிக்கிறார்கள். இது ஒரு தமிழ்ப்படம் என்ற வகையில் தமிழர்களின் உடல்மொழி அதிகமதிகம் கவனிக்கப்பட்டிருக்கலாம். தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாரம்பரியத்திலிருந்து, பாணியிலிருந்து முற்றாக விலகியிருப்பதே இத் திரைப்படத்தின் பிரதான பலமாகிறது. எது எப்படியிருந்தாலும் இத் திரைப்படம் ஈழத்தமிழ்ச் சினமாவிற்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒரு படைப்பாகக் காணமுடியும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டிய படைப்பு இது.
மேலும் இத் திரைப்படத்தின் முக முக்கியமான தருணங்கள் பற்றிக் குறிப்பாகவும் ரசனை சார்ந்தும் விரிவாகப் பதிவு செய்ய முடியுமாயினும் இப்போது அதற்கான அவகாசம் போதாமலிருப்பதால் இந்த இடத்தில் அதனைத் தவிர்க்கிறேன்.
ஒரு படைப்பின் தரம் விருதுகளால் மதிப்பிடப்படுவதல்ல என்றாலும் பல திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு சில விருதுகளையும் பெற்றிருப்பது இத் திரைப்படத்திற்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரு ஈழத்தமிழரின் ஈழத்திரைப்படம் என்றவகையில் இதனைக் கொண்டாடலாம். ஈழ சினமாவின் ஒரு புதிய போக்கின் படிக்கல்லாக இதனை நோக்க முடியும். ஈழ சினமாவின் வளர்ச்சி நோக்கிய திசையில், அதன் மெய்யான காத்திரமான தொடக்கத்திற்கான உழைப்பில் நானும் இருக்கிறேன் என்ற வகையில் எனக்கு இத் திரைப்படம் முக்கியமான வரவாகத் தெரிகிறது. ஒரு திரைப்படமானது ஈழ நிலப்பரப்பில் எடுக்கப்படுவதாலோ அல்லது தமிழ் பேசுவதாலோ பெரிய நவீன வசதிகள் கொண்ட கமெராக்களினால் பதிவு செய்யப்படுவதனாலோ ஈழ அரசியலை, இயக்கங்களின் அரசியலை வலிந்தோ வெளிப்படையாகவோ பேசுவதனாலோ மட்டும் ஈழ சினமா என்ற புதிய அலையில் அல்லது புதிய போக்கில் இணைந்துவிடாது. நான் அண்மையில் ஒரு நேர்காணலில் ஈழ சினமா பற்றிப் பேசியிருக்கிறேன். அதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
”ஈழ சினிமாவானது, தொழில் தரம் மிகுந்த துறையாக, ஈழத்தமிழ் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கலையாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். ஒட்டுமொத்த இலங்கை மட்டத்திலான சினிமா வரலாற்றை நோக்கும் போது, ஆரம்ப காலத்தில் சிங்களத் திரைப்பட முயற்சிகளோடு தமிழ்த் திரைப்பட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிய முடியும். நீண்ட கால இன முரண்பாடுகளும் போரும் வாழ்வின், பண்பாட்டுப் போக்கின் எல்லாக் கூறுகளையும் பாதித்தது போல சினிமா முயற்சிகளையும் பாதித்தன. தொடர்ச்சியான தமிழ்த் திரைப்பட முயற்சிகள் இல்லாமலானது. பிற்காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதர்சனம் நிறுவனத்தினது முயற்சிகளுக்குத் திட்டவட்டமான வரையறைகளும் பிரத்தியேகத் தேவைகளும் இருந்தன. இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் நடந்திருக்கின்றன. அந்தச் சூழலில் ஞானரதன், கேசவராஜன் போன்றோரினதும் மற்றும் சில போராளிகளினதும் முயற்சிகள் குறிப்பிடப்படவேண்டியவை. குறிப்பாக ஞானரதன், நிதர்சனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஈழ சினிமாவின் தொடர்ச்சிக்கும் குறிப்பிடத்தகுந்த வலுச் சேர்த்திருக்கிறார். நிதர்சனம் வாயிலாக குறிப்பிடத்தகுந்த சில வீடியோ திரைப்படங்களும், குறும்படங்களும் வந்திருக்கின்றன. நிதர்சனம் என்ற நிறுவனத்திற்கு வெளியிலும் சில முயற்சிகள் நடந்தன, நடக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஈழ சினிமா முயற்சிகள் குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்ட முடியாதவையாகவே காணப்படுகின்றன. போர்க்காலமானது, ஈழ சினிமாவின் இருப்பிற்கும் வலுவான தொடர்ச்சிக்கும் காரணமாக இருந்த அதே வேளை, ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடையாகவும் இருந்தது. அண்மைக்காலமாக ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் சில வரவேற்கத்தக்க முயற்சிகள் நடக்கின்றன. அசலான ஈழ சினிமா என்று சர்வதேச அரங்கில் பெருமையோடு முன் நிறுத்தக் கூடிய முயற்சிகள் மிகவும் அரிது.
தென்னிந்தியாவில் பெரும் துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருந்தும் , அது ஈழத் தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கை செலுத்தவில்லை. அது தமிழ் சினிமாவுக்கே பெருமைப்படும் படியான, குறிப்பிடத்தகுந்த படங்களைத் தருவது அரிது. ஈழ சினிமாவானது, தென்னிந்திய தமிழ் சினிமாவிலிருந்து ஊட்டம் பெற்றாலும் தொழில் நுட்ப உதவிகள் வேண்டி நின்றாலும் அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து விலகி தனித்துவமாக வளர வேண்டும். ஈழ சினிமாவானது தனித்துவமான அடையாளங்களுடன் பிரக்ஞை பூர்வமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவோடு ஒப்பீட்டளவில் சிங்கள சினிமாவைப் பார்த்தால் அதன் வளர்ச்சியும் தரமும் சற்று வியப்புக்குரியதுதான். ஒப்பிட்டளவில் சிங்கள இனமானது, இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை என்பதும் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கக் கூடும். ஈழ சினிமா என்று ஒரு கருதுகோள் இருக்கிறது. அதற்கென்று பிரத்தியேகத் தேவைகளும் ஈழத்தமிழின நலன் சார் கடப்பாடுகளும் இருக்கின்றன. ”
A Gun & A Ring Film Trailer.
Lenin M. Sivam , Thenuka Kantharajah , EnnaDa NaanRaja , கந்தசாமி Gangatharan , Basky ManmaThan