தாமதிக்கப்படுகிற நீதி மறுக்கப்படுகிற நீதியாகும் – அமரதாஸ் நேர்காணல்
உங்களைப் பற்றிய அறிமுகத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த முடியுமா?
ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், ஒரு அழகிய கிராமத்திலே பிறந்தவன் நான். சிறுவனாக இருந்தபோது தன்னிச்சையாக ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். பிறகு கவிதைகள் எழுதினேன். நாடகங்கள் நடித்தேன். சிறுகதைகள் மற்றும் கலை இலக்கிய விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தேன். ஒளிப்படங்களை உருவாக்க ஆரம்பித்தேன். பிறகு, திரைப்பட முயற்சிகளில் இறங்கினேன். ஒளிப்படக்கலை தொடர்பிலும், சினிமாக்கலை தொடர்பிலும் பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்தியிருக்கிறேன். கடுமையான போர்க்காலத்தில், சிறீலங்கா அரசின் மோசமான பொருளாதாரத் தடைகளின் பின்னணியிலேயே எனது கலை இலக்கிய மற்றும் ஊடகவியல் சார் செயற்பாடுகளைத் தொடர வேண்டியிருந்தது.
ஒரு கவிதைத் தொகுதியை, ‘இயல்பினை அவாவுதல்’ என்ற பெயரிற் பதிப்பித்து வெளியிட்டேன். நீண்டகாலமாக நான் உருவாக்கிய பல்வேறு வகைப்பட்ட ஒளிப்படங்களைக் கொண்டு, கிளிநொச்சியிலே தனிநபர் ஒளிப்படக் காட்சியை நடாத்தியிருக்கிறேன். போர்க்கால வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் ஆவணப்படுத்தும் வகையிலான ஒளிப்பட நூல் ஒன்றை வெளியிட்டேன். ‘வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள் – Living Moments: Photographs of Amarathaas’ என்ற பெயரிலே 350 பக்கங்கள் வரை கொண்டிருந்த அந்த நூலின் மொழிப்பகுதிகள் அனைத்தும், தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டிருந்தன. கைவசமிருந்த ஒரு பிரதியையும் இறுதிப்போர் பிடுங்கிவிட்டது. அந்த நூலிற் பயன்படுத்தப்பட்ட பல ஒளிப்படங்களையும் வேறெங்கும் வெளியிடப்படாதிருந்த பல்வேறு ஒளிப்படங்களையும் இழந்து விட்டதானது, என்னளவிற் பாரிய இழப்பாகும். இறுதிப் போர்க்காலத்திலே நான் உருவாக்கிய பல ஒளிப்படங்களையும் இழக்க நேர்ந்துவிட்டது.



ஓவியக் கலை குறித்த ஆர்வம்தான் உங்களை ஒளிப்படக்கலை நோக்கி நகர்த்தியதா? ஓவியம் சார்ந்த ஆர்வம் குறித்தும் பிற ஈடுபாடுகள் குறித்தும் சொல்ல முடியுமா?
சிறுவனாக இருந்த காலத்திலே, ஓவியங்கள் வரையும் பழக்கம் இயல்பாகவே ஆரம்பித்திருந்தது. ஓவியக்கலை மீதான எனது ஈடுபாடு தான், எனது கலைப்பயணத்தின் உந்துசக்தியாக இருந்திருக்கக்கூடும். பல்வேறு கலைகளிலே ஈடுபாடு கொண்டிருக்கும் எனக்கு, காட்சிக்கலைகள் மீதான ஈடுபாடு அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஒளிப்படம் என்கிற சாதனம், உலகின் மிகவும் சக்தி மிக்க ஊடகமாகவும், கலையாகவும் இருக்கிறது. ஒப்பீட்டளவில் தொழில்நுட்ப ரீதியில் ‘படைப்பாக்க வேகம்’ கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஒளிப்படக் கலையிலே தீவிரமாக ஈடுபட்டேன். சினமா சார் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். அவ்வப்போது ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். சில நூல்களுக்கான அட்டைப் படங்களும் பத்திரிகைக் கேலிச்சித்திரங்களும் பெரிய அளவிலான ஓவியங்களும் வரைந்திருக்கிறேன். கொடிய போர்க்காலத்திலே எனது அரிதான பல ஆவணச் சேகரிப்புகளையும் படைப்புகளையும் இழக்க நேர்ந்துவிட்டது. அவ்வப்போது சினமா சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அலைக்கழிப்புகளும் பொருளாதார நெருக்கடிகளும் நிறைந்திருந்த போர்க்கால வாழ்வியலில், ஓவியக்கலையிலும் சினமாவிலும் திருப்திகரமாக ஈடுபட முடிந்திருக்கவில்லை.
எல்லாக் கலைகளும் தனித்துவமான வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் கொண்டவை. எனினும், எல்லாக் கலைகளுக்கு இடையிலும் நுண்மையான ஊடாட்டம் நிகழ்வதைக் காண்கிறேன். எதிலும் தேங்கிவிடாத அல்லது திருப்தியுறாத தேடலார்ந்த மனநிலையும் சுய சிந்தனையுமே வெவ்வேறு கலைகள் மீதான எனது ஈடுபாடுகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும்.
வன்னிப் பெருநிலம் மீதான இறுதி யுத்தகாலத்தில் உங்கள் அனுபவம் என்ன? அந்தப் பெரு வலியான நாட்களைச் சுருக்கமாக நினைவுகூர முடியுமா?
போர்க்காலமானது பேரிழப்புக்களை மட்டுமல்ல, சில சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத பெருவலி கொண்ட பேரனுபவத்தையும் தந்திருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளையும் உயிராபத்துகளையும் கொண்டிருந்த அந்தக் கொடிய காலத்துள், ஒரு சாட்சியாக எனது மூன்றாவது கண்ணாகிய கமெராவுடன் அலைக்கழிந்திருக்கிறேன். அடிப்படையான தொழில்நுட்ப வசதிகளை மிகவும் அரிதாகவே கொண்டிருந்தபோதும், பெருமளவிலான பதிவுகளைச் செய்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாகவே இருக்கும். கனரக மற்றும் இரசாயன ஆயுதங்களோடு சிறீலங்கா அரச படைகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான தமிழின அழிப்பு மற்றும் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்து வாழ்வதே மிகப்பெரும் சவாலாக இருந்தது. முள்ளிவாய்க்கால் வரை மக்களோடு பயணித்து, மக்களின் அவலங்களையும் உணர்வுகளையும் ஒட்டுமொத்தமான போர்க்கால வாழ்வியலையும் இயன்றவரையிற் பதிவு செய்தேன். என்னுள்ளே பெரிதாகத் திரண்டிருக்கும் அனுபவங்களையும் கதைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடுவது கடினமானது. தாயகத்தைப் பிரிந்து அகதியாக அலையும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலே, படைப்பாக்கத்திற்கான அவகாசமும் மனநிலையும் கூடிவருவது அரிது. எனது போர்க்கால அனுபவங்கள், திரைப்படங்களாகவோ நூல்களாகவோ வருங்காலத்தில் வெளிவரக்கூடும்.
நடக்கும் ஒரு நிகழ்வின், அல்லது சம்பவத்தின் ஆவணங்களாக மாறி விடுகின்றன ஒளிப்படங்கள். உங்கள் போர்க்கால ஒளிப்படங்கள் இனப்படுகொலைக்கான ஆவண ஆதாரங்கள் இல்லையா? அவற்றை எப்படி வெளிக்கொண்டு வந்தீர்கள்?
எனது இறுதிப் போர்க்கால ஒளிப்படங்கள், சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு சிங்களப் பேரினவாத சக்திகள் நிகழ்த்திய, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாகப் பேசக்கூடியவையே. அவற்றுள் பலவும், வெவ்வேறு வழிகளில் வெளியாகியிருக்கின்றன. மிக நெருக்கடியான காலத்தில் எனது அடையாளங்கள் இல்லாமலே, எனது பெயர் இல்லாமலே பல ஒளிப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். பல அச்சாக்க வெளியீடுகளிலும் சில விவரணப்படங்களிலும் எனது ஒளிப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. TREVOR GRANT என்ற பிரபல அவுஸ்திரேலிய ஊடகரால் எழுதப்பட்டு, அவுஸ்திரேலியாவில் உள்ள Monash பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட SRI LANKA’S SECRETS – HOW THE RAJAPAKSA REGIME GETS AWAY WITH MURDER என்ற நூலிலே அதிக அளவில் எனது படங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த நூலை, அண்மையில் எனக்கு அனுப்பியிருக்கிறார் TREVOR GRANT. தமிழின அழிப்பை உறுதிப்படுத்தும் வகையிலே 2013 இறுதியில் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நூலின் அட்டையில், நான் உருவாக்கிய ஒளிப்படம் பயன்படுத்தப்பட்டது.
மக்களுக்கான வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு வல்லாதிக்க சக்திகளின் துணையோடு சிறீலங்கா இராணுவம் கண்மூடித்தனமாக மக்கள் மத்தியிற் கட்டவிழ்த்த அவலங்களை, யாராலும் நிறுத்தவே முடியாதிருந்த போரின் கொடிய விளைவுகளை, ஒருவகைத் தீவிர மனோநிலையுடன் சுயாதீன ஊடகராக இருந்து தொடர்ச்சியாகப் பதிவுசெய்தேன். யாரிடமிருந்தும் ‘சம்பளம்’ பெறாமற் செய்த ‘உத்தியோகம்’ அது. சமகாலத் தேவைகளுக்கு அமைவாக மக்களின் அவலங்களை அவசரகதியில் வெளிக்கொணர முயன்ற நெருக்கடி நிலைமைகளில், ஒளிப்படங்கள் பலவற்றின் பிரதிகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஒளிப்படங்களை உருவாக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் வெளிக்கொணரவும் எனக்குச் சிலர் உதவியிருக்கிறார்கள். அத்தகையோரை, நன்றியுடன் நினைவிற் கொண்டிருக்கிறேன். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே எனது போர்க்கால ஆவணங்கள் பலவற்றைப் பாதுகாத்து வைத்திருந்தேன். சுயாதீன ஊடகராக இருந்துகொண்டு, அவற்றைச் சர்வதேச மட்டங்களில் வெளியிட்டுக்கொண்டிருந்தேன். இறுதிப் போரின் இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் எனது மூத்த சகோதரனும் அவரது மூத்த மகனும் கொல்லப்பட்டனர். அப்போது, அவர்களோடு இருந்த எனது முக்கியமான ஆவணங்களையும் பதிவுகளையும் கொண்டிருந்த ‘லப்டொப்’ மற்றும் ‘ஹார்ட் டிஸ்க்’ போன்ற சில உபகரணங்கள் அழிந்து போயின. அவற்றில் இருந்த பல முக்கியமான பதிவுகளை இனித் திரும்பப் பெறவே முடியாது. எல்லாவகையான இன்னல்களையும் கடந்து, பெருமளவிலான எனது ஒளிப்படங்களை எப்படியோ பாதுகாத்துப் பயன்படுத்த முடிந்திருக்கிறது. அவை, ஈழத்தமிழினத்தின் மிக முக்கியமான ஆவணங்களாகும்.
இன அழிப்பு நடவடிக்கைகள், இன்று நேற்று ஆரம்பித்தவையல்ல. அவற்றுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இறுதிப் போர்க்காலத்தில் சிங்களப் பேரினவாத சக்திகளால் மிகப்பெரிய அளவிலே தமிழின அழிப்பு நடவடிக்கைகள் வன்னிப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. சிங்கள அரசு, எல்லைகளில் விடுதலைப் புலிகளோடு மட்டுமே இறுதிப் போரை நிகழ்த்தவில்லை. தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழ்ந்த ஒட்டுமொத்த நிலப்பகுதிகள் மீதும் போர் தொடுக்கப்பட்டது. போரினால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகள், சிறீலங்கா அரசினால் உரியமுறையில் வழங்கப்படவில்லை. கனரக ஆயுதங்களாலும் விமானத் தாக்குதல்களாலும் பல்லாயிரக்கணக்கிலே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சடலங்களையும் அழிவுக் காட்சிகளையும் மட்டுமே நான் படங்களாக்கவில்லை. மக்களின் வலிமிகுந்த உணர்வுகளும் போர்க்கால வாழ்வியலும் என் படங்களிலே பெருமளவிற்குப் பதிவாகியிருக்கும். அவற்றிலே பலவற்றை இன்னும் நான் வெளியிடவில்லை. முள்ளிவாய்க்கால் வரை மக்களோடு நகர்ந்து நகர்ந்து, மக்களின் அவலங்களையும் போர்க்கால வாழ்வியலையும் பெருமளவிலான ஒளிப்படங்களிலே பதிவு செய்திருக்கிறேன். ஒரு மோசமான அழிவை நோக்கிய பெருந்துயரின் பயணத்தைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யமுடிந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க விவரணப்பட இயக்குநர் ஒருவர் யாழ்ப்பாணத்திலே என்னைச் சந்தித்திருந்தார். எனது இறுதிப் போர்க்கால அனுபவங்களைக் கேட்டுவிட்டு, அவை விசித்திரமானவையாகவும் துயர்நிலைப்பட்டவையாகவும் (Tragedy) சாகசநிலைப்பட்டவையாகவும் (Adventure) தோன்றுவதாகக் குறிப்பிட்டார். அவை திரைப்படங்களிற் பதிவுசெய்யப்பட வேண்டியவை என்று சொன்னார். யாரும் நுழைய முடியாதிருந்த பகுதிகளுக்குள் எப்படியோ கமெராவோடு என்னால் நுழைய முடிந்திருக்கிறது. யாரும் பார்க்க முடியாதிருந்த காட்சிகளையெல்லாம் என்னால் ஒளிப்படங்களாக்க முடிந்திருக்கிறது. அவலங்கள் மலிந்திருந்த போரின் இறுதி நாட்களில், மக்கள் மத்தியில் ஊடாடி ஒளிப்படங்களை உருவாக்கும் தருணங்களிற் பெரும் புறச் சவால்களையும் உள நெருக்கீடுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. உயிராபத்துகளுக்கு மத்தியிலும், ஒளிப்படங்களை உருவாக்கி அவற்றைப் பாதுகாத்து வெளிக்கொண்டு வருவதற்காக நான் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. வருங்காலத்தில், உலகம் காணத் தவறிய காட்சிகளையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் இயன்றவரை வெளிக்கொண்டு வருவேன். சுய சிந்தனையும் அற உணர்வும் கொண்டு என் பயணம் தொடரும்.

இப்போது நடந்த ஐநா அமர்வில் நீங்கள் எப்படி உரையாற்றினீர்கள்? அது பற்றிச் சொல்லுங்களேன்? ஐநா அமர்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா?
இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லையென்ற தோற்றப்பாட்டினைப் பல்வேறு மட்டத்தினரும் ஏற்படுத்திக்கொண்டிருந்த சூழலில், இன அழிப்பையும் போர்க்குற்றங்களையும் வலியுறுத்தி, என்னிடமிருக்கும் சொந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஐ.நா மன்றத்திலே நான் உரையாற்ற நேர்ந்தது. எனது ஐ.நா உரையின் போது, என்னால் உருவாக்கப்பட்டிருந்த போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றையும் காட்சிப்படுத்தினேன். எனது அறச் சீற்றத்தின் ஒரு வடிவம் அது. அவசர கதியில் நிகழ்ந்த ஒரு செயலாயினும் அதற்கான உடனடித் தேவை இருந்தது. ஐ. நா மூலம் உடனடியாக எதையும் சாதித்து விட முடியாத நிலைமைகளே உள்ளன. ஐ.நா மன்றம், உடனடியாகவும் சரியாகவும் நீதி வழங்கிவிடும் களமல்ல. இப்போது நிகழும் சர்வதேச அரசியலின் பின்னணியிலே பார்த்தால், இன அழிப்பைச் சந்தித்த தமிழினத்திற்கு சிறீலங்கா அரசின் மூலமோ ஐ.நா மூலமோ பரிகார நீதி கிடைத்துவிடப் போவதில்லை என்பது புரியும். எனினும், ஐ.நா மன்றத்தை ராஜதந்திர ரீதியிலே கையாளவேண்டிய தேவை தமிழினத்திற்கு இருப்பதைத் தவிர்க்க முடியாது. இது இலகுவான காரியமில்லை. ஐ.நா என்பது, எந்தத் தலையீடுகளும் இல்லாமல் சுயமாக முடிவுகளை எடுக்கும் அமைப்பல்ல. அதை, சுயநல நோக்கமே பிரதானமாகக் கொண்ட வல்லாதிக்க சக்திகள் ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழர்கள், ஒரு வலுமிக்க தரப்பாக ஐ.நா அவையிலே இல்லை. தமிழின அரசியல் சார் நகர்வுகள், ஜெனிவா நோக்கியதாக மட்டும் இல்லாமல் சர்வதேச சமூகம் நோக்கியதாக இருக்க வேண்டும். சர்வதேச சமூக மட்டங்களில், தமிழினத்தின் தேவையும் இருப்பும் கவர்ச்சி மிக்கதாகவும் நம்பகத்தன்மையோடும் உறுதிசெய்யப்பட வேண்டும். அப்போது தான் ஜெனிவாவில் கொஞ்சமாவது சாதிக்க முடியும். இது விரிவான விவாதத்துக்குரிய விடயம். தமிழர்கள் ஒரு வலுமிக்க தரப்பாக இல்லாத இந்த ஐ.நா அவையில் ஒரு வலுமிக்க சாட்சியமாக இருக்க நினைத்தேன். இது ஒருவகையான குறுக்கு வழிமுறை என்றே நினைக்கிறேன். அரசியல் செல்வாக்கோ அரசியல் அடையாளங்களோ இல்லாத என்னைப் போன்றவர்கள், ஐ.நா மன்றத்தினுள் நுழைவதென்பது சாதாரணமான காரியமல்ல. நாடற்ற தேசிய இனமாகிய தமிழினம், ஆபத்துகளையும் புறக்கணிப்புகளையும் அதிகமதிகம் சந்தித்து வருகின்றமைக்கான காரணிகள் ஆராயப்பட வேண்டும்.
// சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம்.
இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும்.
நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையிலான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன.
போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு. //
இப்படியாக, எனது ஐ.நா உரையிலே குறிப்பிட்டிருக்கிறேன். இனப்படுகொலைக் குற்றங்களை மூடிமறைத்து, அத்தகைய குற்றங்களின் பின்னுள்ள சக்திகளைக் காக்கும் முயற்சிகளே பல மட்டங்களில் இப்போது நடக்கின்றன. சிறீலங்கா இராணுவமானது, தமிழ் மக்களின் திசையிலே இறுதிப் போரை முன்னெடுத்த விதத்தில் இருந்து இனப்படுகொலை நடந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றைப் பாரபட்சமின்றி ஆராய்ந்தால், தமிழினத்தைக் குறிவைத்து நடாத்தப்பட்டிருக்கும் ‘இன வன்முறைகள்’ பற்றி, இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
தமிழ் மக்களின் சமகால அரசியல், வெறுமை கொண்டிருக்கிறது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழினம், தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டும் நயவஞ்சகமாகக் கையாளப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவல நிலை தொடர்கிறது.
எனது நோக்கம், ஆபத்தான அரசியல் நிலைமையில் இருக்கும் தமிழினம் சார்ந்து ஒரு ஆரோக்கியமான கலகத்தைத் தொடக்குவது தான். ஐ.நா விலே உரையாற்றிப் பிரபலமாவதல்ல. அங்கு போய் உடனடியாக எதையும் சாதிக்கக்கூடிய நிலைமை இல்லை. இருந்தாலும், நான் போக வேண்டும் என்றொரு தருணம் வாய்த்தது. நான் அரசியல்வாதியோ அரசியல் பின்புலங்கள் கொண்டவனோ அல்ல. பாதிக்கப்பட்ட தமிழினத்தின் சாட்சியாளராக இருக்கிறேன். என் குரலை முன்வைக்க ஐ.நா மன்றம் பயன்படுத்தப்பட்டது. ஐ.நா மன்றின் பரிமாணங்களைத் தெரிந்துகொண்டு தான் உள்ளே சென்று உரையாற்றினேன். அது ஒரு வகையில் எனது கலகச் செயற்பாடு தான். தமிழின அரசியலின் உடனடித் தேவை, புதிய சர்வதேச ராஜதந்திர அரசியற் களங்களை உருவாக்குவது.

உள்நாட்டு விசாரணையை தீர்வாகச் சொல்கிறது ஐநா அமர்வு. இதை மக்களும் உங்களைப் போன்றோரும் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இலங்கைப் பிரச்சினையில் உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணும்படி எத்தகைய அறத்தின், தர்க்கத்தின் அடிப்படையிலே சொல்ல முடியும்?அத்தகைய வழியிலே அடையப்படுகிற தீர்வு, பொருத்தமானதாக அமையும் என்று நம்பமுடியுமா? நமக்கிருக்கும் வாய்ப்புகளை இனங்கண்டு, மேலதிக வாய்ப்புகளைப் பெறவும் நமக்குத் தேவையான இலக்கை அடையவும் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மோசமான சரிவை நோக்கித் தமிழினம் தள்ளப்பட்டுவிடும். போர்க்குற்ற விசாரணை மற்றும் உள்ளக விசாரணை என்பவற்றுக்கு மேலாக, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோணத்திலே தமிழர் அரசியலை நகர்த்த வேண்டும். இப்போதைக்குத் தமிழர் முன் இருக்கக்கூடிய, தமிழின விமோசனத்துக்கான வலுமிக்க ஒரே வழி அதுதான். தமிழினம் பாரிய அழிவைக் கண்டு வலுவிழந்து நிர்க்கதியாக நிற்கும் இந்த நேரத்தில், தமிழ்த் தரப்பினர் ராஜதந்திர அரசியல் செய்யாமல் சரணாகதி அரசியல் செய்ய முயல்கிறார்கள். ராஜதந்திரம் எனப்படுவது, நமக்கான இலக்கை அடைவதற்கான சரியான வழிமுறையாகப் பார்க்கப்பட வேண்டும். கடந்தகால ஆயுதப் போராட்டம் மற்றும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் போன்றவற்றில் நிகழ்ந்திருக்கும் ராஜதந்திரச் சறுக்கல்களில் இருந்து கற்றுக்கொண்டும், சமகால சர்வதேச அரசியல் நிலைமைகளை அவதானித்தும், ராஜதந்திர ரீதியில் விடுதலை அரசியலை முன்னெடுக்கும் பக்குவத்தைத் தமிழினம் பெற வேண்டும்.
இன்று ஈழ மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை எது?
இன்று ஈழத்தமிழ் மக்கள் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இன அழிப்புக்கான நீதி கோரிய திசையில், ஈழத்தமிழர் சரியாக வழிநடத்தப்படவில்லை. இது முதன்மையான ஒரு பிரச்சினை. இதைச் சரிசெய்வதென்பது இலகுவானதல்ல, மிகவும் கடினமானதுமல்ல. பரந்தும் கூறுபட்டும் உலகெங்கும் சிதறிக் கிடக்கிற, நாடற்ற தேசிய இனமாகிய ஈழத் தமிழினமானது, தனக்கு நிகழ்ந்த இன அழிப்பின் நிமித்தம் ஒன்றுபட வேண்டும். ‘தாமதிக்கப்படுகிற நீதி மறுக்கப்படுகிற நீதியாகும்’.
ஈழ சினமா முயற்சிகள் எப்படி இருக்கின்றன?
ஈழ சினமாவானது, தொழில் தரம் மிகுந்த துறையாக, ஈழத்தமிழ் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கலையாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். ஒட்டுமொத்த இலங்கை மட்டத்திலான சினமா வரலாற்றை நோக்கும் போது, ஆரம்ப காலத்தில் சிங்களத் திரைப்பட முயற்சிகளோடு தமிழ்த் திரைப்பட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிய முடியும். நீண்டகால இன முரண்பாடுகளும் போரும் தமிழர் வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் பாதித்தன. ஆக, சினமா முயற்சிகளும் பாதிப்புகளுக்குள்ளாயின. தொடர்ச்சியான தமிழ்த் திரைப்பட முயற்சிகள் இல்லாமலானது. பிற்காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதர்சனம் நிறுவனத்தினது முயற்சிகளுக்குத் திட்டவட்டமான வரையறைகளும் பிரத்தியேகத் தேவைகளும் இருந்தன. இருந்தாலும், குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஞானரதன் மற்றும் கேசவராஜன் போன்றவர்கள் ‘நிதர்சனம்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஈழ சினமாவின் தொடர்ச்சிக்கும் குறிப்பிடத்தகுந்த வலுச்சேர்த்திருக்கிறார்கள். சேரலாதன் உள்ளிட்ட பல போராளிகளின் (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள்) பங்களிப்புகள் முக்கியமானவை. அவர்களின் பங்களிப்புகளோடு குறிப்பிடத்தகுந்த சில வீடியோ திரைப்படங்களும் குறும்படங்களும் ‘நிதர்சனம்’ வாயிலாக வந்திருக்கின்றன. ‘நிதர்சனம்’ என்ற நிறுவனத்திற்கு வெளியிலும் ஈழ சினமா முயற்சிகள் நடந்தன, நடக்கின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஸ்கிறிப்ற் நெற்’ என்ற நிறுவனத்தின் ஊடாக நடைபெற்ற திரைப்படப் பயிற்சிப் பட்டறைகள் (திரைக்கதை உருவாக்கம், திரைப்பட இயக்கம்), குறுந் திரைப்பட உருவாக்க முயற்சிகள் கவனிப்பிற்குரியவை. எப்படிப் பார்த்தாலும், குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்ட முடியாதவையாகவே ஈழ சினமா முயற்சிகள் காணப்படுகின்றன. போர்க்காலமானது, ஈழ சினமாவின் இருப்பிற்கும் வலுவான தொடர்ச்சிக்கும் காரணமாக இருந்த அதே வேளை, ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடையாகவும் இருந்தது. அண்மைக்காலத்தில், ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் சில வரவேற்கத்தக்க முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. அசலான ஈழ சினமா என்று சர்வதேச அரங்கில் பெருமையோடு முன்நிறுத்தக்கூடிய முயற்சிகள் மிகவும் அரிது. தென்னிந்தியாவில் பெரும் துறையாக தமிழ் சினமா வளர்ந்திருந்தும், அது ஈழத் தமிழ் சினமாவுக்குக் குறிப்பிடத்தகுந்த பங்கைச் செலுத்தவில்லை. அது, தமிழ் சினமாவுக்கே குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களை அதிகம் தருவதில்லை. தென்னிந்திய தமிழ் சினமாவிலிருந்து ஊட்டம் பெற முயன்றாலும், தொழில்நுட்ப உதவிகள் வேண்டி நின்றாலும், அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து விலகித் தனித்துவமாக வளர வேண்டிய அவசியம் ஈழ சினமாவிற்கு உள்ளது. தனித்துவமான அடையாளங்களுடன் பிரக்ஞை பூர்வமாக ஈழ சினமா கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். ஒட்டுமொத்தத் தமிழ் சினமாவோடு ஒப்பீட்டளவில் சிங்கள சினமாவை வைத்துப் பார்த்தால், அதன் வளர்ச்சியும் தரமும் மேலோங்கியிருப்பதாகத் தோன்றும். ஒப்பிட்டளவில் சிங்கள இனமானது, இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை என்பதும் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கக்கூடும். ஈழ சினமா என்று ஒரு கருதுகோள் இருக்கிறது. அதற்கென்று பிரத்தியேகத் தேவைகளும் ஈழத்தமிழின நலன் சார் கடப்பாடுகளும் இருக்கின்றன.
உங்களுக்கு திரைப்பட ஆர்வம் உண்டா? அனுபவம் உண்டா?
எனக்குத் திரைப்பட ஆர்வம் அதிகமாகவே உண்டு. அடிப்படையில் நான் காட்சிக் கலைஞன். ஓவியம், நாடகம், கவிதை, கதை, ஒளிப்படம் போன்ற கலைகளில் ஊடாடி, சினமாவைத் தொட்டு நிற்பவன். சினமாவானது உலகில் மிகவும் சக்தி வாய்ந்த காட்சி ஊடகமாக மிளிர்கிறது. ஆனால், அதில் ஈடுபடுவதென்பது சாதாரணமான காரியமல்ல. தொழில் ரீதியாகப் பார்த்தால், உலகிலேயே மிகவும் கடினமான தொழில் திரைப்படம் எடுப்பது தான் என்று இயக்குநர் திரு. மகேந்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார். முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின உழைப்பினை, நல்லதொரு திரைப்படத்திற்காக ஒரு இயக்குநர் வழங்கவேண்டியிருக்கும். திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரையில், அது தனிநபரோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைக் கடந்து தான் ஒரு நல்ல திரைப்படம் வெளிவரவேண்டியிருக்கும். தனித்துவமான ஈழ சினமாவைக் கட்டியெழுப்புவது சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். ‘நிதர்சனம்’ நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளில், தொழில்நுட்ப ரீதியான பங்களிப்புகளைச் செய்திருக்கிறேன். வன்னிப்பகுதியிலே சில நண்பர்களை ஒருங்கிணைத்து, நல்ல பல திரைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன். பல்வேறு மட்டங்களிலே சினமா சார்ந்த பயிற்சிப்பட்டறைகளையும் விரிவுரைகளையும் விமர்சனங்களையும் நிகழ்த்தியிருக்கிறேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஸ்கிறிப்ற் நெற்’ என்கிற திரைத்துறை சார் நிறுவனம், திரைக்கதை உருவாக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் சார்ந்து, தேர்வு முறையிலான பல மட்டப் பயிற்சிப்பட்டறைகளை நடாத்தியது. அவற்றில் இறுதிவரை கலந்துகொண்டு, சிறப்புத் தேர்ச்சி நிலையை அப்போது அடைந்திருந்தேன். ஈழ சினிமா செயற்பாட்டாளர்களாகக் குறிப்பிடக்கூடிய திரு. ஞானதாஸ், திரு. யேசுராசா, நான் உட்பட வேறு சிலரும் பயிற்சிப்பட்டறைகளில் அப்போது கலந்துகொண்டிருந்தோம். ‘நிதர்சனம்’ நிறுவனம் சார்ந்த சிலரும் அப்போது கலந்துகொண்டிருந்தார்கள்.

நம்பிக்கை தரும் படைப்பாளியான உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?
காலம் என்னை மேலும் மேலும் அலைக்கழிக்காமல் இருக்குமென்றால், அதிகமதிகம் எனக்குப் பிடித்த கலைகளோடு தான் என் வாழ்வைக் கொண்டாடுவேன். வருங்காலத்தில் நல்ல திரைப்படங்களை இயக்க வேண்டும். அவற்றுக்கான திரைக்கதைகளையோ ஒளிப்பதிவு சார் விடயங்களையோ என்னால் முழுமையாகக் கையாள முடியும். நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க வேண்டும். இப்பவும் இரண்டு திரைக்கதைகள் இருக்கின்றன. அலைக்கழிந்த என் வாழ்வில், அவற்றைப் படமாக்கக்கூடிய அவகாசமும், சூழ்நிலையும் கூடிவரவில்லை. ஈழ சினமாவில் என் தடயங்களை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுப் போகவே விரும்புகிறேன். எனது கடந்தகால அனுபவங்களை நூல்களாகவும் கலை வடிவங்களாகவும் வெளிக்கொணர வேண்டும். முக்கியமாக, எனது போர்க்கால ஒளிப்படங்களைச் சர்வதேச ரீதியிற் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும். அவற்றை நூல்களாக்கி வெளியிட வேண்டும். புனைவுசாராப் படங்கள் (Documentary) சிலவற்றை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் உடனடியாகச் சாத்தியமாகப் போவதில்லை. எனினும், இயன்றவரை இவற்றை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.
இந்த நேர்காணல், 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டது. சுருக்கமான ஒரு பகுதியினை, ‘மின்னம்பலம்’ வெளியிட்டுள்ளது.
நன்றி: திரு. அருள் எழிலன் (ஊடகர், கலைஞர்), ‘மின்னம்பலம்’