இலங்கை இறுதிப்போரைப் பிரதிபலிக்கும் ஒளிப்பட நூலின் வெளியீட்டு நிகழ்வு
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் அவலங்களையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலையும் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களைக் கொண்ட, THROUGH THE GREY ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்ற ஒளிப்பட நூலின் வெளியீட்டு நிகழ்வு, 2019-10-26 அன்று நோர்வேயில் நடைபெறவுள்ளது.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக, நோர்வேயில் உள்ள புதிய Utsikten மண்டபத்திலே நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும்.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன், 400 பக்கங்களைக் கொண்ட இந்த ஒளிப்பட நூலைப் பதிப்பித்துள்ளது Wide Vision Studio.
சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களால் இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட பல நூறு ஒளிப்படங்களைக் கொண்டிருக்கும் இந்த நூல், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஏற்கெனவே வெளிவந்திருக்கும் ஒளிப்படங்களுடன் இதுவரை வேறெங்கும் வெளிவந்திருக்காத ஒளிப்படங்களையும் கொண்டிருக்கிறது.
இந்த ஒளிப்பட நூலின் முதற்பதிப்பை வெளிக்கொண்டுவரும் பணியில், Wide Vision Studio என்னும் கலை, இலக்கிய, ஊடகவியல் சார் இயக்கத்துடன் இணைந்து, பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம்.