ஜென்சி யில் இசையும் காலை
இன்றைய எனது காலை, ஜென்சியின் குரலினிமையில் இசைகிறது.
அன்பிற்கும் நட்பிற்குமுரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களின் திரைப்படங்களிலே சில முக்கியமான, மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர் ஜென்சி. இயக்குநர் மகேந்திரனின் கைத்தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், அவரது ‘ஜானி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்……’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறேன். திரைப்படங்களில் மிகவும் குறைவான பாடல்களையே ஜென்சி பாடியிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படங்கள், பாடல்கள் வாயிலாகத் தமிழ்ச் சூழலிலே குறிப்பிடத்தக்க இசைப் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. எனக்கு எப்போதும், ஆரம்பகாலத் திரையிசைப் பாடகிகளில் சுசீலா மற்றும் ஜானகி ஆகியோரை மிகவும் பிடிக்கும். அவர்களைப் போல, அதிக அளவிலான பாடல்களை ஜென்சி பாடியிருக்கவில்லை எனினும், அவர்களதைப் போன்ற தனித்துவமான குரலினிமையால் எப்போதும் மனதில் ஒலித்துக்கொண்டிருப்பவர் ஜென்சி. கேட்கும்போதே, ஏனைய பாடகிகளின் பாடல்களில் இருந்து இவரது பாடல்களைப் பிரித்துணர முடியும். ஜென்சியின் தனித்துவமானதும் நுட்பமானதுமான குரல் வெளிப்பாட்டுத் திறனை அதிகம் பயன்படுத்தியவர் இசையமைப்பாளர் இளையராஜா. நல்ல குரல்வளத்தோடு ஆரோக்கியமாக இப்போதும் இருக்கும் ஜென்சியை, திரையுலகம் அல்லது தமிழ் இசையுலகம் கண்டுகொள்ளாதிருப்பது வருத்தத்திற்குரியது.
இரு பறவைகள்…, தம்தன நம்தன…, இதயம் போகுதே…,என் வானிலே…, தெய்வீக ராகம்…, காதல் ஓவியம்…, அடி பெண்ணே…, என்னுயிர் நீதானே…, ஆயிரம் மலர்களே…, விழியில் விழுந்து…, ஒரு இனிய மனது…
இப்படியாகத் தொடங்கும் திரையிசைப் பாடல்களெல்லாம், பெரும்பாலும் வரிகளாலோ காட்சிகளாலோ அல்ல, ஜென்சியின் குரலினிமையாலும் இசையாலும் என்னுள் நிறைந்திருப்பவை.
2016-05-13
அமரதாஸ்