நோர்வே தமிழ்ச் சங்கத்தின் மோசடி அறிக்கைக்கு அமரதாஸ் அவர்களின் மறுப்பு அறிக்கை
THROUGH THE GREY ZONES – PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்னும் எனது புதிய ஒளிப்பட நூலை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பில், கண்ணியமற்றதும் மோசடியானதுமான அறிக்கையொன்றினை 2019-11-07 அன்று நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலே பல ‘கோளாறுகள்’ காணப்படுவதுடன், உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளன. அந்த அறிக்கை கண்டனத்திற்குரியதாகும். அதற்கா
நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு 2019-11-08 அன்று நான் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதி, கீழே இணைக்கப்பட்டுள்ளது.
// Norway Tamil Sangam
Fjellstuveien 26,
0982 Oslo
Norway
நோர்வே தமிழ்ச் சங்கம், 2019-11-07 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து…
எனது THROUGH THE GREY ZONES என்னும் ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சை குறித்து, நோர்வே தமிழ்ச் சங்கம் நேற்று (2019-11-07) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சர்ச்சையைத் தீர்க்க முயலும் எத்தனம் வரவேற்கத்தக்கது. ஆனால், வழிமுறைகள் எதுவும் அறிவுபூர்வமானதாகவோ அறம் சார்ந்ததாகவோ இல்லை. அந்த அறிக்கையிலே பல கோளாறுகளும் ‘பூசிமெழுகும்’ தன்மையும் காணப்படுகின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளன. அவை குறித்த விரிவான விளக்கங்களை உள்ளடக்கிய மறுப்பறிக்கையினை ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடுவேன். இப்போது நான் இங்கிலாந்தில் இருப்பதால் அதை உடனடியாகச் செய்ய முடியவில்லை. எனது இருப்பிடத்திற்குச் சென்றபின்னர், விரைவில் எனது மறுப்பறிக்கை வெளியாகும். இதுவரை, என்னால் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் அனுப்பப்படவில்லை என்பதைப் பதிவுசெய்கிறேன். நோர்வே தமிழ்ச் சங்கம் தொடர்ந்தும் தவறிழைக்கிறது. அது தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், எனது முழு உடன்பாடு இல்லாமல் எனது நூல் தொடர்பில் நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் இனி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுவன வன்முறையாகவும் அற மீறலாகவுமே இருக்கும். (எனது நூலில் எத்தகைய மாற்றங்களையும் உள்ளீடுகளையும் யாரும் செய்ய முடியாது.) அத்தகைய நிலை இனியும் ஏற்படுமாயின், என்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். தேவை ஏற்படுமாயின், மின்னஞ்சல் மற்றும் மெசஞ்சர் உரையாடல்கள், உரையாடல் ஒலிப்பதிவுகள், எனைய ஆதாரங்கள், எனது ஒளிப்பட நூலின் மாதிரிப் பிரதிகள், ஒப்பந்தம் போன்றவை பயன்படுத்தப்படும்.
என் பக்கம் உண்மையும் ஆதாரங்களும் உள்ளவரை நான் யாருக்கும் பயந்து ஒதுங்கிவிட மாட்டேன். எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் நியாயமான பதில்கள் இருக்கின்றன. எல்லா அவறூதுகளையும் குழிபறிப்புகளையும் கடக்கும் அறவலிமை கொண்டிருக்கிறேன். என்னுடன் இணக்கமாகப் பேசி, அனைத்தையும் பரிசீலித்து எனது நூலை சுமூகமாக வெளியிட நோர்வே தமிழ்ச் சங்கம் முன்வருமாயின் அதனை வரவேற்பேன். எனது வேண்டுகோள், எதையும் தீர ஆராய்ந்து பிரச்சினைகளை அறவழியிலும் அறிவுபூர்வமாகவும் தீர்த்துக்கொள்ளுங்கள். முடியவில்லையெனில் எதையும் செய்யாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள். எனக்கு எதிராக முன்வைக்கப்படுகிற அவதூறுகளையெல்லாம் சகித்துக்கொண்டு, ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வருங்கால நன்மை கருதியே நான் செயற்படுகிறேன்.
இப்படிக்கு,
அமரதாஸ்
2019-11-08 //
நோர்வே தமிழ்ச் சங்கம் சார்பிலே என்னுடன் தொடர்பிலிருந்த சஞ்சயன், எனது கையெழுத்திற்காக ஒப்பந்த வரைவினை அவசரகதியிலே அனுப்பியபோது, சில தவறுகள் அல்லது திரிபுகள் மற்றும் தெளிவின்மைகள் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒப்பந்தம் குறித்த எனது பரிந்துரைகள், முழுமையாகவோ தெளிவாகவோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முரண்பாடுகளைத் தவிர்த்து, நூல் வெளியீட்டைச் சுமுகமாக முன்னெடுக்கும் நல்லெண்ணத்துடன் ஒப்பந்தம் குறித்த மேலதிகத் திருத்தங்களை வலியுறுத்துவதை நிறுத்திக்கொண்டேன். எது எப்படியிருந்தாலும், இப்போதைய முரண்பாட்டு நிலையிலே அந்த ஒப்பந்தமானது முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்த நூலின் ‘வெளியீட்டாளர்’ யார் என்ற தெளிவான தகவல் ஒப்பந்தத்திலே இடம்பெறவில்லை. ஒப்பந்த நகலை முன்வைத்தே அதுபற்றி விரிவாக விளக்க முடியும். ஒப்பந்த முன்னெடுப்பானது, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நோக்கு நிலையிலே தந்திரமானதும் உள்நோக்கம் கொண்டதுமான செயற்பாடாகவே இருந்திருக்கிறது. எது எப்படியிருந்தாலும், இப்போதைய முரண்பாட்டு நிலையிலே எனக்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்கக்கூடியதாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. ஒப்பந்தத்துக்கு அப்பால், நூலின் காப்புரிமையாளரும் வெளியீட்டாளரும் அமரதாஸ் ஆகிய நான் தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன.
வெளியீட்டாளர் பற்றிய விபரத்தை நான் மாற்றியிருப்பதாகச் சொல்லியிருப்பது, அப்பட்டமான பொய். நூல் தொடர்பான எந்தவிதமான உரிமைகளும் என்னுடையதாகவே இருக்கும் என்பது, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக உள்ள சஞ்சயனுக்கும் எனக்கும் இடையில் இருந்த உடன்பாடு. முதலில் ISBN இலக்கம் சுவிஸில் பெறுவதாக இருந்தது. அதை உடனடியாகப் பெறுவதில் எனக்குச் சிரமம் இருந்தமையாலே தான், சஞ்சயன் நோர்வேயில் எடுத்துத் தந்திருந்தார். ISBN இலக்கத்திற்கான பதிவை மேற்கொள்ளும் போது, நோர்வே தமிழ்ச் சங்கமே நூலின் ‘வெளியீட்டாளர்’ என்று பதிவு செய்திருக்கிறார். ஒரு நூலாசிரியருக்கு அல்லது வெளியீட்டாளருக்குப் பண உதவி செய்கிறவர், வெளியீட்டு உரிமையாளராக முடியாது. அது சாத்தியமெனில், எனது நூலுக்கான நிதியை வழங்க முன்வந்த Fritt Ord நிறுவனம் தான் வெளியீட்டாளராக இருந்திருக்க முடியும். இடைத்தரகராக இருந்த நோர்வே தமிழ்ச் சங்கம், எனது நூலின் வெளியீட்டு உரிமையினை வஞ்சகமாகப் பறிக்க முனைந்திருக்கிறது. எனது நூலுக்கான முதலாவது விளம்பரத்தை, வீடியோ வடிவில் நான் தான் வெளியிட்டிருக்கிறேன். (2019-09-17) அதில், Wide Vision Studio நூல் வெளியீட்டைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறேன். அதை முகநூலில் நான் பதிவிட்ட பின்னர், நோர்வே தமிழ்ச் சங்கச் செயலாளர் சஞ்சயன் அதற்கு ‘இதயக்குறி’ (Love) போட்டிருக்கிறார்.
நூலின் இரண்டாம் பக்கமானது, நூல் உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது. புதிதாக நான் திட்டமிட்டு எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஏற்கெனவே அச்சாக்கம் செய்யப்பட்டு, எனக்கும் சஞ்சயனுக்கும் வந்திருக்கும் நூல்களிலே ‘Publisher & Copyright owner: Wide Vision Studio, Amarathaas’ என்ற பதிவு மிகத் தெளிவாகவே இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நோர்வே தமிழ்ச் சங்கம் சார்ந்த யாரும் இது பற்றி அப்போது கேட்கவேயில்லை. இரண்டாம் பக்கத்தில், ‘Layout & disign’ பகுதியிலே தன் பெயரையும் உள்ளிடுமாறு சஞ்சயன் சொல்லியிருந்தார். ‘Publisher & Copyright owner’ பகுதியை அவர் கவனிக்காமலா விட்டிருப்பார்?
ISBN இலக்கமானது, சுவிஸில் எடுக்கப்பட்டிருந்தால் நோர்வே தமிழ்ச் சங்கத்தினர் என்ன செய்திருப்பார்கள்? ISBN இலக்கமானது, வெளியீட்டு உரிமையை நிர்ணயிக்கும் தகைமை கொண்டதல்ல. அதன் பயன்பாடு அல்லது நோக்கம் வேறானது. நோர்வேயில் எனது நூலுக்காக ISBN வழங்கிய நிறுவனத்திடம், அதை நீக்கம் செய்யுமாறு கோரியிருக்கிறேன்.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பெயரை, எனது அறிமுக உரையிலே உள்ளடக்காமல் நன்றி தெரிவிக்கும் பகுதியிலே உள்ளடக்கியிருந்தேன். அறிமுக உரையிலும் பெயரை நுழைக்குமாறு சொல்லப்பட்ட பின்னர், அதை வலிந்து நுழைக்கவேண்டியிருந்தது. இந்த நூல் உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்து இற்றைவரையான நடவடிக்கைகள் அனைத்துமே என்னிடம் பதிவுகளாக உள்ளன.
எனது நூலில் நான் உள்ளடக்கிய போர்க்கால ஒளிப்படங்கள் அனைத்தையும் நானே உருவாக்கியிருக்கிறேன் என்பதற்கான துல்லியமான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறேன். அந்தப் படங்களின் நம்பகத்தன்மையைப் ‘பரிசீலிக்க’ வேண்டுமெனில், நம்பகமான ‘பொறிமுறை’ அவசியம். சர்ச்சையில் சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான பங்கேற்பும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் அவசியம். எனது பெயரில் நான் முன்வைக்கும் ஒளிப்படங்கள் அனைத்தினதும் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் வல்லமை இல்லாமல், சர்வதேச மட்டங்களில் வெளிப்படையாக இயங்கிக்கொண்டிருக்க முடியுமா? எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இடர்களையும் பொருட்படுத்தாமல் சுயாதீனமாக நான் இயங்கிக்கொண்டிருப்பது, எனது தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல. யார் என்ன சொன்னாலும் எவர் எனக்கு எதிராக நின்றாலும் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி, அறத்தின் வழியில் இயன்றவரை பயணிப்பேன்.
ஒரு சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் இருந்துகொண்டு, ஈழத்தமிழினத்தின் சார்பில் சுயாதீனமாக இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கு எதிராக இத்தனை நாடுகளில் இருந்து கிளம்பியிருக்கிறார்களா? அத்தகையவர்களில் யாராவது ஒருவர், தன்னிடம் உள்ளதாகச் சொல்லும் ‘ஆதாரங்களை’ எடுத்துக்கொண்டு நேரில் வந்து, நம்பகமான மூன்றாம் தரப்பின் முன்னிலையில் என்னுடன் இருந்து ‘அனைத்தையும்’ பரிசீலிக்கத் தாயாரா? இதுவரை, பொதுவெளியில் ‘எனக்கு எதிராக’ ஏவப்பட்ட அனைத்துக் கருத்துகளும் ஆதாரங்கள் அற்றவை. அவை, பல்வேறு உள்நோக்கங்களுடன் வலிந்து புனையப்படவை. எனவே, வதந்திகளாகவும் அவதூறுகளாகவுமே அவை பார்க்கப்படும். ‘என்னை’ நன்கு அறிந்திராத சிலரின், கண்ணியப் பிறழ்வான உளறல்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. என்னை நேரில் சந்தித்து ‘அனைத்தையும்’ பரிசீலிக்கும் திராணி, இதுவரையிலே ‘சர்ச்சைகளில் சம்மந்தப்பட்ட’ யாருக்கும் வரவில்லை. அவசியமான தருணங்களிலே எனது எதிர்வினைகளைப் பொதுவெளியில் முன்வைத்துவிட்டு, நான் நிதானமாக எனது வழியிலே பயணித்துக்கொண்டிருக்கிறேன். கொடிய போரில் உழன்ற ஈழத்தமிழரின் அவலங்களை நான் சுமந்து கொண்டிருக்கிறேன்.
இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி நான் உருவாக்கிய எனது ஒளிப்படங்களை, ஈழத்தமிழர் சார்ந்து நானே வெளியிடும்போது, யாரும் ‘தடை’ போட முடியாது. நான், மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பயந்தவனல்ல. நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளபடி, என்னுடன் நேரில் பேசிய ‘மூத்த போராளிகள்’ யார்? அப்படி யாரும் இதுவரை என்னுடன் ஆக்கபூர்வமாகப் பேசியதில்லை. அவசியம் ஏற்பட்டால், எப்போதும் யாரும் என்னைச் சந்திக்க முடியும். யாரும் எதுபற்றியும் என்னுடன் பேச முடியும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரிவொன்றிலே செயற்பட்ட ஒருவருடன் தொலைபேசியிலே முன்னர் உரையாடியிருக்கிறேன். எனது போர்க்கால ஒளிப்படங்கள் தொடர்பான அவசியமற்ற ‘சர்ச்சை’ தொடர்பிலான விளக்கங்களை அவருக்குத் தெளிவாக வலியுறுத்திச் சொல்லியிருந்தேன். எனது படங்கள் சிலவற்றை, அவர் ‘தன்னுடையதாக’ வைத்திருப்பதை அறிந்து, சில உண்மைகளை அவருக்கு உறுதிப்படுத்த நினைத்தேன். அவரிடமிருக்கும் படங்களைப் ‘பரிசீலிக்க’ அனுப்புமாறு கூறியிருந்தேன். ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் அவரை, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துமிருந்தேன். அவர், பிறகு என்னுடன் தொடர்புகொள்ளவில்லை. அவர், எனது நூலின் சர்ச்சையில் இப்போது சம்மந்தப்பட்டிருக்கிறார். நோர்வே தமிழ்ச் சங்கத்திற்குத் தவறான தரவுகளை வழங்கியிருக்கிறார். அவரது மோசடிகளை நான் அறிந்திருந்தும், அவரது பெயரைப் பொதுவெளியில் இதுவரை பயன்படுத்தியதில்லை. அவர் மீதான கரிசனத்தினால், அவரது மோசடிகளைப் பொதுவெளியில் இதுவரை அம்பலப்படுத்தாது பொறுமை காத்து வந்திருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால், அவருடனான எனது தொடர்பாடல் ஆதாரங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்கள் போன்றவற்றை முன்வைத்து அவரது தவறான நிலைப்பாடுகளையும் மோசடிகளையும் பொதுவெளியிலே அம்பலப்படுத்த முடியும்.
எனக்கெதிராக, சமூக வலைத்தளங்களில் அவதூறுகளைப் பரப்புகிற ஒருவர், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவர், எனது ஒளிப்படங்கள் பலவற்றைச் சுவீகரித்து வைத்திருந்து, ‘தன்னுடையதாகப்’ பயன்படுத்தியிருக்கிறார். Trevor Grant என்ற அவுஸ்திரேலிய ஊடகரின் நூலொன்றுக்கென, என்னுடைய பல ஒளிப்படங்களைத் தன்னுடையதாகச் சொல்லி வழங்கியிருக்கிறார். பின்னர், Trevor Grant என்பவராலும் வேறு சிலராலும் அவரது மோசடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தின் அதி தீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் அவரது மோசடிகளை அம்பலப்படுத்தக்கூடிய ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன. சுயாதீனக் குழுவொன்றின் நீதி விசாரணைகளில் அல்லது சட்டரீதியான விசாரணைகளில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.
Trevor Grant எழுதிய நூலில் எனது ஒளிப்படங்கள் பல உள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை உரியமுறையிலே பரிசீலித்து உண்மைகளைக் கண்டடைய ‘யாரும்’ தயாராக இருக்கவில்லை. Trevor Grant இறந்துவிட்டமையால், சில விடயங்களைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்படக்கூடும். எனினும், அவருடன் சேர்ந்து பணியாற்றிய வேறு சிலர் இப்போதும் உள்ளனர். அவர்களது கருத்துகள் கேட்கப்படவில்லை. எனது ஒளிப்படங்கள், சரியான முறையில் ஆராயப்படவேயில்லை. சர்ச்சையிலே சம்மந்தப்பட்ட தரப்பினரை என்னுடன் பேசவைக்காமல் (எனக்கு அனைத்தையும் மறைத்து), அவர்களது நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, தன்னிச்சையாகவும் தவறான முறையிலும் ‘விசாரணைகளை’ மேற்கொண்டிருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம். அதற்கு, இந்த அறிக்கையே சாட்சியாக இருக்கிறது. அடாவடித்தனமான முறையிலே, ‘போலீஸ்’ வேலை செய்ய அல்லது ‘நீதிபதி’ வேலை செய்ய நோர்வே தமிழ்ச் சங்கம் முயன்று தோற்றிருக்கிறது. என்னுடன் எதையுமே கலந்துரையாடாமல், என்னை ஒதுக்கி வைத்துவிட்டு, எனக்கெதிராகச் செயற்படும் மோசடியாளர்களின் பின்னாலே இழுபட்டுத் தோற்றுப்போயிருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம்.
எனது பல ஒளிப்படங்கள் அந்த நூலில் இருக்கின்றன என்று, சில இடங்களிலே சொல்லியிருக்கிறேன். அந்த நுலாசிரியரிடம் நானே நேரடியாக அவற்றைக் கொடுத்திருப்பதாக நான் எங்குமே சொன்னதில்லை. பலரது கைகளில் மாறி மாறி, உருவாக்கியவர் யாரென்று தெரியாமலேயே எனது பல போர்க்கால ஒளிப்படங்கள் பல்வேறு தரப்பினராலும் கையாளப்பட்டுள்ளன. ‘சில காரணங்களால்’ எனது அடையாளங்களை மறைத்து, மக்களின் அவலங்கள் சார்ந்த பல ஒளிப்படங்களைப் போர்க்காலத்திலும் பின் போர்க்காலத்திலும் பலவழிமுறைகளில் வெளியிட்டிருக்கிறேன். எனது படங்களாக என்னால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும் படங்களையே எனது பெயருடன் தற்காலத்தில் நான் வெளியிட்டு வருகிறேன். எனது பெயர் தவிர்த்து, ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கும் எனது படங்களையும் இதுவரை வேறெங்கும் வெளியிடப்படாத எனது படங்களையும் இப்போது எனது பெயருடன் நான் வெளியிடுவதற்கான அவசியக் காரணங்கள் உள்ளன.
சர்வதேச மட்டங்களில், ஒரு ஆவணத்தின் உண்மைத்தன்மையானது அதை உருவாக்கியவரின் பின்னணியில் இருந்தும் உறுதிசெய்யப்படும். நேரடியான அல்லது துலக்கமான உரிமையாளரைக் கொண்டிராத, நம்பகத்தன்மை கொண்டிராத எந்த ஆவணமும் ‘சட்டரீதியான’ விசாரணைகளிலே செல்லுபடியாவது கடினம். ‘போர்க்குற்றம்’ அல்லது ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்’ சார்ந்த நடவடிக்கைகளை வலியுறுத்தி, எனது ஆவணங்களையும் சாட்சியங்களையும் துலக்கமாக, ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. போரிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழிம் சார்பிலான சாட்சியங்களை, ஒரு சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் ஊடக அறத்தின் வழியிலேயே வழங்கிவருகிறேன். ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக, எனது ஒளிப்படங்களுடன் பல்வேறு தளங்களிலே பயணித்திருக்கிறேன்.
ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை என்று, நான் எந்த இடத்திலும் சொன்னதில்லை. அந்த இயக்கத்தையும் அதில் இருந்து செயற்பட்ட பலரையும் நான் அறிந்திருக்கிறேன். அந்த இயக்கத்துடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. எனினும், எத்தகைய சந்தர்ப்பத்திலும் அந்த இயக்கத்தின் பெயரை நான் எனது சுய தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டதில்லை. என்னைப் புலிகள் இயக்கத்தின் ‘எதிராளி’ போலக் காண்பிக்க முற்படும் நோர்வே தமிழ்ச் சங்கம், எனக்கு எதிரான வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பித் திரிவோரின் வரிசையில் சேர்ந்துகொள்கிறதா?
‘ஒளிப்படங்களின் உரிமம் மீது சர்ச்சை இருக்கிறது’ என்னும் அர்த்தப்படும் குறிப்பினை எனது நூலில் இணைக்க, நோர்வே தமிழ்ச் சங்கம் முயல்வதை நான் ஏற்க முடியாது. எனது நூலின் ஒளிப்படங்கள் அனைத்துமே என்னுடையவை என்னும் அடிப்படையிலும், வருங்காலத்தில் எழக்கூடிய வரலாற்று மயக்கம் மற்றும் உரிமைச் சிக்கல்கள் போன்ற எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், அத்தகைய குறிப்பினை இணைக்க முயலும் கோரிக்கைக்கு நான் உடன்பட முடியாது.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்னுடன் அடாவடித்தனமாக நிகழ்த்திய மின்னஞ்சல் உரையாடல்கள் என்னிடம் உள்ளன. நிறுவன வன்முறை மற்றும் அறமீறல் குறித்து நான் பலமுறை எடுத்துரைத்தேன். எனது தீவிரமான பிரயத்தனத்தின் பின்னர், நோர்வே தமிழ்ச் சங்க அலுவலகத்தில் திரு. சிறி நவரட்ணம் ( நோர்வே தமிழ்ச் சங்கத் தலைவர்), திரு. சஞ்சயன் செல்வமாணிக்கம் (நோர்வே தமிழ்ச் சங்கச் செயலாளர்) ஆகியோர் மட்டுமே என்னைச் சந்தித்தார்கள். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை நான் முன்னரே கேட்டிருந்தும் அதனை மறுத்திருந்தார்கள். எனது பயண ஒழுங்குகளை அவர்கள் ரத்துச் செய்திருந்த நிலையில், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், சொந்தச் செலவிலே நோர்வே சென்று அவர்களை நான் சந்திக்கவேண்டியிருந்தது. என்னை ஒதுக்கிவைத்து, அடாவடித்தனமாக எனது நூலிலே சில மாற்றங்கள் செய்து நூலை வெளியிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
அது ஒரு மோசமான சந்திப்பு. இணக்கமாகப் பேசி எதையும் பரிசீலிக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களுடன் நான் அன்று நிகழ்த்திய நேரடி உரையாடலை முழுமையாகப் பதிவு செய்தனர். சந்திப்பு முடிந்த பின்னர், அந்த ஒலிப்பதிவின் பிரதி எனக்குத் தரப்படுமென்று முன்னரே சொல்லப்பட்டிருந்தது. தவறான முன்முடிவுகளோடும் தமது வலையில் என்னை விழுந்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் இருந்த அவர்களால், உண்மை சார்ந்த உரையாடலை முன்னெடுக்க முடியவில்லை. இடையிலேயே அவர்கள் உரையாடலை முறித்துக்கொண்டனர். அப்போது, உரையாடல் ஒலிப்பதிவின் பிரதியைத் தருமாறு கேட்டேன். இயலுமென்றால் அதைத் தருவதாகச் சொன்னதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் அடாவடித்தனமாகச் சொன்னார். அவரது உடல் மொழியும் வார்த்தைகளும் கொடூரமானவையாக இருந்தன. அவரே, தான் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் ஆதாரங்களை என்னிடம் மின்னஞ்சல் வழியாகக் கேட்டு என்னை நெருக்கடிக்குள்ளாக்கி முரண்பாட்டை வளர்த்துக்கொண்டிருந்தவர். எப்படிப்பட்ட ‘நீதிமான்’ அவர்? ஒலிப்பதிவின் பிரதி தரப்படாமல் வன்முறை வழியிலே வெளியேற்றப்பட்டேன். மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானேன். மறுநாள், எனது நூல் வெளியிடப்பட இருந்தது. எனது முயற்சியாலும் நோர்வே வாழ் தமிழ்ச் சமூகத்தினர் சிலரின் முயற்சியாலும் அடாவடித்தனமாக நடாத்தப்பட இருந்த நூல் வெளியீட்டு நிகழ்வு தடுக்கப்பட்டது.
நூலின் உள்ளடக்கம் சார்ந்த எத்தகைய பிரச்சினைகளுக்கும் நான் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறபோது, அதுபற்றிய சர்ச்சையில் சஞ்சயனோ நோர்வே தமிழ்ச் சங்கமோ ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும்? அடாவடித்தனமான ‘போலீஸ்’ பாத்திரம் எதற்கு? சர்ச்சைக்குரிய வேறு சிலரைத் தேடிச்சென்று நேரில் சந்தித்துவிட்டு, என்னை நேரில் சந்திப்பதையோ என்னுடன் தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்த்துவிட்டு, தவறான முன்முடிவுகளைச் சஞ்சயன் எடுத்திருந்தார்.
உண்மை அறியும் நல்லெண்ணம் இருந்திருந்தால், நேர்மையுடனும் நிதானமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அனைத்து விடயங்களையும் அணுகியிருக்க வேண்டும். என்னுடன் கண்ணியமாக உரையாடியிருக்க வேண்டும். ‘தலைமறைவாக’ இருந்துகொண்டு நயவஞ்சகமான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்புகிறவர்களின் பக்கம் சாய்ந்திருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம். என் மீது குற்றம் சாட்டிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் யாராவது, தம்மிடமிருப்பதாகச் சொல்லும் ‘ஆதாரங்களுடன்’ வந்து, அனைத்தையும் துல்லியமாகப் பரிசீலிக்க முயற்சிக்கலாமே. பகிரங்கமாக இத்தனை காரியங்களை மேற்கொள்ளும் எனக்கு மட்டும் ‘பாதுகாப்புப் பிரச்சினை’ இல்லையா என்ன? என் மீது ‘குற்றம்’ சாட்டுபவர்கள், அதை ஆதாரபூர்வமாக என்னிடம் நிரூபிக்க வேண்டும். என் மீது யாரும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் முடியும். நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையில், ‘போராளிகள்’ என்ற சொல் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகிறவர்கள் யாரும் ஒளிப்படச் சர்ச்சை விடயத்தில் நேர்மையாகவோ உண்மையாகவோ நடந்துகொள்ளவில்லை. சர்ச்சையில் சம்மந்தப்பட்ட அவர்களது நோக்கம் நேர்மையானதாக இருந்திருந்தால், என்னை அவர்கள் ஒரு எதிராளியாகப் பார்த்திருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை நெருக்கடிகளும் எனக்கும் இருக்கின்றன. ஆனால், எங்கேயும் பதுங்கிக்கொண்டு இருக்காமல், எவரது நிழலிலும் ஒதுங்கிக்கொள்ளாமல், மக்கள் நலன் சார்ந்து, விடுதலை அரசியல் உணர்வோடு ஒரு ‘போராளியாக’ இயங்கிக்கொண்டிருக்கிறேன். என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற விளக்கத்தையும், நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தெளிவையும் கொண்டிருக்கிறேன். எனது ‘அறக்கோபம்’, தமிழ்ச் சமூகத்தாலே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி, சுயாதீன ஊடகராக இருந்து நான் உருவாக்கிய போர்க்கால ஆவணங்களை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயராலே சிலர் ‘பங்குபோட’ முயல்வது இழிவானது. அத்தகையவர்கள், அந்த இயக்கத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, அந்த இயக்கத்தின் பிரிவுகளுக்கு எதிரானவனாக என்னைக் கட்டமைக்க விழைகிறார்கள். புலிகள் இயக்கத்திற்கும் எனக்கும் இடையிலிருந்த ‘உறவுநிலை’ அல்லது ‘ஊடாட்டம்’ பற்றி அறியாதவர்களின் வெற்றுக் கூச்சல்களை நான் பொருட்படுத்துவதில்லை. தனிப்பட்ட நலன் சார்ந்தோ மோசமான உள்நோக்கத்துடனோ புலிகள் இயக்கத்தின் பெயரை நான் பயன்படுத்திக்கொள்வதில்லை. புலிகள் இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளை நான் திட்டமிட்டு அவதூறு செய்வதில்லை. அவசியமான இடங்களிலே, புலிகள் இயக்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவதும் இல்லை.
முன்னொரு காலத்திலே, விடுதலைப் புலிகளின் மகளிர் புகைப்படப் பிரிவினரின் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் மத்தியில் ஒளிப்படக்கலை தொடர்பில் பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கிறேன். (அவற்றிலே கலந்துகொண்ட சிலர் இப்போதும் இருக்கிறார்கள்.) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ நிகழ்விலே ஊடகவியல் சார் அமர்வில், ‘உலகளாவிய ரீதியிலும் ஈழப்போர்க் காலத்திலும் ஒளிப்படக் கலையின் இயங்கு நிலை’ என்னும் தலைப்பிலே கட்டுரை வாசித்திருக்கிறேன். அதில் விடுதலைப் புலிகளின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பிலான விடயங்களை விரிவாக்கப் பதிவுசெய்திருக்கிறேன். ஆக, விடுதலைப் போராட்டத்தில் புகைப்படப் பிரிவினரின் பங்களிப்பை நன்கு அறிந்தவன் நான். அந்தப் பிரிவில் இருந்தவர்கள், புலிகளின் வீர வரலாற்றையும் தியாக வரலாற்றையும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின், அதன் பிரிவுகளின் ‘நன்மதிப்பை’ நீர்த்துப்போகச் செய்யும் வகையில், ‘உதிரிகள்’ சிலரின் செயற்பாடுகள் அமைவது ஆபத்தானது. நேரில் என்னை எதிர்கொள்ளத் திராணியற்ற, நேரில் என்னுடன் எதையும் பரிசீலித்து விவாதிக்கத் தகுதியற்ற ‘உதிரிகள்’, இப்போது ஒன்றாகி நிறுவனமயப்படுவதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் பிரிவுகளிலே செயற்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு, எனக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் சிலரை நான் இப்போது இனங்காண்கிறேன். இப்போது, ஆங்காங்கே உதிரிகளாக இருந்துகொண்டு எனக்கு எதிரான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன? ஈழத்தமிழரின் அவலங்களுக்குக் காரணமானோரின் நிகழ்ச்சி நிரலிலே அவர்கள் சிக்குண்டிருக்கிறார்களா? நான் பலமுறை பகிரங்கமாக அழைத்தும், ஒருவராவது என்னை நேரிலே சந்திக்காமல், மறைந்திருந்து புலம்பும் மர்மம் என்ன?
என்னுடைய சில போர்க்கால ஒளிப்படங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை ஏற்கெனவே சஞ்சயன் அறிந்திருந்தார். அவருடன் உரையாடும்போது, அவருக்கு நானே அதுபற்றிச் சொல்லியிருக்கிறேன். ‘சர்ச்சைக்குரியவர்களுடன்’ அவர் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்ட பின்னர், அல்லது என்னுடன் நேரடியாக ‘முரண்பட்ட’ பின்னர், என்னைக் ‘குற்றவாளி’ போலச் சித்தரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மடத்தனமானவை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அறிக்கை உருவாக்கத்திலே முக்கிய பங்கெடுத்திருக்கக்கூடிய சஞ்சயன், தனது தவறுகளை மூடிமறைத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் நோர்வே தமிழ்ச் சங்கத்திலே தனது அதிகாரத்தைத் தக்கவைக்கவும் என்னைப் பற்றியோ எனது நூல் பற்றியோ திரிபுவாதங்களை முன்வைத்திருக்கிறார். அடிப்படை அறமற்ற அத்தகைய மோசடி முயற்சிகளை ஆதாரபூர்வமாக முறியடித்திருக்கிறேன். அவரது குளறுபடிகளையும் பொய்களையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தன்னை ஒரு நீதிமானாகக் காட்ட முற்பட்டுத் தோற்றுப்போயிருக்கிறார் என்பதை, அவர் இன்னும் உணரவில்லை என்று நினைக்கிறேன். அவசியம் கருதி நான் வெளியிட்டிருக்கும் சில ஆதாரங்களில் இருந்து அவரது தப்புத்தாளங்களை எவரும் புரிந்துகொள்ள முடியும். என்னிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக்கொண்ட அவருக்குக் காலம் பதில் சொல்லட்டும் என்று காத்திருக்கிறேன். எனது பக்க நியாயங்களை உற்றுக்கேட்கும் நிலையில் அவர் இப்போது இல்லை. எனக்கெதிராக அவர் மோசமான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது நான் வன்மத்தை வெளிப்படுத்தியதில்லை. கண்ணுக்குத்தெரியாத ஒரு சதிவலையிலே சிக்குண்டிருக்கும் அவரை மீட்டெடுத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணமே என்னுள் இருக்கிறது. அவரை என் அருகில் இருத்தி, அவரது தப்புத்தாளங்களை அவருக்கு ஆதாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்கு அவர், அகங்காரத்தையும் (ego) தவறான முன்முடிவுகளையும் கைவிட்டு, தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டு என்னைக் கண்ணியமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவரை மட்டுமல்ல, என்னைப் பற்றிய தவறான முன்முடிவுகள் கொண்டிருக்கக்கூடிய எவரையும் நான் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மனிதர்கள் தவறிழைப்பதும் உணர்ச்சிவசப்பட்டுத் தவறான முடிவுகளை அடைவதும் புரிந்துகொள்ளக்கூடியவை தான். ஆனால், அடுத்தவரை அல்லது சமூகத்தை மோசமாகப் பாதிக்கும் வகையிலே ஒருவர் தொடர்ந்து தவறிழைப்பது அனுமதிக்கப்பட முடியாதது. சிலர், தெரியாமலே தவறிழைக்கக்கூடும். சிலர், தெரிந்துகொண்டே திட்டமிட்டுத் தவறு செய்யக்கூடும்.
எனது ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சைகளுடன் தொடர்புடைய யாராவது நல்ல நோக்கத்துடனும் கண்ணியமாகவும் நேரடியாக என்னை அணுகினால், அவர்களுடன் எது பற்றியும் எப்போதும் உரையாடத் தயாராகவே இருக்கிறேன்.
நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு 2019-10-23 அன்று நான் அனுப்பிய மின்னஞ்சலின் பகுதி, கீழே இணைக்கப்பட்டுள்ளது.
”உண்மை அறியும் வழிமுறை மிகவும் இலகுவாகவே இருக்கிறது. நீங்கள் வீணான சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நெருக்கடியான காலகட்டத்தில் அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையிலே பரிமாறப்பட்டு, Trevor Grant தனது நூலில் பயன்படுத்திய எனது படங்களை, அவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் நீங்கள் உறுதிப்படுத்த விழைவது சரியான வழிமுறையாக இருக்க முடியாது. எனினும், அவரது நூலில் உள்ள எனது படங்களை நான்தான் பதிவுசெய்திருக்கிறேன் என்பதை என்னால் நேரில் வேறு சில தரவுகளுடன் உறுதிப்படுத்த முடியும் என்று தெளிவுபடுத்தியும் நீங்கள் கேட்கவில்லை. மின்னஞ்சலில் ஒருவர் இன்னொருவருக்குப் படங்களை அனுப்பிய ஆதாரத்தை மட்டும் கொண்டு, அனுப்பியவர் தான் அந்தப் படங்களைப் பதிவுசெய்தார் என்று எப்படி நியாயப்படுத்த முடியும்? நான் சொல்கிறேன், உலகின் எத்தகைய நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் முன்னிலையிலும் எனது நூலில் உள்ள ஒளிப்படங்கள் அனைத்தையும் நான் தான் பதிவுசெய்திருக்கிறேன் என்பதை நிரூபிக்க என்னால் முடியும்.உறுதிப்படுத்தல் தாமதமாகுமெனில், நூல் வெளியீட்டை நீங்கள் நிறுத்தியிருக்கலாம். அது, ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய விடயமாக இருந்திருக்கும். மீறி நீங்கள் எனது நூலை நான் இல்லாமலும் தவறான குறிப்புடனும் வெளியிடுவது அறமேயில்லை. எனது படங்கள் அனைத்தையும் நான் பதிவாக்கியவை என்ற உறுதிப்படுத்தலை என்னால் நேரில் மட்டுமே செய்ய முடியும். அதுதான் சாத்தியமான, விஞ்ஞான பூர்வமான வழிமுறையாக இருக்கும். அதற்கான எனது கோரிக்கையை மறுத்திருக்கிறீர்கள். எனக்கு இருந்த அந்த வலிமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறீர்கள். உங்களை வெளியிலிருந்து யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் அல்லது நீங்கள் வெளி அழுத்தங்களால் பதகளிப்பிற்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
நான் கலந்துகொள்ளக்கூடிய சாதகமான சூழல் இருந்தும், நான் அழைக்கப்படாமல் எனது நூல் வெளியிடப்படுவது அறமேயல்ல. தவிர, நூலில் எனது கண்ணியத்தைச் சிதைக்கும் வகையிலான மேலதிகக் குறிப்புகள் உள்ளடக்கப்படுமானால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதுபற்றிப் பொதுவெளியில், ஊடகங்களில் நான் விரிவாக ஆதாரங்களுடன் பேசவேண்டியிருக்கும். நூலின் வெளியீட்டு நிகழ்வு அறிவிக்கப்பட்ட நிலையில், நோர்வே தமிழ்ச் சங்கம் மேற்கொண்டிருக்கும் நிறுவன வன்முறையாகவே இதைப் பார்க்கிறேன். உங்கள் அவசரத்தனங்களும் அறமற்ற செயல்களும் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு வருங்காலத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தும். நேரில் சந்தித்துச் சாட்சியமளிக்க எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நீங்களாகவே எனது ஒளிப்படங்களுக்கான உரிமம் தொடர்பிலான முடிவுகளை அறிவிக்கும் தகுதி உங்களுக்கில்லை. இந்தப் பிரச்சினையானது, பிற்காலத்தில் நிறுவன வன்முறைக்கு உதாரணமாகும்.
எனது இறுதிக் கோரிக்கையாக ஒன்றை முன்வைக்கிறேன். முன்னர் திட்டமிட்டிருந்தபடி, நூல் வெளியீட்டு நிகழ்விற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன. நீங்கள் என்னைச் சந்தித்து எனது சாட்சியங்களைப் பரிசீலிக்கும்வரை நூல் வெளியீட்டு நிகழ்வைப் பிற்போடுங்கள். அல்லது நூல் வெளியீட்டு முயற்சியில் இருந்து விலகிவிடுங்கள். THROUGH THE GREY ZONES – PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்ற நூலின் அனைத்து உரிமைகளும் எனது பெயரிலேயே உள்ளன. (Publisher & Copyright owner : Wide Vision Studio, Amarathaas) அனுசரணையாளரான நீங்கள் நூலில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. நூலின் அனைத்து விடயங்களுக்குமான பொறுப்புக்கூறும் அதிகாரத்தையும் தகைமையினையும் நான் கொண்டிருக்கிறேன்.”
நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் பகுதி :
//அமரதாஸ் நோர்வேயில் தங்கியிருந்த காலத்தில் அல்லது அதன் பின் இன்று வரை, புத்தக வெளியீடு சம்பந்தமாக எதுவித உத்தியோகபூர்வமான தொடர்புகளையும் எம்முடன் மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் பொதுப்பணியாற்றி வரும் நோர்வே தமிழ்ச்சங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது. அது பொறுப்புடன் செயற்பட்ட காரணத்தினால் தான் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது.//
எனது கருத்து :
இது அப்பட்டமான பொய். நான் நோர்வேயில் இருந்து இரண்டு மின்னஞ்சல்களும் லண்டனில் இருந்து இந்த அறிக்கை தொடர்பாக ஒரு மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறேன். அவற்றுக்கு இதுவரை பதிலளிக்கவேயில்லை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் புறக்கணிப்பிற்குப் பின்னரும், எதற்கும் தயாரான நிலையிலே நோர்வேயில் ஒரு வார காலம் சொந்தச் செலவில் தங்கியிருந்தேன். பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கியிருந்தேன். யாரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 40 ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் பொதுப்பணியாற்றி வரும் நோர்வே தமிழ்ச்சங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது தான். இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் பகுதி :
// இப்பொழுதும் நோர்வே தமிழ்ச்சங்கமானது இந்த விடயத்தை உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது. இதற்காக நாம் ISBN பதிவுக்கான அலுவலகம் மற்றும் இத்திட்டத்திற்கு உதவி வழங்கிய நிறுவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் இருந்து நேற்றுக் கிடைத்திருக்கும் பதிலின் அடிப்படையில் இதற்குப் பின்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளோம்.
1. நாமே இன் நூலின் தயாரிப்பாளர்/ வெளியீட்டாளர் என்ற பதிவு நோர்வே ISBN பதிவகத்தில் ஏற்கனவே உள்ளதால் இதனை குறிக்கும் ஒரு குறிப்பினை நாம் புத்தகத்தில் புதிதாக இணைக்கலாம் என்பதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது. எனவே இது புதிதாக நூலில் இணைக்கப்படும்.
2. இந்த நூலின் தயாரிப்பாளர்/வெளியீட்டாளர் ஆகிய நாம் புகைப்படங்கள் பற்றிய சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறிவிக்கும் தார்மீகக் கடமை உண்டு என்பதால், “இந்த நூலில் உள்ள புகைப்படங்களின் உரிமம் மீது சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்” என்னும் குறிப்பையும் இணைத்து இந்நூல் வெளியிடப்படும். நூல் வெளியீட்டிற்கு கலந்து கொள்வதற்கு அமரதாஸிற்கு அழைப்பு விடப்படும்.
3. இந்தப் புகைப்படங்கள் சர்சசைக்குரியன என்று தெரிந்து கொண்டே அதை வேண்டுமென்றே மறைத்துத் தமிழ்ச் சங்கத்திற்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் அதன் மூலம் ஏற்பட்ட சிரமங்களுக்கும் அபகீர்த்திக்குமான பொறுப்பினை அமரதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவற்றை அமரதாஸை நோக்கியும் பொது வெளியை நோக்கியும் நோர்வே தமிழ்ச் சங்கம் முன்வைக்க வேண்டிய சூழலை முதலில் உருவாக்கியது அமரதாஸே. அவருடன் இணைந்து தொடர்ந்து உள் விவகாரங்களையும் நியாயத் தன்மைகளையும் அறிந்து கொள்ளத் தவறி, எமது கருத்துக்களை அறிவதற்கு சற்றேனும் ஆர்வம் காண்பிக்காது, அமரதாஸின் நியாயமற்ற கூற்றுக்களின் பின்னர் தங்களை செலுத்த முற்பட்டோரும் இதற்குக் காரணமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், தவிர்க்க முடியாதவாறு, நோர்வே தமிழ்ச் சங்கம் இது தொடர்பாக என்ன நடந்தது என்பதை இன்று பொது வெளியில் கூறவேண்டிய அவசியத்தின் அடிப்படையில் இவ் அறிக்கை வெளியாகிறது.
இது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுகால வரலாற்றில் மிகுந்த வருத்தத்திற்குரிய விடயமே. இனிவரும் காலத்தில் இதுபோன்ற சிக்கலான விடயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த நூலானது அவசியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டியது என்பது எமது வரலாற்றுக் கடமையாகும்.


