அமரதாஸ் அவர்களின் ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சை குறித்து ஒஸ்லோவில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ‘Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka’ என்ற விவரணத் திரைப்படம், ஒஸ்லோவில் 2019-11-03 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. அது தொடர்பிலான கலந்துரையாடலும் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ‘THROUGH THE GREY ZONES : PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சை குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிலே ஊடகர்கள், படைப்பாளிகள், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களிலே பலர், தமது கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். ஒளிப்பட நூலுக்கான அனுசரணை வழங்க முன்வந்த நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அடாவடித்தனங்கள், மோசடி நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. நிகழ்விலே கலந்துகொண்டவர்களின் கேள்விகள் அனைத்திற்குமே அமரதாஸ் பொருத்தமான பதில்களை முன்வைத்தார்.
THROUGH THE GREY ZONES-PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்னும் ஒளிப்பட நூல் தொடர்பாக ‘விசமிகள்’ சிலரால் வலிந்து உருவாக்கப்பட்ட சர்ச்சை தொடர்பிலும், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அற மீறல்கள் மற்றும் நிறுவன வன்முறை சார் நடவடிக்கைகள் குறித்தும் ஒஸ்லோ வில் இருந்து அமரதாஸ் வெளிப்படுத்திய கருத்துகளை ஆவணப்படுத்தும் நோக்கிலே ஒரு வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிறரது கருத்துப் பதிவுகளை வெளியிடுவது குறித்து, அவர்களின் அனுமதி பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் காரணமாக, நல்லெண்ணத்தின் அடிப்படையிலே பிறரது கருத்துகள் மற்றும் கேள்விகள் தவிர்க்கப்பட்டுள்ளன.