மின்நூல்களின் உலகு அல்லது மின்வெளி அனுபவங்கள்
மானுட வாழ்வியலில், தொடர்பாடல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத முக்கியமான சாதனமாக நூல் அமைந்திருக்கிறது. அடிப்படையிலே பொதுவான கட்டமைப்பைக் கொண்டவையாக நூல்கள் இருந்தாலும், அவற்றின் வடிவங்களும் தேவைகளும் பயன்பாட்டு முறைமைகளும் பலவகைப்பட்டவை ஆகியிருக்கின்றன. மிக நீண்ட காலமாக, அச்சு வடிவிலான நூல்களே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியில் மின்நூல்கள் சாத்தியமாகின. அவை pdf வடிவத்திலும் சமகாலத்திலே Kindle மின்நூல் வடிவத்திலும் வெளியிடப்படுகின்றன. அச்சாக்க நூல்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு வகையிலான வசதிகள் தற்காலத்திலே மின்நூல்களில் இருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாதது.
அச்சில் வெளிவரும் நூல்கள் பல இப்போது கிண்டில் மென்பொருளில் வெளியிடப்படுவது நல்லது தான். அண்மையில் ‘மறைந்த’, உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான STEPHEN HAWKING இறுதியாக எழுதிய BRIEF ANSWERS TO THE BIG QUESTIONS என்ற நூலின் தமிழாக்க நூலைக் கொள்வனவு செய்ய முயற்சித்தபோது, அதனை Amazon Kindle மென்பொருளிலே காண முடிந்தது. உடனடியாகப் படிக்க விரும்பும் அல்லது ஆய்வுக்குப் பயன்படுத்தவிரும்பும் ஒரு நூலை மிக விரைவிலேயே பெற்றுக்கொள்ள, இத்தகைய மின்நூலாக்க வழிமுறை அதிகம் பயன்படக்கூடியதாகிறது.
கிண்டிலைக் கிளறிக்கொண்டிருந்தபோது, நண்பர்கள் சிலரின் நூல்களையும் பணம் செலுத்தாமல் தரவிறக்கம் செய்யத்தக்க நூல்கள் சிலவற்றையும் காண முடிந்தது. ஏற்கெனவே எனது வீட்டின் நூலகம் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் இருந்து அண்மையில் கொள்வனவு செய்த பல நூற்றுக்கணக்கான நூல்கள் இன்னமும் வந்துசேரவில்லை. மேலதிகமாக அலமாரி வாங்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். மடிக்கணினியிலும் வன்தட்டுகளிலும் pdf வடிவிலான மின்நூல்கள், பல GB கொள்ளளவிலே குவிந்து கிடக்கின்றன. இப்போது கிண்டில் மென்பொருளில் மின்நூல்கள் சேரத்தொடங்கிவிட்டன.
Amazon Kindle மென்பொருளில் வெளிவரும் பல நூல்கள் டிஜிற்றல் குப்பைகளாகவே தென்படுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், அரசியல் சார்ந்த தீவிர வாசிப்பிற்குரிய நல்ல நூல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. ஒப்பீட்டளவில், கிண்டிலில் நூல் வெளியிடப்படுவதிலும் விநியோகிக்கப்படுவதிலும் இருக்கும் ‘இலகுத்தன்மை’ துஸ்பிரயோகம் செய்யப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியிருந்தாலும், கிண்டிலில் நூல் வெளியிடுவதில் பல நன்மைகள் நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இருக்கின்றன. விமலாதித்த மாமல்லன் எழுதிய ‘அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?’ என்ற நூல் அமேஸான் கிண்டிலின் மூலம் கிடைத்தது. படித்துப் பார்த்தேன். அது பயனுள்ளதாக இருந்தது.
Smart phone மற்றும் tablet போன்ற கைக்கடக்கமான கருவிகளிலோ கணினித்திரைகளிலோ படிக்க முடிவது, பெருந்தொகையான நூல்களைப் பயணங்களில் எடுத்துசெல்ல முடிவது, தபாற் செலவின்றி விரைவிலேயே வாங்க முடிவது, அதிக நூல்களை மிகக் குறுகிய மின்வெளியில் சேமித்து வைத்திருக்க முடிவது போன்ற சாதகமான அம்சங்கள் மின்நூல்களைப் பொறுத்தவரையில் இருக்கின்றன. எனினும், கண்களுக்கு ஏற்படக்கூடிய அயற்சி உள்ளிட்ட பாதகமான சில அம்சங்கள் கவனிக்கப்படவேண்டியவை. அதிக பக்கங்களையும் படங்களையும் கொண்ட நூல்களை மின்நூல்களாக வாசிப்பது சிரமமாக இருக்கக்கூடும்.
எது எப்படியிருந்தாலும், அச்சாகிய நூல்களைக் கையிலேந்தி நுகரும் அனுபவம் அலாதியானது.
2019-12-24
அமரதாஸ்