ஓவியர் மு. கனகசபை
யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் பலரை எனக்கும் தனது மாணவருக்கும் நேரில் அறிமுகப்படுத்தியவர் ஓவியர் மாற்கு மாஸ்ரர்! ; கனகசபை அவர்களை அறிமுகப்படுத்தியவரும் அவரே! எண்பதுகளின் பிற்கூறில் ஒருநாள், கொழும்புத் துறையிலிருந்த அவரது வீட்டுக்கு, மாற்கு மாஸ்ரரும் நானும் சென்றோம். கனகசபையின் ஓவியங்கள்மீது மாற்குவிற்கு மதிப்பு இருந்தது. அதை வெளிப்படை யாக அவரிடம் சொன்னார். நான் ஓவியங்களைப் பார்க்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார். தனக்கு சுமார் நாற்பத்தைந்து குழந்தைகள் இருப்பதாக, சிரித்தபடி கனகசபை சொன்னார். அவருக்குப் பிள்ளைகள் இல்லையெனவும், மனைவியும் அவருமே அந்த வீட்டில் வசிப்பதாகவும், ஏற்கெனவே மாற்கு மாஸ்ரர் சொல்லி அறிந்திருந்தேன். “என்ன யோசிக்கிறீர்….? எனது ஓவியங்கள் எல்லாம் எனது குழந்தைகள்தான்!” என்று, சிரித்துக்கொண்டு என்னைப் பார்த்துச் சொன் னார். பல ஓவியங்களை எடுத்துவந்து தரையில் – சுவரில் சார்த்தியும், மேசையில் பரவியும் வைத்தார். முதல்முறையாக அவரின் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது! சில ஓவியங்களை வரைந்த பின்னணி, அனுபவம் பற்றியும் தகவல்க ளைப் பரிமாறினார். சிரித்தபடி நகைச்சுவையாக உரையாடும் பண்பு அவரிடம் இருந்தது. ஓவியம் மற்றும் வேறு பொது விடயங்களையும் மாற்கு மாஸ்ரரும் அவரும் கதைத்தனர். அதற்குப் பிறகும் சிலதடவைகள் மாற்கு மாஸ்ரருடன் அங்கு சென்று வந்துள்ளேன்; தனியாகவும் சென்று அவருடன் கதைத்து வருவதும் உண்டு.
தனது ஓவியங்கள் மனப்பதிவுவாதத் தாக்கங் கொண்டவை என அவரே சொல்லியுள்ளார். ஓரளவு ஓவியப் பரிச்சயங்கொண்டவருக்கும் அவரது ஓவியங்களை இரசிப்பதில், எந்தச் சிக்கலும் இராது. மாற்குவின் நவீன ஓவியங்களைப் பார்க்கும் போது சிக்கலில்லாத புரிதல் நிகழ்வதைப் போன்றதே இது! இடப் பெயர்வு, அகதி மனிதர், கதிர்காம யாத்திரை, மழை, ஒருமுகத் திருவிழா, மாட்டுவண்டில் சவாரி முதலியவை என்னை மிகக் கவர்ந்தவை! அவரது சித்திரிப்பு முறையும் வர்ணச் சேர்க்கைகளும் இதந்தருபவை. பார்த்த நிகழ்ச்சிகளினதும் இடங்களினதும் மனிதர்க ளினதும் மனப்பதிவாகவே அவை அமைந்துள்ளன; சில பிரதிமை ஓவியங்களையும் வரைந்துள்ளார். ஓவியக் கற்கைநெறிச் சூழலில், குறியீடுகளை அதிகம் நிரப்பி, புரிதலில் மூளையைக் “கசக்கிப் பிசையும்” ஓவியங்கள் பெருகும் நிலை, இன்று நிலவு கிறது! வித்தியாசமாக இருக்கவேண்டுமென்ற முனைப்புடன் “தயாரிக்கப்படுபவை”யாக, அவை உள்ளன; ஓவியக் காட்சியில், “தயாரித்தவர்” பக்கத் தில் நின்று சொல்லும் விளக்கங்கள், வலிந்த பிரச்சார உணர்வையும் ஏற்படுத்துகின்றன. ஓர் இரசிகர் தன்னியல்பாகப் படைப்புடன் நெருங்கிப் பரவசமடையும் அனுபவம் அரிதாகிறது! கனகசபை, மாற்கு, ஆசை இராசையா, கைலாசநாதன் போன்றோரின் “படைப்புகள்”, இவற்றிலிருந்து தனித்து நிற்கின்றன!
ஓவியப் படைப்புச் செயற்பாட்டுக்கு அப்பால் அவர் ஒரு வாசகர்; சிறிய புத்தகச் சேகரிப்பும் அவரிடம் உள்ளது; சில புத்தகங்களை எடுத்துவந்து காட்டி அவைபற்றிக் கதைப்பார். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலும் பலதடவைகள் அவரைக் கண்டிருக்கிறேன். சமயங்கள் பற்றிய ஒப்பீட்டு வாசிப்பிலும் ஆர்வமுடையவராக இருந்தார்; கதைக்கும்போது அவைபற்றி என்னிடம் சொல்லியுள்ளார். ஒரு தடவை, “யேசுராசா…. தவறாக நினைக்கவேண்டாம். உங்கட ஃவாதேர்ஸ் துறவிகள் அல்ல – அவர்கள் மிஷனரீஸ்” என்று குறிப்பிட்டது எனது சிந்தனையைத் தூண்டியது! ; புதிய வெளிச்சக் கீற்றும் தெரிந்தது!
பொருளாதார நிலை சாதகமாக இருந்ததில், கித்தானில் – தைல வர்ணத்தில் ஓவியப் படைப்புகளை ஏராளமாய் உருவாக்குவதில் தடை ஏதும் அவருக்கு இருக்க வில்லை. அதுபோலவே, சுற்றுப் பயணங்கள் செய்து புதியவற்றைக் காண்பதில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் பூர்த்திசெய்ய இயலுமாயிருந்தது. முன்னரே தமிழகச் சுற்றுப் பயணத்தில் பல இடங்களுக்கும் சென்றுள்ளார்; பிற்காலத்தில் வட இந்தியப் பயணம் செய்து கலை, சமய, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பார்த்துவந்தார். “இவ்வாறான பயணங்களைச் செய்வதில் ஒரு போதும் கஞ்சத்தனம் காட்டக்கூடாது” என்று, ஒருதடவை என்னிடம் சொன்னார்.
“….ஊக்குவிப்பு இருந்திருந்தால், கை உதவி இருந்திருந்தால் இன்னும் பல வரைந்திருப்பேன். யாழ் மண்ணில் மண்டைதீவு நார்க்கடகத்துக்கு இருக்கிற மதிப்புக்கூட ஓவிய சிற்பத் துறைகளுக்கு இல்லை என்கிற பரிதாப நிலை. காலம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்று, 2011 இல் அவர் தெரிவித்த கருத்தில் வெளிப்படும் ஆதங்கம், கவனத்துக்குரியது!
ஓவிய, சிற்பத் துறைகளில் மட்டுமல்லாது இலக்கியத் துறையிலும் இவ்வாதங்கம் நிலவுகிறது! எமது கலைகளை / கலைஞர்களை – இலக்கியத்தை / எழுத்தாளரை ஆதரித்துப் போற்ற வேண்டியது நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு எமது மக்களிடம் ஏற்பட, கலை ஆர்வலர் எல்லோரும் தொடர்ந்து செயற்படவேண்டியுள்ளது!
அ. யேசுராசா
16. 02. 2020
(ஓவியர் மு. கனகசபை அவர்கள் பற்றிய நூலுக்காக எழுதப்பட்டு முகநூலில் பகிரப்பட்டது.)