அழிவுகளையும் இழப்புகளையும் துயரங்களையும் உண்மைகளையும் மறைத்துவிட்டுப் போரைக் கொண்டாட்டமாக அணுகுவதாலோ, போர்க்களத்தின் மனித சாகசங்களை வெறுமனே வீடியோ விளையாட்டுகள் போலக் காட்சிப்படுத்துவதாலோ நல்ல போர்த்திரைப்படங்கள் உருவாகிவிடுவதில்லை.
உண்மையில், சிறந்த போர்த்திரைப்படங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கக்கூடும்? போரின் உள்நோக்கங்களைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதாகவோ, அழிவுகளுக்கு மத்தியிலும் மனிதாபிமானத்தை மீட்பதாகவோ, நெருக்கடிகளைக் கடந்து அமைதியைக் கண்டடைவதாகவோ, விடுதலை வேட்கையினை வலுப்படுத்துவதாகவோ, மனிதாபிமானத்தை உள்ளார்ந்து வலியுறுத்துவதாகவோ, ‘போருக்கு எதிரான’ மனப்போக்கினைக் கட்டமைக்க விழைவதாகவோ, போரின் தீமைகளை உணர்த்தி வாழ்தலுக்கான போராட்டத்திற்கு உந்துவதாகவோ நல்ல போர்த்திரைப்படங்கள் அமைந்திருக்கும்.
முதலாம் உலக யுத்தகாலத்திலே ஜேர்மன் படையினரை எதிர்த்து, பிரான்சில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினரைப் பிரதான கதைமாந்தர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது 1917 என்னும் திரைப்படம்.

ஜேர்மன் படையினருக்கு எதிரான தாக்குதலொன்றினை மறுநாள் காலையில் முன்னெடுக்கும் நோக்கில், பிரான்சின் ஒரு பகுதியில் நிலைகொண்டிருக்கும் பிரிட்டிஷ் படையின் இரண்டாவது பிரிவிற்கு அவசரமாக ஒரு தகவலை அனுப்பவேண்டியிருக்கிறது. தாக்குதல் முன்னெடுப்பை உடனடியாக நிறுத்தும் உத்தரவுதான் அது. தந்திரோபாயமாகப் பின்வாங்கியிருக்கும் ஜெர்மன் இராணுவத்தினர், பெரும் தாக்குதலொன்றின் மூலம் பிரிட்டிஷ் இராணுவத்தின் இரண்டாவது படைப்பிரிவினரைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இரண்டு பட்டாலியன்கள் கொண்ட 1600 பேர் காப்பாற்றப்படுவதற்கு அந்தத் தகவல் உடனடியாக உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்படவேண்டியிருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள் அற்றுப்போயிருக்கும் நிலையில் Blake மற்றும் Schofield (Will) ஆகிய இரண்டு பிரிட்டிஷ் படையினர் மூலம் எழுத்து வடிவிலான தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. மறுநாள் நடக்கவிருக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இரண்டாவது படைப்பிரிவில் Blake இன் சகோதரர் இருக்கிறார். தகவலை எடுத்துச் செல்லும் பயணத்தின் இடையிலேயே Blake இறந்துவிட நேர்கின்றமையால் இறுதிவரை தன் பணத்தைத் தொடர்கிறார் Schofield.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆதாரமானது திரைக்கதையாகும். அத்தகைய திரைக்கதைக்கு உணர்வுபூர்வமான அரிய சந்தர்ப்பங்கள் (தருணங்கள்) வலுச்சேர்க்கவல்லவை. அத்தகைய சந்தர்ப்பங்களையும் அவற்றுக்கிடையிலான நுட்பமான தொடர்புபடுத்தலையும் நல்ல திரைப்படங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும்.
1917 திரைப்படத்திலும் சில அரிய சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன. போர் சூனியப் பிரதேசத்திலே சிக்குண்டிருக்கும் ஒரு பெண்ணாலே பாதுகாக்கப்பட்டிருக்கும் குழந்தைக்காக Schofield பால் வழங்குவதையும், ஆபத்தான பயணத்தின் இடையிலே சாவடைந்துவிட்ட நண்பனின் சகோதரனை இறுதியிலே Schofield சந்திப்பதையும், அரிய சந்தர்ப்பங்களின் உதாரணங்களாகக் குறிப்பிடமுடியும்.
போரின் கொடூரங்களை, அவலங்களை போகிற போக்கிலே இயல்பாக வெளிப்படுத்துவதன் மூலம் ‘போருக்கு எதிரான’ மனப்போக்கினைக் கட்டமைக்க விழைகிறது திரைக்கதை. அது, நெருக்கடிகளைக் கடந்து பேரனுபவங்களுடன் தப்பிப்பிழைத்த ஒரு மனிதனின் கலவையான அனுபவங்களைப் பார்வையாளர்களில் கடத்திவிட முயல்கிறது. 2019 இல் வெளிவந்திருக்கும் இத் திரைப்படத்தை, இதுவரை வெளிவந்திருக்கும் நல்ல போர்த்திரைப்படங்களில் ஒன்றாக் குறிப்பிட முடியும்.
ஒரு இடத்தில் நீர் தேங்கியிருக்கும் பெரிய பள்ளம் காணப்படும். பதுங்கிப் பதுங்கி நகர்ந்து செல்லும் Schofield மற்றும் Blake இருவரும் பள்ளத்தின் உட்புறமாக இறங்கி சுற்றிக்கடந்து அடுத்த பக்கத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்தொடரும் கமெரா நகர்வு, நீர் நிலையின் குறுக்காக நீரின் மேலாக அமைந்திருக்கும். நீரில் சலனம் இருக்காது. ஆக, அதுவரை இருந்துவந்த Steadicam Shot Method அப்போது Tron Shot Method ஆகியிருக்கும். அந்த இடமானது, ஒளிப்பதிவு இயக்கத்தில் மிக முக்கியமான தருணமாகும். அந்தப் பள்ளத்தைக் கடந்தும் தொடர்ச்சியான நகர்வினைப் பாத்திரங்களுடன் கமெரா மேற்கொள்ளும். ஒரே தொடர் கட்சித்துண்டுகளைப் பதிவாக்கும் செயன்முறையில் கமெராவை வெவ்வேறு நபர்கள் மாற்றி மாற்றி வெவ்வேறு விதமாகக் கையாண்டிருப்பார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களிலே நடிகர்கள் மற்றும் காட்சியமைப்புகள் அனைத்துமே சரியாகவும் துல்லியமாகவும் கமெராவில் தொடர்ச்சியாக உள்வாங்கப்பட வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் இது சவாலான முயற்சியாகும். பாத்திரங்களைப் பின்தொடர்ந்தும் சுற்றிச்சுழன்றும் அவசியமான தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலும் மிக லாவகமாக நகர்த்தப்பட்டிருக்கிறது கமெரா.

புல்வெளியொன்றின் மேலாகப் பின்நோக்கி நகரும் கமெரா, முதலில் மரத்தடியில் கண்மூடி ஓய்வெடுக்கும் மையப்பாத்திரத்தின் முகத்தைக் காண்பிக்கிறது. இடைவிடாமலே நகர்ந்து, இடையிலே வெவ்வேறு கோணங்களை உள்வாங்கி, உள்ளியங்கும் பாத்திரங்களைப் பின்தொடர்கிறது அது. இறுதியில், ஒற்றை மரத்தடியில் அமர்ந்து இரண்டு ஒளிப்படங்களைப் பார்த்துவிட்டுப் பெருமூச்சுடன் கண்மூடிக்கொள்ளும் மையப்பாத்திரத்தின் முகத்தின் மீது நிறுத்தப்படுகிறது. மையப்பாத்திரம் கையாளும் அந்த ஒளிப்படங்களிலே, ஒன்றில் இரண்டு பெண்பிள்ளைகளும் இன்னொன்றில் மனைவியும் காணப்படுவார்கள். மனைவி இருக்கும் ஒளிப்படத்தின் பின்புறத்திலே ‘Come back to us’ என்று எழுதப்பட்டிருக்கும்.
மிக நீளமான சில காட்சித்துண்டுகள் நுட்பமாக இணைக்கப்பட்டு முழுத் திரைப்படமும் ஒரே தொடர் காட்சித்துண்டாக (one continuous shot) தெரியும் விதத்தில் திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே தொழில்நுட்ப சாகசம் காட்டுவதாக அல்லாமல், படத்தின் ஒட்டுமொத்தமான கட்டமைப்பின் தேவைகேற்பவே கமெரா கையாளப்பட்டிருக்கிறது.
இத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு இயக்கத்தை இலகுபடுத்துவதற்காக, சிறிய அளவில் நிறை குறைவான கமெரா ஒன்றினை, ARRI ALEXA MINI LF என்ற பெயரிலே புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். வெவ்வேறு சாதனங்களிலே மாற்றி மாற்றி வேகமாக நகர்த்தி, மிக நீளமான கட்சித்துண்டுகளைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய, அந்தப் புதிய கமெரா உதவியிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Roger Deakins இத் திரைப்படத்தின் தரத்தை நிர்ணயித்தவர்களில் மிகப் பிரதானமானவர். ஒளிப்பதிவின் இயக்கத்தினை நுட்பமாக அணுகி அனுபவம் கொள்ள முடியும். கமெரா நகர்வுக்கு மிகச் சவாலாக இருக்கக்கூடிய பகுதிகளை ஊடறுத்து, ஒரே தொடர் காட்சித்துண்டுகள் (Shots) உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு இயக்கத்திலே தேவை சார்ந்து ‘சாதனை’ நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
American beauty என்னும் குறிப்பிடத்தகுந்த திரைப்படத்தினை இயக்கிய Sam Mendes என்பவரே 1917 என்னும் திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார். (இடையிலே Skyfall, Sectre ஆகிய ‘சாதாரணமான’ திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.) இயக்குநருக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படமாக 1917 அமைந்திருக்கும்.
பின்னணி ஒலிகளுடன் மாத்திரம் அமைந்திருக்கக்கூடிய சில இடங்களில் பின்னணி இசை பிரயோகிக்கப்பட்டிருப்பது உறுத்தினாலும் ஆங்காங்கே அதன் பிரயோகமானது பல்வேறு தருணங்களுக்கும் வலுச்சேர்த்திருக்கிறது. ஒலியமைப்பு அல்லது ஒலிக் கலவை (Sound Mixing) நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பு மற்றும் காட்சிக் கலவை (Visual Effects) ஆகியவை, உறுத்தலின்றி இயல்பாக அமைந்திருக்கின்றன.

போர்க்களத்தின் முன்னரங்கையும் சூனியப் பிரதேசத்தையும் மிக யதார்த்தமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதலாம் உலக யுத்த காலத்தின் ஆயுதங்களும் ஏனைய பொருட்களும் செயற்கை உடல்களும் (Prosthetic) பொருத்தமாகவும் கவனமாகவும் கையாளப்பட்டுள்ளன. மிக நீண்ட பதுங்கு அகழிகள் (Moving Bunkers) நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. போர் சூனியப் பிரதேசத்தின் அபாயமான, அவலமான தோற்றத்தைத் துல்லியமாக உருவாக்கியிருக்கிறார்கள். கலை இயக்கத்தை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.
George MacKay என்பவர் Schofield என்னும் பாத்திரத்திலும் Dean-Charles Chapman என்பவர் Blake என்னும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். மிக நீளமான காட்சித்துண்டுகளில் கடினமான நிலப்பிரதேசத்தைக் கடந்து செல்லும் நிலையிலேயே வசனம் பேசிப் பொருத்தமான உடல்மொழியை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம். மிகச் சவாலான நிலைமை அவர்களுடையது. Blake பாத்திரம் இறந்த பின்னரும், Schofield பாத்திரத்தில் George MacKay தொடர்ந்து இறுதிவரை நன்றாகவே நடித்திருக்கிறார். தவிர, படத்தில் வரும் ஏனைய நடிகர்கள் எல்லோருமே பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.


ஒஸ்கார் விருதுகளுக்கான 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிந்த இத் திரைப்படத்திற்கு, Best Cinematography, Best Sound Mixing, Best Visual Effects ஆகிய மூன்று பிரிவுகளுக்கான ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன. இத் திரைப்படத்திற்கு, வேறு சில விருதுகளும் கிடைத்திருக்கின்றன.
யதார்த்தக் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் ‘தள யாதார்த்தம்’ மற்றும் ‘தர்க்க நகர்வு’ அவசியமானது. 1917 திரைப்படத்தின் திரைக்கதையின் போக்கிலே ‘தர்க்க ரீதியிலான’ சில குறைகளை இனங்காண முடிகிறது.
ஜேர்மனிய விமானம் விழுந்து எரியும் இடத்தில், Blake மற்றும் Schofield ஒரு விமானியைக் காப்பாற்றுவார்கள். அந்த விமானம் நீண்டநேரம் எரிவதாகக் காட்டப்படுகிறது. தொடர்ந்து எரியும் விமானம் எப்படி வெடிக்காமல் இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.
காப்பாற்றப்பட்ட ஜேர்மன் விமானியால், கத்தியாலே குத்தப்பட்டு Blake இறக்க நேரிட்டிருக்கும். விழுந்த விமானத்தைத் தேடி, வேறு இடத்திலிருந்து பிரிட்டிஷ் படையினர் பலர் வாகனங்களில் திடீரென்று வந்து நிற்பதாகக் காட்டப்படுகிறது. அவர்கள் வரும் சத்தம் எதுவும் கேட்பதில்லை. வாகனச் சத்தமோ வேறெந்த அசுமாத்தமோ இல்லை. அவர்களின் வரவை Schofield மட்டுமல்ல, பார்வையாளர் கூட அறிவதில்லை. பின்னணி ஒலியமைப்பு மூலம், இந்தக் குறையை நிவர்த்திசெய்திருக்க முடியும்.
மிகுந்த நெருக்கடிகளைக் கடந்து, இறுதியிலே கேணல் MacKenzie என்பவரிடம் முக்கிய தகவல் கொண்ட கடிதத்தைக் கொடுப்பார் Schofield. பயணத்தின் இடையிலே மிகப்பெரிய நீர்நிலையினை நீந்திக் கடந்திருப்பார் Schofield. அந்தக் கடிதமானது, நினையாத முறையில் எடுத்துச்செல்வதாகக் காட்டப்படவில்லை. ஆக, கடிதம் எப்படி நனைந்து பழுதடையாமல் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. பாதுகாப்பான முறையில், ஒரு சாதாரண ‘பிளாஸ்டிக்’ பையில் அதை வைத்திருப்பதாகக் காட்டியிருக்கலாம்.
1600 பேரின் உயிர்களைக் காப்பாற்றும் தகவலை, மிகவும் ஆபத்தான சூனியப்பிரதேசத்தினூடாக அனுப்பும் மிக முக்கியமான பணிக்கு, இருவர் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். வான்பரப்பிலே விமானங்கள் பறந்து திரிவதாகக் காட்டப்படுகிறது. ஒரு விமானம் மூலம் அந்த முக்கிய தகவலை அனுப்பியிருக்க முடியாதா? என்ற கேள்வியும் எழுகிறது.
பலமுறை பார்த்து உணரக்கூடிய பல விடயங்கள் பொதிந்திருக்கின்றன இத் திரைப்படத்தில். நுணுக்கமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ளக்கூடிய, ரசிக்கக்கூடிய அம்சங்கள் பல உள்ளன. Steven Spielberg இயக்கிய Saving Private Ryan மற்றும் Christopher Nolan இயக்கிய Dunkirk போன்ற திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிடத்தகுந்த போர்த்திரைப்படமாக உருவாகியிருக்கிறது 1917.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் உட்பட அனைவருமே இத் திரைப்படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் மிகத் தீவிரமாகவும் கூடுதல் கவனத்துடனும் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு நடவடிக்கைகள், நிச்சயம் கடும் பிரயத்தனங்கள் கொண்டதாக இருந்திருக்கும்.
இத் திரைப்படத்தின் முழு வெளிப்பாட்டையும் அனுபவம் கொள்ள வேண்டும் என்பதற்காக, அண்மையிலே திரையரங்கிற்குச் சென்று இதனைப் பார்த்தேன். சிதைந்த உடல்களும் சேறும் குருதியும் பள்ளங்களும் ஆபத்துகளும் நிறைந்த இத்தகைய போர் சூனியப் பிரதேசங்களை, ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலே நான் காணவும் கடந்துசெல்லவும் நேர்ந்திருக்கிறது. அவலம் தோய்ந்த அனுபவ நினைவுகளைக் கிளர்த்தியது இத் திரைப்படம்.
– அமரதாஸ்
2020-02-20