சபேசன் அவர்களுக்கு அஞ்சலி

 

நண்பரும் ஊடகருமான சண்முகம் சபேசன் அவர்கள் இன்று அதிகாலை (2020-05-29) மறைந்து விட்டாரென்ற துயரார்ந்த செய்தியை அறிய நேர்ந்துவிட்டது. அன்னாருக்கு எனது அஞ்சலி… அவருடன் பழகிய, உரையாடிய நினைவுகள் மேலெழுகின்றன.

தமிழீழ விடுதலை சார் பணிகளை அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலமாக முன்னெடுத்து வந்தவர் சபேசன். அங்கிருந்து பல்வேறு தளங்களிலே தனது பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியவற்றில் ஈடுபட்டு உழைத்தவர். 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச் சேவை மூலம் பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்கி வழங்கி வந்தவர். மிக நீண்டகால வானொலி ஊடக அனுபவம் கொண்டவர். தீவிர இலக்கிய வாசகர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலே மிக நீண்டகாலம் போராளியாகச் செயற்பட்ட யோகி அவர்களின் உறவினராகவும் (மைத்துனன்) நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் சபேசன். ‘நரேன்’ என்னும் யோகியின் இயற்பெயரைத் தனது மகனுக்கு வைத்துக்கொண்டவர். யோகி மூலம் நீண்ட காலத்துக்கு முன்னரே எனக்கு அறிமுகமாகியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேல், மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். யோகி மூலம் பிரபாகரனுக்கு நெருக்கமாகியிருந்த சபேசன் மேல், பிரபாகரனுக்குப் பிரத்தியேகமான அன்பிருந்தது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிழல் அரசு செயற்பட்ட காலத்தில், பிரபாகரனைச் சந்திக்க வந்திருந்தார். அக் காலத்தில் யோகியுடன் என்னைத் தேடி வந்து சந்தித்து, என்னுடன் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முள்ளிவாய்க்கால் அவலங்களும் பிரபாகரனின் இழப்பும் அவரை வருத்திக்கொண்டேயிருந்தன. பிரபாகரனைத் தலைவராக வரித்துக்கொண்ட பலரும், அவரைத் தமிழீழ தேசியத் தலைவராகக் கருதி மதிக்கிற பெரும்பான்மைத் தமிழர்களும் அவருக்கு வெளிப்படையாக ‘அஞ்சலி’ செலுத்தத் தவறி வருகிறார்கள். இந்த நிலைமை விரைவில் மாறவேண்டும் என்ற வேணவா, சபேசனிடம் எப்போதும் இருந்தது.

நீண்ட காலத்திற்குப் பின்னர், சபேசனின் தொடர்பு எனக்குக் கிடைத்திருந்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து, அண்மையில் மிக நீண்டநேரம் என்னுடன் அவர் உரையாடினார். பிரபாகரனின் விருந்தோம்பல் பற்றியும் பேச்சு வந்தது. தனக்கு அவர் பிரத்தியேகமாகக் கொண்டுவந்த உணவைப் பரிமாறியது பற்றிக் குறிப்பிடும்போது தேம்பித் தேம்பி அழுதார். அன்று, அவர் பழைய நினைவுகளை மீட்கும்போது பலமுறை உணர்ச்சிவசப்பட்டு அழுதிருந்தார். அவரது அன்றைய அழுகுரல், என் மனதில் என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். 

ஒரு முறை, அவுஸ்திரேலியாவிலிருந்து வன்னிக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்த போது, தனது கட்டுரைகளைத் தொகுப்பாக்கி வெளியிட அனுமதி தருமாறு கேட்டிருந்தார். அப்போது, ‘அதை நானல்லவா வெளியிட வேண்டும்’ என்று கூறியிருந்தார் பிரபாகரன். பின்னர் வந்த இறுதிப் போரில், அது சாத்தியமாகவில்லை. ‘Selected writings of Sanmugam Sabesan’ என்ற தலைப்பில் தனது கட்டுரைகளின் தொகுப்பு, ஒருவரிடம் இருப்பதாக அண்மையில் எனக்குச் சொல்லியிருக்கிறார். தனது நூல் வெளிவரவேண்டுமென்று விரும்பியிருந்த சபேசனின் நூலை, அவரது நெருங்கிய நண்பர்கள் இனியாவது வெளிக்கொண்டுவருவது நல்லது.
 
கலை மற்றும் அரசியல் சார்ந்து மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களுடனும் அவர் நட்பைக் கொண்டிருந்தார். ஒரு முரண்பாட்டின் நிமித்தமாக அவருக்கு எதிராக வழக்குப் போட்டிருந்த ஒரு நண்பருடனும் தொடர்ந்து நட்பைப் பேணிவந்தவர். மாற்றுக் கருத்தாளர்கள் மத்தியிலும் சொந்தக் கருத்துகளை எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
 
வன்னியில் இருந்த காலத்திலே அவரிடம் கொடுத்து வைத்திருந்த ‘ஆவணங்கள்’ பலவற்றைத் திரும்பப் பெறுவதற்கிடையில், அவரது இழப்பு சடுதியாக நிகழ்ந்துவிட்டது. தனது பிரத்தியேகமான அனுபவங்கள் பலவற்றை என்னுடன் அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள், மெல்ல மெல்ல மேற்கிளம்புகின்றன.

விடுதலைப் போராட்ட வரலாற்றோடும் பிரபாகரனோடும் நெருக்கமாக இருந்தவர்கள் சாவடையும்போது, போராட்ட வரலாற்று நிகழ்வுகள் பலவும் வெளிவராமல் மறைந்துவிடுகிற துயரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இறுதிப் போரிலே ‘காணாமலாக்கப்பட்ட’ யோகியும் ‘தியாகச் சாவடைந்த’ பிரபாகரனும் இன்று இருந்திருந்தால், சபேசனின் இழப்பில் மிகவும் வருந்தியிருப்பார்கள். அவர்கள் சார்பிலும் அன்னாருக்கு எனது அஞ்சலி…

பின் இணைப்பு : சபேசன் தொடர்பிலும் அவரது நெருங்கிய நண்பராக இருந்த யோகி தொடர்பிலும் பதிவுசெய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. இது அஞ்சலிக் குறிப்பு என்பதால், பல விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

காஸ்ரோ அவர்கள், வெளிநாடுகளில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சபேசனுக்கு முழு உடன்பாடு இருக்கவில்லை. அதுபற்றிப் பிரபாகரனுடன் பேசுவதற்குத் தயாரான நிலையில் வன்னியிலே காத்திருந்தார். ஒரு நாள், காஸ்ரோவுடன் இணைந்து பிரபாகரனை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த இடத்திற்குப் பிரபாகரன் வருவதற்கிடையில் காஸ்ரோவுடன் அவர் மிகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இறுதிப் போரானது பேரழிவுகளோடு முடிவை எட்டிய நிலையில், காஸ்ரோவின் இறுதி நிமிடங்கள் குறித்தும் அவலமான முறையில் அவர் தியாகச்சாவடைய நேர்ந்தமை குறித்தும் சபேசனுக்குச் சொன்னபோது மிகவும் வருந்தினார்.

காஸ்ரோவினால், இயக்க வேலைகளுக்காக வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டிருந்த சிலரது நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. அத்தகைய சிலர், சிறீலங்கா அரச தரப்பினரின் நிகழ்ச்சி நிரலில் இப்போது இயங்குவதாகக் கேள்விப்படுகிறேன். பிரபாகரனால் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பலரது தவறுகளின் விளைவுகளைப் பிற்காலத்திலே பிரபாகரன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இயக்கத்தில் அனைத்து விதமான அதிகாரங்களையும் கொண்டவராகப் பிரபாகரன் இருந்தார். எனினும், அவர் சூழ்நிலைக் கைதியாக இருந்த பல சந்தர்ப்பங்களை நானறிவேன். எது எப்படியிருந்தாலும், பிரபாகரனோ அவருடன் இணைந்து பயணித்தவர்களோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நடந்துகொண்டிருந்த விபரீதமான மாற்றங்கள் குறித்த உரையாடலை, அவருடனும் வன்னியிலிருந்து முன்னெடுத்திருக்கிறேன். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும், பின்விளைவுகள் பற்றி அதிகம் யோசிக்காமல் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும் சபேசன் இருந்தார். ஒன்றை உண்மையாக நேசித்தவர்களால், அதன் சரிவைத் தாங்கிக்கொள்ள முடியாது தான். சபேசன் போன்ற பலர், இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிலே சிலர் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டவர்கள், சிலர் ஒதுங்கிக்கொண்டவர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் பிரபாகரனின் பெயரையும் வைத்து அடையாள அரசியலையும் பிழைப்புவாதத்தையும் மோசமான வழிமுறைகளிலே தொடர்பவர்கள், இப்போது உலகெங்கும் பரவியிருக்கிறார்கள். அத்தகையவர்களால், தமிழீழ விடுதலை சார்ந்த ஈழத்தமிழினத்தின் ஒட்டுமொத்தத் தியாகங்களும் வீணடிக்கப்படுகின்ற துயரம் தொடர்கிறது.  

அமரதாஸ்
2020-05-29