Photographs made by Amarathaas – Series 10
‘The hand of love’ – This photograph was made by Amarathaas in Switzerland (2020-05-29).
அமரதாஸ் உருவாக்கிய ஒளிப்படங்கள் – தொடர் 10
// தொடர்ச்சியாகப் பத்து நாட்களுக்குப் பத்து ஒளிப்படங்களைப் பகிரும் செயன்முறை ஒன்றைத் தொடருமாறு, அன்பர் ஒருவர் எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னருமாக, பல்லாயிரக்கணக்கிலான ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தாலும், அவற்றிலே சிலவற்றை மட்டுமே சமூக வலைத்தளங்களின் வழியாகப் பகிர்ந்திருக்கிறேன். (சில காரணங்களால், சமூக வலைத்தளங்களிலே அதிகமான ஒளிப்படங்களைப் பகிர விரும்புவதில்லை.)
நான் உருவாக்கிய சில ஒளிப்படங்களை, அவசியமான சிறு குறிப்புகளுடன் மட்டும் அவ்வப்போது வெளியிடும் உத்தேசமுண்டு. இதுவரை வெளியிடப்படாத படங்களையும் நான் இணைக்கக்கூடும். அவை widevisionstudio.com இணைய தளத்திலும் வெளியிடப்படும். படங்களின் பின்னணியில் விரிவான ‘கதைகள்’ மற்றும் அனுபவங்கள் இருந்தாலும், அவை இப்போதைக்குத் தவிர்க்கப்படுகின்றன.
ஒளிப்படப் பிரதியாக்கம் (Photo print making), ஒளிப்படக் காட்சிப்படுத்தல் (Photo exhibition), ஒளிப்பட நூலாக்கம் (Photo book making) போன்ற ஆரோக்கியமான செயன்முறைகளிலே தமிழ்ச் சமூகமானது அதிக கவனம் கொள்வதில்லை. பெரும்போக்கு ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் ஒளிப்படங்களின் பிரயோகமானது பிரக்ஞை பூர்வமானதாக அமைந்திருக்க வேண்டுமென்பது எனது எதிர்பார்க்கையாகும். நல்ல ஒளிப்படங்களின் தாற்பரியங்களும், அவற்றின் பின்னணியிலே பொதிந்திருக்கும் உழைப்பின் மதிப்பும், ஊடகவெளியில் உலவும் எல்லோராலும் உணரப்படுவதில்லை என்பதே யதார்த்தமாகும்.
ஒரு நல்ல ஒளிப்படமானது எடுக்கப்படுவதில்லை. அது உருவாக்கப்படுகிறது. (இத்தகைய கருத்தினை Ansel Adams சொல்லியிருப்பதாக எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்.) ‘எடுத்தல்’ என்ற சொல்லானது இயல்பாகப் பழக்கப்பட்டதாயினும், மேலோட்டமானதாகத் தோன்றுகிறது. அச் சொல்லில் ஒருவித ‘இளக்காரம்’ தொனிப்பதாகவும் உணரப்படுகிறது. பேச்சு வழக்கிலே ‘எடுத்தல்’ என்பது பெருவழக்காகியிருப்பினும், எழு
புதிய மொழிப் பிரயோகங்கள் ஆரம்பத்திலே சற்று ‘இடறலாக’ இருந்தாலும், தொடர் பயன்பாட்டினால் இயல்பானதாகிவிடும். ‘கற்பழிப்பு’ என்ற பொருத்தமற்ற சொல்லுக்குப் பதிலாக, ‘பாலியல் வல்லுறவு’ என்ற இரண்டு சொற்களின் ஒருமித்த பயன்பாடு தமிழில் சாத்தியமானது. அப்படிப் பல உதாரணங்கள் சொல்ல முடியும். ‘புகைப்படம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக, ‘ஒளிப்படம்’ என்ற சொல்லையே செறிவான அர்த்தபரிமாணத்துடன் எப்போதும் பயன்படுத்திவருகிறேன். Photography என்ற சொல்லின் அர்த்தம், ‘ஒளியால் வரைவது’ என்பதாகத்தான் உள்ளது. ஆனால், இப்போதும் புகைப்படம் என்ற சொல் நடைமுறையில் உள்ளது. அத்தகைய நடைமுறையில் ஒருவித பொருத்தமின்மை இருக்கிறதேயொழிய பெரிய பாதகம் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஒளிப்படம் தொடர்பான சொல்லாடல்களில், ‘உருவாக்குதல்’ என்ற சொல்லை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியும். அண்மைக்காலமாக, எழுத்து வழக்கில் இதையே செய்துவருகிறேன். எனக்குப் பழகிவிட்டது. ‘ஒளிப்படம் எடுத்தேன்’ என்று சொல்வதை விட ‘ஒளிப்படம் உருவாக்கினேன்’ என்று சொல்வதில் ஒருவித படைப்பாக்க மனநிலை தொழிற்படுகிறது. ஒரு ஒளிப்படத்தைப் ‘பதிவுசெய்யும்’ செயன்முறையானது ‘கணப்பொழுதில்’ நிகழ்ந்தாலும், அதுவொரு படைப்பாக்கச் செயற்பாடாகும். ஒரு நல்ல ஒளிப்படமானது, எங்கிருந்தோ யாரிடமிருந்தோ ‘எடுக்கப்படுவது’ இல்லை. அது, ஒரு படைப்பாளியின் தரிசனமாகப் பதிவாகிறது. அதனுள்ளே படைப்பாளியின் ‘தெரிவுகள்’ அடங்குகின்றன. ஆக, ஒரு புதிய உருவாக்கம் (Criation) நிகழ்கிறது. கமெரா என்பது ஒரு கருவி அல்லது சாதனம். அது, ஒரு படைப்பாளியின் தரிசனத்தில் இயக்கப்பட வேண்டியது.
நான் ஒளிப்படங்களை எடுப்பதில்லை, அவற்றை உருவாக்குகிறேன்.
அமரதாஸ்
2020-05-16 //