தொடரும் பயணம் அல்லது நீளும் வழி
‘துரத்தியடித்த கொடிய போரிடையே, ஓடியோடித் தேய்ந்து கரையொதுங்கிக் கிடக்கும் ஒரு சோடிக் காலணிகள்.’ 2009 February, Maaththalan, Mullaiththeevu, Ilangai – Lanka (One of the ‘new’ photographs featured in the next photo exhibition)
ஈழத்தமிழரின் போர்க்கால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையிலான பல ஒளிப்படக்காட்சி நிகழ்வுகளை, உலகளாவிய ரீதியிலே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நிகழ்த்தியிருக்கி
அடுத்த ஒளிப்படக்காட்சிக்கான ஒளிப்படங்களைத் தெரிவுசெய்துகொண்டிருக்கும்
ஈழத்தமிழ் இனத்தின் ஒட்டுமொத்தப் பாடுகளையும் போர்க்காலத்திலே சுயாதீனமாக இருந்து ஆவணப் படைப்புகள் ஆக்கியிருக்கிறேன். அவற்றிலே பெரும்பாலானவற்றைச் சர்வதேசமயப்படுத்தியிருக்கிறேன். எனது கடின உழைப்பின் பெறுபேறுகளாக அவை இருப்பினும், தமிழினத்தின் சொத்துகளாக, மிக முக்கிய ஆவணங்களாக நிலைபெற்றிருக்கின்றன. அவற்றை ஆதாரபூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் கையாளும் தகைமையினைக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு களங்களிலே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அறவழியிலே பிரயோகித்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை, வேறு அதிகார மையங்களோ அரசுகளோ இயக்கங்களோ தனி நபர்களோ துஸ்பிரயோகம் செய்ய முடியாது. கண்ணீரும் வியர்வையும் குருதியும் சிந்தி நான் உருவாக்கியிருக்கும் ஆவணப் படைப்புகளை ‘மறைந்திருந்து’ நயவஞ்சகமாக இருட்டடிப்புச்செய்யவும் கொச்சைப்படுத்தவும் விழைகிற விசமிகளை எப்போதும் போல இப்போதும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். அத்தகைய விசமிகள், தெரிந்தே ஈழத்தமிழர்கள் மீதான அநீதிகளுக்குத் துணைபோகிறார்கள். அடிப்படை மனித விழுமியங்களைக் கைவிட்டு, அறமற்ற வகையிலே பெரும் மோசடியைச் செய்ய விழைகிறார்கள். அவர்களுக்குத் திராணியிருந்தால், உண்மை அறியும் நெஞ்சுரம் இருந்தால், என்னை நேரில் சந்தித்து அனைத்தையும் பரிசீலிக்க முன்வர வேண்டும். கண்ணியமாக என்னை அணுகும் யாருடனும் நான் உரையாடத் தயாராக இருக்கிறேன்.
என்மீதான சர்ச்சைகளையும் வதந்திகளையும் மோசமான உள்நோக்கங்களுடன் வலிந்து உருவாக்குவோரையும், அவற்றை எந்தவிதமான ஆதாரங்களும் அறமும் இல்லாமலே பரப்பித்திரிவோரையும், கள்ள மௌனம் காக்கிறவர்களையும் கடந்து சென்றுவிடுவேன். எனது ஒளிப்படங்கள் தொடர்பான ஆதாரங்களையும் நம்பகத்தன்மைகளையும் நேரிலே பரிசீலிப்பதற்கான எனது அழைப்பைக் கண்ணியமாக எதிர்கொள்ளும் திராணியை, அத்தகையோரிடம் எதிர்பார்க்க முடியாது தான்.
என் வாழ்வு, அர்ப்பணிப்புகள் நிறைந்த போராட்டமாகவே தான் இன்னமும் நீள்கிறது. மானுட உரிமைகளை அவாவித் தொடரும் அறவழிப் பயணத்தில் இருந்து எப்போதும் நான் நீங்குவதாயில்லை. உண்மைகளுக்குச் சாட்சியாக இருக்கும் ‘கனமான பாத்திரத்தினை’ எதன்பொருட்டும் கைவிடுவதாயில்லை.
போர் முடிந்த பின்னரும் ஏராளமான ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தாலும், போர்க்காலத்திலே உருவாக்கியிருக்கும் ஒளிப்படங்களை அதிகமதிகம் முன்னிறுத்திய சுயாதீன முன்னெடுப்புகளில் நான் ஈடுபடுவதற்குப் பிரத்தியேகமான காரணங்கள் உள்ளன. போர் சுமத்திவிட்ட காயங்களோடு அகதியாக அலையும் வாழ்வியலில், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கலை சார்ந்தும் ஊடகவியல் சார்ந்தும் சுயாதீனமாக இயங்கிக்கொண்டிருப்பது சிரமசாத்தியம் தான். ‘பொதுவாழ்வு’ தந்திருக்கும் அனுபவங்கள் எல்லாம் இனிமையானவை அல்ல.
எது எப்படியிருந்தாலும், எத்தகைய சட்டகங்களுக்குள்ளும் மாட்டுப்படாதிருந்து என்னை நானே ‘தட்டிக்கொடுத்து’ முன்னெடுத்துச்செல்லும் பக்குவத்தையும் தெளிவையும் ஓர்மத்தையும் இழக்காதிருக்கிறேன். கைத்தடிகளுடன் நடந்து நடந்து களைத்திருந்தாலும், எனக்கென நீளும் வழியில் இன்னமும் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இணைந்து பயணிக்க மனம்கொள்ளும் தோழமைகளை அரவணைத்துச் செல்வேன்.
2020-10-10 அமரதாஸ்