தன்னெழுச்சிப் போராட்டங்களையும் கருத்துச் சுதந்திரத்தையும் விளங்கிக்கொள்ளல்

 
பல்வேறு துறைகள் சார்ந்து பிரபலமாக இருந்து செயற்படுகிறவர்கள் மற்றும் மக்கள் சார்ந்த பிரதிநிதிகளாக இயங்குகிறவர்கள் போன்றோரின் சமூக நடத்தைகள், சில சமயங்களிலே ‘நியாயமற்றவைகளாக’ அல்லது அறப்பிறழ்வாக அமைந்துவிடுவதுண்டு. அத்தகையோரின் எதிர்மறை நடத்தைகளை மூடிமறைக்கும் நோக்கிலே அதிகாரம், பிரபலத்தன்மை, பணபலம் போன்றவை தந்திரோபாய ரீதியிலே பிரயோகிக்கப்படுவதுமுண்டு.

அதிகாரம் அல்லது பிரபலம் மிக்க சக்திகளின் ‘சந்தேகத்திற்கிடமான’ முயற்சிகளை அம்பலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அல்லது கோரிக்கைகள், சமூக மட்டங்களிலே முன்னெடுக்கப்படுவது புரிந்துகொள்ளக்கூடியது தான். அத்தகைய நடவடிக்கைகளே ஒரு தன்னெழுச்சிப் போராட்ட முன்னெடுப்பாக மாறும். சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அது பிரதிபலிக்கும். ஆனால் அத்தகைய முன்னெடுப்பை மடைமாற்றக்கூடிய அடிப்படைவாத நடவடிக்கைகள் பற்றியோ, ‘வெறுப்பரசியல்’ மற்றும் ‘கும்பல் வன்முறை’ பற்றியோ நாம் கவனிக்கத்தவறிவிடுகிறோம்.

சமகால ஊடக உலகிலே போலிச் செய்திகளின் உருவாக்கம் மற்றும் பரம்பல் குறித்த விழிப்புணர்வு, சமூகமட்டங்களில் அரிதாகவே உள்ளதை அவதானிக்க முடியும்.

சமூக வலைத்தளங்கள் சார்ந்த பரந்துபட்ட மக்களின் இயக்கமானது, கூட்டு எதிர்ப்பரசியலின் ஆரோக்கியமான போராட்ட முன்னெடுப்பாக மாறலாம். அது போலவே, கூட்டு வன்முறையாகவும் அது மாறக்கூடும். ‘பெரும்பான்மை’ என்பது அறவுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் கூடிய சக்தியாக மட்டுமே எப்போதும் திரண்டெழுந்து வினையாற்றும் என்பதற்கான உத்தரவாதமில்லை. அடிப்படைவாதங்கள், மேலாதிக்கச் சிந்தனைகள், கசடுத்தனங்கள் போன்ற எதிர்மறைக் கூறுகள் சமூக உளவியலிலே கலந்திருந்து மேற்கிளம்பும் விதம், விரிவாக ஆராயப்பட வேண்டியது.

மக்கள் ஆதரவையோ அதிகாரத்தையோ புகழையோ அவாவி நிற்கும் தரப்புகளும், சனநாயக நீரோட்டத்திலே கலந்தோடுவதாகக் கட்டிக்கொள்ளும் சக்திகளும், பரந்துபட்ட மக்கள் சார்ந்த போராட்ட முன்னெடுப்புகளை இலகுவாகப் புறக்கணித்துவிட முடியாது. ஆனால், தமக்கெதிரான போராட்ட முன்னெடுப்புகளைத் திசை திருப்புவதுடன் அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய அதிகார மையங்களின் இயல்பு, உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது. ஆக, தெளிவான நிலைப்பாடும் சனநாயகப் பண்புகளும் மனிதாபிமானமும் அரசியல் முதிர்ச்சியும் அறவலிமையையும் கொண்ட போராட்ட முன்னெடுப்புகள் எப்போதும் வரவேற்கப்பட வேண்டியவை. அவற்றுக்குத் தனிநபராக ஒரு ‘தலைவர்’ இருக்கவேண்டியதில்லை. ‘தலைவர்’ என்னும் பொறிமுறை அவற்றுக்கு அவசியமில்லை. அத்தகைய போராட்ட முன்னெடுப்புகளை, சனநாயகப் பண்புகளும் அறவலிமை கொண்ட கருத்துக்களும் அரசியல் முதிர்ச்சியும்  தெளிவான நிலைப்பாடும் வழிநடத்தும். அத்தகைய போராட்ட முன்னெடுப்புகள் மட்டுமே, குறுங்குழுவாதங்களாலோ அடிப்படைவாதச் சக்திகளாலோ ‘பயன்படுத்தப்பட’ முடியாததாக இருக்கும். அத்தகைய தீர்க்கமான போராட்ட முன்னெடுப்புகளால் மட்டுமே நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கவும், உண்மை சார்ந்த உரையாடலைக் கண்ணியமாகத் தொடரவும், ‘வெல்லமுடியாத’ சூழ்நிலைகளிலே புறக்கணிப்பை நிகழ்த்திவிட்டுக் கடந்துசெல்லவும் முடியும்.

தமது கருத்து எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் உரிமை எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அதுவே, கருத்துச் சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிற அல்லது அறமற்ற காரியங்களைச் செய்கிற சனநாயக விரோத சக்திகள், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையினைத் துஸ்பிரயோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அத்தகைய நிலைமைகளை நாம் சமகால உலக நடப்புகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

மாற்றுக் கருத்தைக் கண்ணியமாக வெளிப்படுத்தக்கூடிய செயன்முறையானது, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலே தான் நிகழ முடியும். ஒரு கருத்திலே ‘குறை’ காணப்படும் நிலையில், அது வெளிப்படுத்தப்படுவதற்கும் கருத்துச் சுதந்திரமே அடித்தளமாகும். இங்கு, திரிபுவாதக் கருத்தொன்றை மாற்றுக் கருத்தாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. மேலும், அவதூறு எனப்படுவது கருத்தல்ல என்னும் புரிதல் அவசியமானது. எந்தவொரு கருத்துக்கும் அறப்பண்பு, தர்க்க நியாயம் இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஆக, தன் கருத்தால் மாற்றுக் கருத்தையும் திரிபுவாதக் கருத்தையும் ஒருவரால் எதிர்கொள்ள முடியும்.

ஒன்றின் பற்பட்ட ஒருவரின் கருத்தானது, எக்காலத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்றில்லை. அனுபவங்களதும் சூழ்நிலைகளதும் வேறுபாடுகளாலே, கருத்து வளர்ச்சியடையவோ மாற்றமடையவோ வாய்ப்புகள் உள்ளன. மோசமான சுயநல நோக்கிலே, காலத்துக்குக்காலம் கருத்து மாற்றும் நபர்கள் சார்ந்து இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.

எது எப்படியிருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தையும் தனிமனித சுதந்திரத்தையும் நாம் அனைவருக்குமானதாக வலியுறுத்தியாக வேண்டும். சமூக ஊடகங்களின் பெருக்கமும் பயன்பாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், சுயசிந்தனையும் விழிப்புணர்வும் பரந்த பார்வையும் கொண்ட ஒருவர், யாருடைய கருத்தையும் நடத்தையினையும் அலசி ஆராய முடியும். ஆக, ஊடக இயங்கியலைப் புரிந்துகொண்டு அவற்றைக் கையாளும் பக்குவத்தைச் சமூக மனிதர்கள் மத்தியிலே விதைக்க வேண்டியுள்ளது. கூடவே மனித உரிமைகளின் அவசியத்தை, மனிதாபிமானத்தை, தனிமனித சுதந்திரத்தின் தேவைகளை, கருத்துச் சுதந்திரத்தின் தாற்பரியத்தை, சுயமரியாதையை, சனநாயகப் பண்புகளை, அநீதிகளுக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடும் தீர்க்கத்தை…

எதிர்மறையான சமூகப் பாதிப்பை ஏற்படுத்த முடியாத தனிமனித நடத்தைகளை, நாம் தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் அணுகுவதே ஆரோக்கியமானது. தவிர, தனிமனித சுதந்திரத்தில் சட்டரீதியான வரையறைகள் நிகழ்த்தக்கூடிய சாதக மற்றும் பாதக அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

பன்மைத்துவம் நிலவும் இன்றைய உலகில் ‘மாற்றுக் கருத்துகள்’, ‘மாற்று நம்பிக்கைகள்’ இருக்கும். அத்தகைய மாற்றுக் கருத்துகளை, மாற்று நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்கள் மீதான ‘வெறுப்பரசியல்’ மற்றும் வன்முறை நடவடிக்கைகள் போன்றவை, ஒரு ஆரோக்கியமான தன்னெழுச்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தக் கூடியவை. அடிப்படை மனித உரிமைகளை, கருத்துச் சுதந்திரத்தை அனுசரித்து முன்னெடுக்கப்படும் போராட்டமே அறவழிப்பட்டதாக இருக்க முடியும்.

குறிப்பு : ஜல்லிக்கட்டுப் போராட்டம், 800 என்னும் திரைப்பட முயற்சி தொடர்பான சர்ச்சை போன்றவற்றை முன்வைத்து, தன்னெழுச்சிப் போராட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரம் சார்ந்து சில படிப்பினைகளைத் தமிழ்ச்சூழல் பெறமுடியும்.

2020-10-22
அமரதாஸ்