ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு நேர்காணல்
கேள்வி : உங்களது போர்க்கால ஒளிப்படங்கள் சார்ந்த ஒளிப்படக்காட்சிகளை நீங்கள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் நிகழ்த்துவதற்கான காரணம் குறித்தும், அவை சார்ந்த அனுபவங்கள் பற்றியும் கூற முடியுமா?
பதில் : இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் நான் உருவாக்கிய பல ஒளிப்படங்களைப் பல்வேறு தளங்களிலே வெளிப்படுத்தியிருக்கிறேன். வெவ்வேறு நாடுகளில் எனது ஒளிப்படக்காட்சி நிகழ்வுகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய செயன்முறைகளை, இயன்றவரை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறேன். அதிகமதிகம் குரூரமாகத் தோன்றக்கூடிய ஒளிப்படங்களை இயன்றவரை தவிர்த்து, உண்மையின் தரிசனங்களை உணர்வுபூர்வமாக நிகழ்த்தக்கூடிய ஒளிப்படங்களையே பெரும்பாலும் பொதுவெளியிலே காட்சிப்படுத்தி வருகிறேன். மற்றபடி, ‘போர்க்குற்றம்’ மற்றும் ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம்’, ‘இனப்படுகொலைக் குற்றம்’ சார்ந்த நீதி நடவடிக்கைகளின் போது அனைத்து விதமான ஒளிப்படங்களும் பிரயோகிக்கப்பட வேண்டியவை. பொதுவெளியிலே காட்சிப்படுத்தப்படாத பல ஒளிப்படங்கள் என்னிடம் இருக்கின்றன. அவை, அவற்றுக்கான பிரத்தியேக வெளிகளில் வினையாற்றிக்கொண்டிருக்கும்.
மரபு ரீதியிலான ஒளிப்படக்காட்சி நிகழ்வுகளைத் தாண்டி, வெளிநாடுகளில் அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற பிரத்தியேகமான சந்திப்புகளின் போதும் எனது ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி அவை குறித்து உரையாடி வருகிறேன். அவை பற்றிய விபரங்கள், சில காரணங்களுக்காகப் பொதுவெளியில் முன்வைக்கப்படுவதில்லை. சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் எனது ஒளிப்படங்கள் பயன்பாட்டில் உள்ளன.
பாரிய மானுட அவலங்களோடு 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலே போர் முடிவுக்கு வந்த பின்னர், தனிப்பட்ட ரீதியிலே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த 2010 ஆம் ஆண்டில், இலங்கையின் பல பகுதிகளிலும் பணியாற்றிக்கொண்டிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில், எனது போர்க்கால ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி அவை குறித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். போரில் இருந்து தப்பிப்பிழைத்து மீண்டு வந்திருந்த தமிழர்களால், போர்க்காலத்திலே மறைக்கப்பட்ட மற்றும் வெளித்தெரிந்திராத உண்மைகள் சார்ந்து பொதுத்தளங்களிலே ‘சாட்சி நிலை’ நின்று வெளிப்படையாகப் பேசமுடியாதிருந்த ‘இருண்ட காலம்’ அது. அக் காலத்தை, இலங்கையின் ‘பின்- போர்க்காலம்’ என்று குறிப்பிடுவேன்.
சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் இருந்து, போரிலே மறைக்கப்பட்ட உண்மைகளைப் பேசுவதுடன் உண்மைகள் சார்ந்து சுயாதீனமாகச் செயற்படுகிறேன். அதனாலோ என்னவோ, அநாமதேய எதிரிகளின் சதி நடவடிக்கைகளும் அவதூறு பரப்பல்களும் என்னைக் குறிவைத்து அவ்வப்போதுமேற்கொள்ளப்படுகின்றன. எது எப்படியிருந்தாலும், அனைத்து விதமான நெருக்கடிகளையும் அறத்தின் வல்லமையோடு எதிர்கொண்டு கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
கொடிய போர்ச்சூழலில் இருந்து நானே நேரடியாக உருவாக்கிய ஒளிப்படங்களை, மீள மீள நானே பார்த்துப் பார்த்துக் கையாள வேண்டியிருப்பதால், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக நேர்கிறது. எப்படியோ, மீண்டெழுந்து பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான போரை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீதும் மூர்க்கமான போரை முன்னெடுத்த சிறீலங்கா அரசானது, மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வேண்டிய ‘தீர்வு’ சார்ந்து ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சிறீலங்கா அரச தரப்பினரின் பாரிய குற்றங்களையும் ஈழத்தமிழரின் பேரவலங்களையும் மூடிமறைத்து, சிங்களப் பேரினவாதத்தின் அச்சிலே தான் இன்னமும் சுழல்கிறது சிறீலங்கா அரச இயந்திரம். மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்த நீதி கோரும் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கிலும், விடுதலை அரசியல் சார் முன்னெடுப்புகளை ஒடுக்கும் வகையிலும் ‘நினைவழிப்பு’ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய பின்னணியில், எனது போர்க்கால ஒளிப்படங்களைத் தொடர்ச்சியாகக் காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியம் அல்லது தேவை புரிந்துகொள்ளப்பட முடியும்.
கலை மற்றும் ஊடகவியல் சாந்த செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்ற எனது ஒளிப்படக்காட்சி நிகழ்வுகள், பல்வேறு மூலோபாயங்களைக் கொண்டிருக்கின்றன.
கொடிய போரில், ஈழத்தமிழருக்கு என்ன நடந்தது என்பது ஒருபோதும் மறக்கப்பட முடியாதது என்பது மிக மிக முக்கியமானது.
மறைக்கப்பட்ட உண்மைகளைக் காட்சி மொழியில் எடுத்துரைக்கும் முயற்சிகளாக,
போரிலே வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ‘நீதி’ கோரும் செயற்பாடுகளாக,
கலை வழியாகத் தொடரும் விடுதலை அரசியல் சார் முன்னெடுப்புகளாக,
நினைவழிப்பிற்கு எதிரான புரட்சிகரப் போராட்டங்களாக,
நினைவெழுச்சியை முன்னெடுக்கும் தந்திரோபாயச் செயல் முறைகளாக,
போரின் விபரீத விளைவுகளை எதிர்காலத்தின் நினைவுகளிலே தக்க வைத்திருப்பதற்கான சமகால முன் முயற்சிகளாக,
மறதிக்கு எதிரான நினைவுகளின் எழுச்சிகர முன் நகர்வுகளாக,
கண்ணியமான விடுதலை வாழ்வை அவாவும் ஈழத்தமிழரின் பாடுகளை சர்வதேச அரங்கிலே கவனப்படுத்தும் உத்திமுறைகளாக,
ஒடுக்குமுறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்படும் ஈழத்தமிழரது எதிர்ப்பு அரசியலின் செயல் வடிவங்களாக,
போருக்கு எதிரான போராட்ட முன்னெடுப்புகளாக,
கொடிய போரிலே மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளாக,
எனது போர்க்கால ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வுகள் தொடர்கின்றன என்று கருதுகிறேன்.
2020-11-27
ஈழத்தமிழர் சார்ந்த ஆய்வு நூலாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர், ஆய்விலே பயன்படுத்துவதற்காக அமரதாஸ் அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்துப் பதில் வழங்குமாறு கோரியிருந்தார். அவரது கேள்வியும் அதற்கான பதிலும் ஒரு நேர்காணல் வடிவம் ஆகியிருக்கிறது.