சுவிற்சர்லாந்து நாட்டின் ஓவியப் போட்டி ஒன்றிலே ஈழத்துப் பெண் முதற் பரிசு பெற்றார்

சுவிற்சர்லாந்தில் இயங்கும் Raiffeisen வங்கி நடாத்திய இளையோர்களுக்கான 49 ஆவது ஆக்கத்திறன் போட்டியின் ஓவியப் பிரிவில், ‘இசையின் உலகம்’ எனும் தலைப்பில் வரையப்பட்ட ஓவியத்திற்கு, 2019 ஆம் ஆண்டில் முதற் பரிசு வழங்கப்பட்டது.

இசையுடன் தொடர்பு படுத்தி, சொந்த அனுபவத்தினைக் கலையாகப் படைக்குமாறு வங்கி கோரியிருந்தது. ஈழத்தின் இணுவிலைச் சேர்ந்த பெற்றோருக்கு, சுவிற்சர்லாந்தின் அறோ மாநிலத்தின் புறுக் நகரிலே பிறந்த செல்வி. அபிர்சனா தயாளகுரு, பல போட்டியாளர்களுடன் கலந்துகொண்டு ‘இசை என்னை அசைக்கிறது’ எனும் தலைப்பில் வரைந்த ஓவியம் முதலாவது பரிசை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்து நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையிலே பட்டயக் கல்வியை மேற்கொள்ளும் இவர், உயர் கட்டிடக் கட்டுமான வரைஞராகவும் மேற்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.

ஆயிரம் சுவிஸ் பிராங்குகள், அபிர்சனா விற்கு முதலாவது பரிசாக வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. மதிப்பளிப்பு நிகழ்வு, 2019-06-19 அன்று அவுஸ்ரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றிருந்தது.  

தமிழ் இன அழிப்பிற்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதிகேட்டு ஜெனீவாவிலே 2021-03-01 அன்று நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்ட மேடைக்காக, அபிர்சனா வினால் ஓவியம் ஒன்று வரையப்பட்டது. ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பு, போர்க்குற்றம் மற்றும் இன்றுரை தொடரும் சிங்கள பௌத்த ஒடுக்குமுறை போன்றவற்றை அந்த ஓவியத்தில் வெளிப்படுத்த முனைந்துள்ளார். அந்த ஓவியத்திற்கே Raiffeisen வங்கி பரிசு வழங்கியுள்ளதாகத் தவறான தகவல் பரவியுள்ளது.