போர்க்காலப் பூக்கள்
அடுத்தடுத்து போர் விமானங்கள் வானில் வட்டமடித்து அச்சுறுத்திக்கொண்டிருந்த அன்றைய காலையில், வானத்தை அவதானித்துக்கொண்டிருந்த தருணமொன்றிலே தான் இந்தத் தேமாப் பூக்களைக் கண்டடைந்தேன். இறுதிப் போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் நான் அமைத்திருந்த கூடாரத்தின் ஒரு பக்கத்தைத் தாங்கிக்கொண்டிருந்த தேமாப் பூமரத்தில் இவை எனக்கெனவே தான் மலர்ந்திருக்க வேண்டும்.
காயங்களையும் குருதியின் வர்ணத்தையும் புழுதி படிந்த மனிதர்களையும் என் கமெராவின் திரைகாட்டி (viewfinder) வழியாகக் கண்டுகொண்டேயிருந்த கண்களில், வெண்மை படர்த்தின இவை.
குண்டுச் சத்தங்களும் ஓலங்களும் தீராப் புழுதியும் கரும் புகையும் கிளர்ந்தலையும் ஒரு விபரீதச் சூழலில், இந்த வெண் மலர்களை ஏன் மலர்த்தினாய் இயற்கையே….? அப்போதிருந்த என் துயரறிந்து, அவலத்தின் விம்பங்களில் எரிந்துகொண்டிருந்த கண்களைக் குளிர்விக்க மலர்ந்தனவோ இவை?
அந்தக் காலையில் இந்தப் பூக்களை நான் ஒளிப்படமாக்கும் தருணத்திலே பூரித்திருந்தன. அன்றே இவை சாட்சியாயிருக்க, ஒலியை முந்தும் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் குண்டுகளையும் அயலிலே காப்புத் தேடிப் பதுங்கும் மக்களையும், போர் விமானங்களின் பேரொலி கேட்டுக் கெலித்துப்போய்த் தறிகெட்டு ஒடும் ஒரு நாயையும் ஒளிப்படங்கள் ஆக்கினேன்.
எதுவும் வாழத் தகுதியற்றதாக மாற்றப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நிலத்தில், எனக்கெனவே மலர்ந்திருந்த இந்தப் பூக்களுக்கு என்ன நடந்திருக்கும்?
இந்தப் பூக்களை நான் ஒளிப்படமாக்கிய அன்றில் இருந்து சரியாக நான்காவது நாளில் என் கூடாரம் குண்டுத் தாக்குதலிலே சரிந்த போது, மீண்டும் ஒரு தப்பித்தலுக்கான வாய்ப்பிருந்து மீண்டும் ஒரு காயத்துடன் மயிரிழையில் நான் உயிர் பிழைத்துக் கொண்ட போது, அருகில் இருந்த என் மைத்துனன் கொல்லப்பட்ட போது, இந்தப் பூக்கள் சிதைந்து கருகி உதிர்ந்து போயிருக்கக்கூடும்.
குறிப்பு: எனது மைத்துனன் குண்டுத் தாக்குதலிலே கொல்லப்பட்ட பின்னர், குறுகிய நேரம் மட்டுமே அவரது உடல் அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது நான் உருவாக்கிய ஒளிப்படங்களில் ஒன்றும் எனது வேறு பல ஒளிப்படங்களும் Trevor Grant என்னும் அவுஸ்திரேலிய ஊடகர் எழுதிய SRI LANKA’S SECRETS என்னும் நூலிலே பிரசுரமாகியிருக்கின்றன.
2021-05-18
அமரதாஸ்