ஒரு தமிழ்த் திரைப்படத்தை முன்வைத்து…
அண்மையில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் குறித்த எதிர்மறையான பதிவுகளையே பெரும்பாலும் இணைய வெளிகளிற் காண முடிகிறது. அத்தகைய பதிவுகள், பெரும்பாலும் ஒரு சினமாவை நேர்மையாகவும் பன்முகத்தன்மையுடனும் அணுகும் பக்குவம் கொண்டவையல்ல. அத் திரைப்படமானது, இதுவரை ஆழமான விமர்சன நோக்கில் அணுகப்படவில்லை. அது பற்றிய விரிவான விமர்சனம் எழுதும் அவகாசம் இப்போது இல்லை. இது ஒரு விமர்சன முன் வரைவு மட்டுமே.
‘ஜகமே தந்திரம்’ திரைப்படமானது, நேர்த்தியான ஒளிப்பதிவையும் கதைக்களங்களுக்குப் பொருந்தக்கூடிய இசைக்கோலங்களையும் கொண்டிருக்கிறது. அது ஒரு நிறைவான சினமாவாக, வலிமையான கலைப்படைப்பாக இல்லை என்பது எனது பார்வை. திரைக்கதை அமைப்பும் சில காட்சியமைப்புகளும் போதாமைகள் கொண்டவை. சில உரையாடல்கள், வலிந்து செருகப்பட்டவை போலத் தோன்றுகின்றன. புனைவுக் காட்சிகளில் நிஜ நிகழ்வுகளின் சாயலைக் கலக்க முற்பட்டிருக்கும் இயக்குநரின் முயற்சி, சில இடங்களில் அபத்தமாகியிருக்கிறது. குறைபாடுகள் இருப்பினும், ஈழத்தமிழர்கள் சார்ந்த காட்சிகள் ஒப்பீட்டளவில் நேர்மையாகக் கையாளப்பட்டுள்ளன. அந்த வகையில், இத் திரைப்படமானது தமிழ்ச் சூழலிலே கவனிக்கப்பட வேண்டியதாகிறது. மற்றபடி, பலர் சொல்வது போல இதன் ஒட்டுமொத்த அரசியல் உள்ளோட்டத்தில் ‘மோசமான உள்நோக்கம்’ இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிலர், இதற்கு முன்னர் வெளியான ‘Family Man 2’ திரைத் தொடருடன் இதனை அபத்தமாக ஒப்பீடு செய்து இரண்டையும் ஒரே பார்வைக் கோணத்தில் அணுக முயல்கிறார்கள். ‘Family Man 2’ கொண்டிருக்கும் அரசியல் உள்ளோட்டம் வேறானது; மோசடியானது. அது ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.
இங்கிலாந்து நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய குழுக்கள் (gangster) பற்றிய கதைக்களத்தின் பிரதான உள்ளோட்டமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பாடுகளையும் வேறு சில விடயங்களையும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நுட்பமாக இணைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். எனினும் அதில் நிகழக்கூடிய ‘புனைவுத் தவறுகள்’ குறித்து அக்கறை கொள்ளப்படவில்லை என்று தோன்றுகிறது. புனைவுத்தளத்தில் இத் திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், சமகால உலக நடப்புகளையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. எனவே, பல காட்சியமைப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற சாகச சண்டைக் காட்சிகள் மற்றும் குண்டுவெடிப்புகள் இங்கிலாந்து நாட்டில் நடப்பதாகவும் அவற்றில் ஈழத்தமிழர்கள் சம்மந்தப்படுவதாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளை அநாயாசமாக ஏந்தியபடி சுட்டுக்கொண்டே ஒரு தினுசாக நடக்கும் தனுசின் ‘சாகசப் போலி’ உருவத்தை இத் திரைப்படத்திற்கான விளம்பரங்களிலே பயன்படுத்தியிருக்கிறார்கள். அத்தகைய விளம்பரங்கள், இத் திரைப்படத்தின் ‘குறை தீவிர’ இயல்பைக் கோடி காட்டி விடுகின்றன. நல்ல நடிகராக அறியப்படும் தனுஷ், இத் திரைப்படத்தில் நல்லபடியாகக் கையாளப்படவில்லை.
ஒரு திரைப்படமானது பல்வேறுநோக்கு நிலைகளில், உட் கூறுகளின் அடிப்படையில் அணுக்கப்பட வேண்டியது அவசியம். எனினும், ஒட்டுமொத்த இயக்கத்தின் வழியாகத் திரைப்படம் அடையும் அரசியலும் கடத்தும் அனுபவங்களும் முக்கியமானவை. திரைப்படத்திற்கு மட்டுமல்ல, இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் இது பொருந்தும்.
ஒரு திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் எப்போதும் இயக்குநரின் கருத்தியலை அல்லது அரசியலை முழுமையாகப் பிரதிபலிக்கும் என்று கொள்ள முடியாது. பாத்திரங்களின் குண இயல்புகளில் இருந்து தான் பெரும்பாலும் காட்சிகளும் வசனங்களும் தோற்றம் கொள்கின்றன. ஆக, ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்த இயக்க முறைமையில் இருந்து தான் இயக்குநரின் கருத்தியல் அல்லது அரசியல் அடையாளம் காணப்பட முடியும்.
ஈழத்தமிழர்கள் சார்ந்த அல்லது விடுதலைப் புலிகள் சார்ந்த காட்சிகளை யாரும் திரைப்படங்களில் வைக்க முடியும். அவற்றின் அடிப்படைத் தேவைகளும் பொருத்தப்பாடுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. எதையும் யாரும் விமர்சிக்க முடியும். எதுவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சமூக வலைத்தளங்களில் நக்கலாக நாலு வரி எழுதிய பின்னர், ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாகவோ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாகவோ தம்மைக் காண்பிக்க முயல்கிறார்கள் சிலர். எந்த விடயங்களையும் ‘புனித மதிப்பீடு’ சார்ந்தும் ‘அடிப்படைவாத அடையாள அரசியல்’ சார்ந்தும் அணுக முயல்கிறவர்கள் இலகுவில் பதட்டமடைகிறார்கள். அத்தகையவர்கள் எதையும் ‘விலகி நின்று’ விமர்சனபூர்வமாகப் பார்ப்பதில்லை. மட்டுமல்ல, ஆரோக்கியமான முயற்சிகளுக்கான முட்டுக்கட்டைகளாக இருந்து சனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், வெறுப்பு அரசியலை விதைப்பவர்களாக மாறி விடுகிறார்கள். இத்தகைய போக்கு, நீண்டகாலமாக மோசமான பாதிப்புகளையும் ஒடுக்கு முறைகளையும் எதிர்கொண்டு வரும் ஈழத்தமிழர் சார்ந்த ஆரோக்கியமான கலை முயற்சிகளைக் கணிசமாகப் பாதிக்கும். ஒரு படைப்பானது, விடுதலைப் புலிகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்களைக் கொண்டிருக்குமாயின் அது ஈழத்தமிழர்களுக்கு விரோதமானதாக இருக்கும் என்னும் தவறான நம்பிக்கை இன்னமும் தமிழ்ச் சூழலில் நிலவுகிறது.
பலர் சொல்வது போல, ‘ஜகமே தந்திரம்’ ஒரு மோசமான அல்லது மோசடியான திரைப்படம் அல்ல. அது பற்றிய பன்முகப் பார்வைகள் ஆரோக்கியமான முறையில் வர வேண்டும். இப்படியான சாதாரண திரைப்படங்களில் ஈழத்தமிழர் சார்ந்த விடயங்கள் கையாளப்படுவது திருப்திகரமாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சாதகமான முயற்சிகளைத் தடுத்து விடக்கூடிய வறட்சியான சூழல் வலிந்து உருவாக்கப்படாமல், ஆரோக்கியமான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள், தமக்கான நல்ல திரைப்படங்களை உருவாக்க முன்வர வேண்டும். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களது ஆதரவை ஈழத்தமிழ்க் கலைஞர்கள் பெற்றுக்கொள்ள முடியு
இன்று வெளியான ஒரு நேர்காணலில், ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார். ஈழப்பிரச்சினையில் அவரது ‘ஆர்வம்’ குறித்துக் கேட்கப்படுகிற சந்தர்ப்பத்தில், ‘ஆர்வம்’ என்ற வார்த்தையைப் புறக்கணித்து விட்டு உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதாகப் பதிலளித்திருக்கிறார். மேலும், வருங்காலத்தில் முழுமையான போர் சார்ந்த திரைப்படம் உருவாக்கும் அவரது விருப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலே பணியாற்றிய சோமீதரன் போன்ற, காட்சிக் கலைகள் சார் ஈடுபாடு கொண்ட கலைஞர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். அத்தகையவர்களால் ஈழத்தமிழருக்கான நல்ல சினமா உருவாக்கப்படலாம். அண்மையில், ‘The Photographer of Mauthausen’ என்ற திரைப்படம் பார்த்தேன். ஆஸ்திரியாவில் நாஜி வதை முகாமில் மாட்டிக்கொண்ட ஸ்பானிஷ் ஒளிப்படக் கலைஞர் பற்றியது. அது போன்ற காத்திரமான திரைப்படங்கள் நம் மத்தியில் இருந்து வர வேண்டும்; வர முடியும்.
அமரதாஸ் 2021-06-21