தரமான ‘கூழாங்கல்’

சர்வதேசத் திரைப்பட விழா (International Film Festival of South Asia Toronto 2021) ஒன்றிலே ‘கூழாங்கல்’ என்னும் தமிழ்த் திரைப்படத்தினைப் பார்க்க முடிந்தது. அரிதாகவே ‘குறைகள்’ கொண்டிருக்கும் தரமான படைப்பு இதுவாகும். பி.எஸ். வினோத்ராஜ் என்னும் அறிமுக இயக்குநரின் வழியாக இத்தகையதொரு நல்ல தமிழ்த் திரைப்படம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ‘வணிகத் திரைப்படங்கள்’ என்று அறியப்படுகின்ற சாதாரணமான அல்லது மோசமான தமிழ்த் திரைப்படங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இத் திரைப்படத்தைத் தாயாரித்திருக்கிறார்கள். இத்தகைய நல்ல திரைப்படத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநரும் ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இத் திரைப்படத்தின் தரத்திற்கு, ஒளிப்பதிவு மற்றும் ஒலியமைப்பு ஆகிய திரைமொழிக் கூறுகள் மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. திரைப்படத்திலே தோன்றுகிற அனைவரும் இயல்பாக, நம்பகத்தன்மையுடன் நடித்திருக்கிறார்கள். உரையாடல்கள் அதிகம் அவசியமற்ற எளிமையான திரைக்கதை அமைப்பின் வழியாக, வலிமையான காட்சிமொழி சாத்தியமாகியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வரட்சியான கிராமம் ஒன்றின் நிலக்காட்சிகள், பாத்திரங்களின் மன உலகங்களைப் பிரதிபலிக்கும் வகையிற் பிரயோகிக்கப்பட்டுள்ளன. ‘Interior landscape’ என்னும் சொற்றொடர் மூலம் அடையாளப்படுத்தக்கூடிய திரைமொழிப் பண்பானது, தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் காணப்படுவதில்லை. இத் திரைப்படத்தில் அதனை ஓரளவிற் காண முடியும். பிரசன்ன விதானகே இயக்கிய ‘Death on a Full Moon Day’ என்னும் சிங்களத் திரைப்படமானது அத்தகைய பண்பினை ஓரளவு கொண்டிருக்கும்.

அவலமான சமூக யதார்த்த நிலைமைகளாலும் ஏற்றத்தாழ்வுகளாலும் வறுமையாலும் முரண்பாடுகளாலும் ‘ஆரோக்கியமற்ற’ எண்ணங்களாலும் அலைக்கழியும் மனிதர்கள், இந்த உலகின் திசைகளெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகைய மனிதர்களின் நெருக்கடிகள் நிறைந்த பிறழ்வான வாழ்வியலை, ஒரு வரட்சியான தமிழ்க் கிராமத்தின் பின்புலத்திலே கலாபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். நிதானமற்ற அல்லது ‘சீரற்ற’ குடிகாரத் தந்தையினால் அலைக்கழியும் சிறுவன், இந்த உலகின் பொல்லாப்புகளாற் சீரழியும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவன்.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2021 இல் ‘டைகர் விருது’ (Tiger Award) பெற்றுள்ளது இத் திரைப்படம். இந்த விருதைப் பெற்றுள்ள முதலாவது தமிழ்த் திரைப்படம் இது தான். 2017ஆம் ஆண்டு வெளியான ‘செக்ஸி துர்கா’ என்னும் மலையாளத் திரைப்படத்திற்கு இந்த விருது முன்னர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூழாங்கல்’ போன்ற நல்ல தமிழ்த் திரைப்படங்கள், சர்வதேச அளவிலே கவனம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது. அவை, திரைப்பட விழாக்களில் மட்டுமல்லாமல் இணைய வெளிகளிலும் திரையரங்குகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டியவை.

சினமா சார் கலைஞர்கள் நல்லெண்ணத்துடன் இணைந்து முயன்றால், இத்தகைய நல்ல திரைப்படங்களைக் குறைந்த செலவில் உருவாக்கிவிட முடியும். ஆனால், சமூக அக்கறையும் சினமா குறித்த ஆழ்ந்த புரிதலும் அவர்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

அமரதாஸ்
2021-08-23