செல்லப் பிராணிகள் மீதான போர்
சர்வதேச நாய்கள் தினம் பற்றித் தெரியவந்தபோது (2021-08-26), இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் நாய்கள் சார்ந்து நான் உருவாக்கிய பல ஒளிப்படங்களின் நினைவுகள் மேலெழுந்தன.
கொடிய போரால் இடைவிடாமல் விரட்டப்பட்டுப் போக்கிடம் தெரியாமல் ஓடிக்கொண்டேயிருந்த தமிழ் மக்கள், தமது வளர்ப்புப் பிராணிகளை இயன்றவரை பாதுகாத்தார்கள். பல நாய்கள், தம்மை வளர்த்தவர்களைத் தவறவிட்டுத் தெருக்களெங்கும் தேடியலைந்த காட்சிகளையும் ஒளிப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறேன். அத்தகைய சில ஒளிப்படங்கள், வெளிவரவிருக்கும் எனது ஒளிப்பட நூலில் இடம்பெற்றுள்ளன.
குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில், செல்லப் பிராணியாகிய நாயைப் பாதுகாத்து எடுத்துச்செல்லும் பெண்ணை ஒரு நாள் ஒளிப்படங்களாக்க நேர்ந்தது. அதன் பின்னர், அந்தப் பெண்ணுக்கும் அவரது செல்லப் பிராணிக்கும் நடந்தவை பற்றிப் பின்னர் விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். ஜீவகாருண்யம் நிறைந்த அந்தப் பெண், போரில் இருந்து தப்பிப்பிழைத்து இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
2021-08-27
அமரதாஸ்