போர்க்குற்றங்களின் உலகு

இலங்கை இறுதிப் போரின் முகம் (2009).

உலக வரலாற்றில் எல்லாப் போர்களுக்கும் வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. வெவ்வேறு நோக்கு நிலைகளில் அவற்றை நியாயப்படுத்தும் எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எது எப்படியிருந்தாலும், எத்தகைய காரணங்களாலும் போர்களை ஒருபோதும் நியாயப்படுத்தி வரவேற்க முடியாது.

போர் என்பது மனித குலத்துக்கு எதிரான மாபெரும் குற்றம் ஆகும். ஆதலால், எந்தப் போரையும் புனிதப்படுத்தும் இழிவை நாம் மேற்கொள்ள முடியாது. போருக்கான பின்னணியில் மறைந்திருந்து இயங்குகிறவர்களும் போரை வழிநடத்துகிறவர்களும் முதன்மையான போர்க்குற்றவாளிகள். போர் ஒன்று தொடங்கி விட்டால், அதில் ஈடுபடும் தரப்புகள் போர் சார்ந்த குற்றங்களை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே உருவாகி விடுகின்றன. இதுவரையான அனைத்துப் போர்களிலும் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள் சார்ந்து பாரபட்சங்களாலும் ஒடுக்குமுறைகளாலும் ஆட்டுவிக்கப்படும் இந்த உலகம், எப்போதும் போரை எதிர்நோக்கிய கொதிநிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதிகார மையங்களின் ஆபத்தான வணிகங்களுக்குப் போர்கள் பயன்படுகின்றன. ஆக, எங்கிருந்தோ யாராலோ திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிற போரை அப்பாவி மனிதர்கள் முன்னெடுத்துச் சென்று அழிந்து போக வேண்டுமா?

எந்தவொரு போருக்கு மத்தியிலும் போரில் நேரடித் தொடர்பு கொண்டிராத சாதாரண மக்களின் தரப்பும் நிச்சயமாக இருக்கும். அந்தத் தரப்பு, போரிடும் தரப்புகளின் நோக்கங்களுக்கு அமைவாகக்  கையாளப்படுவதும் அலைக்கழிக்கப்படுவதும் நடக்கும். அத்தகைய மக்கள் தரப்பின் அவலங்களும் தேவைகளும் அதிகமதிகம் பேசப்பட வேண்டியவை. பொது மக்கள் தரப்பிலிருந்து, போருக்கு எதிரான நியாயமான ‘போராட்டம்’ முன்னெடுக்கப்படலாம். ‘போராட்டம்’ எனப்படுவது, போரின் அல்லது ஒடுக்குமுறையின் தவிர்க்கப்படவியலாத விளைவாகவே நோக்கப்பட வேண்டியது. தற்காத்துக்கொள்வதற்கான இறுதித் தேர்வாக அமையக்கூடிய ‘போராட்டம்’ ஒன்று, போருக்குரிய நாசகாரப் பண்புகளால் ஊட்டம் பெற்றுச் சீரழிந்து போய்விடும் ஆபத்து நிகழ்ந்துவிடக்கூடும். நடைமுறைச் சாத்தியங்களுக்கு அமைவாக அற வழியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வாயிலாக மட்டுமே மானுட மாண்பையும் சுதந்திர இருப்பையும் தக்கவைக்க முடியும்.  

போரில் முதலிற் பலியிடப்படுவது ‘உண்மை’ என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாக்கம் ஆகும். போரில் ஈடுபடும் எதோ ஒரு தரப்பின் பக்கமாகச் சாய்ந்து நின்று போரை அணுகுவது ஆபத்தானது. எத்தகைய பாரபட்சமும் இன்றி, ‘சாட்சி நிலை’ நின்று போரை அணுகும் நிதானம் நமக்கு வாய்க்க வேண்டும். மனிதாபிமானத்தின் ஒளியில் அனைத்துப் போர்களையும் விளங்கிக்கொண்டு போர்களற்ற உலகைப் படைத்துக் கண்ணியமாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும்.

போரின் காரண காரியங்கள் பேசப்படுகிற அளவிற்கு, போரின் அவலங்களும் கொடிய விளைவுகளும் மறைக்கப்படுகிற உண்மைகளும் பெரும்பாலான ஊடகங்களில் விரிவாகப் பேசப்படுவதில்லை. போர் சார்ந்த செய்திகளை வெறுமனே மேம்படுத்தல் (update) செய்து கவர்ச்சிகரமாக்குவது மட்டுமே பெரும்பாலான ஊடகங்களின் போர்க்காலக்  ‘கட்டாயக் கடமை’ ஆக்கப்படுகிறது. 

போர்க்களங்களில் நிகழும் மரணங்களையும் கொலைகளையும் புனிதப்படுத்திக் காண்பிப்பதும் போர்க்கள மேலதிகாரிகளின் சர்வாதிகாரநடவடிக்கைகளை வீரச் செயல்களாக முன்வைப்பதும் போரிடும் தரப்புகளிடையே நிகழக்கூடிய இழி செயல்கள் ஆகும். அத்தகைய இழிவார்ந்த செயல்களை ஊடகங்கள் மேற்கொள்வது ஆபத்தானது.  

போர் எனப்படுவது, இலத்திரனியற் சாதனங்களில் நுகரப்படுகிற காணொலி விளையாட்டு (video game) அல்ல. ஆனால், அதைப் பலரும் அப்படியாகத்தான் கையாளவும் காணவும் விழைகிறார்கள். போரினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகளை, ஒருபோதும் எதனாலும் ஈடு செய்துவிட முடியாது.

எனது நூல் ஒன்றுக்காக ஏற்கெனவே நான் எழுதியிருக்கும் முன்னுரை ஒன்றின் சிறு பகுதி, அடுத்த பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது.      

”மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் சார்ந்த அனைத்துச் சொத்துகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நிலத்திற்கும் இயற்கைச் சூழமைவிற்கும் மோசமான பாதிப்புகளைப் போர்கள் ஏற்படுத்தி விடுகின்றன. போரானது, மனித குலத்திற்கும் இயற்கைக்கும் எதிரான பாரிய குற்றமாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். போர் நிகழ்த்தப்படுகிற சமயத்தில், ‘போர் சார்ந்த குற்றங்கள்’ நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. வலிந்து திணிக்கப்படும் போரை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் விடுதலைக்கான போராட்டமும் போரும் ஒத்தவை அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக்கூடும். ஆகவே, போராட்டத்திலும் போர் சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது, போராட்டத்தை எதிர்ப்பது ஆகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய போருக்குரிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதுவும் போராட்டத்தை எதிர்ப்பது ஆகாது. போரும் போராட்டமும் ஏன் உருவாக்கப்படுகின்றன, எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.” 

ரஷ்ய-உக்ரேனியப் போர் தீவிரமடையும் சமகாலத்தில் உடனடியாகப் போரை நிறுத்தக்கூடிய ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடாமல், போரிடும் தரப்புகளை மேலும் உசுப்பி விடக்கூடிய நடவடிக்கைகளையே உலகின் அதிகார வலையமைப்புகளைக் கொண்ட பல்வேறு சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரேன் மக்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் அவசியமாகத் தேவைப்படும். மேற்குலக மற்றும் அமெரிக்க சார்புச் சக்திகளால் உக்ரேன் அரசுக்குக் கனரக ஆயுதங்கள் வழங்கப்படும் விசித்திரக் கபடத்தனம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளை, உலகின் பெரும்பான்மைச் சக்திகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. எனில், இந்த உலகம் எவ்வளவு ஆபத்தானது?

உலகின் எந்த ஒரு மூலையிலாவது அநீதி இழைக்கப்படுமாயின், அது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான அச்சுறுத்தலாகவும் இழிவாகவும் நோக்கப்பட வேண்டும்.

ரஷ்ய-உக்ரேனியப் போரில் (2022) உருவாக்கப்பட்டது.

ரஷ்ய-உக்ரேனியப் போரின் முகம் (2022). இணையத்தில் இருந்து பெறப்பட்டது.

அமரதாஸ்
01-03-2022 (ரஷ்ய-உக்ரேனியப் போர்க்காலம்)