ART FACES (Photo exhibition)
சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள Rorschach என்னும் இடத்தில் WÜRTH HAUS RORSCHACH என்னும் மிகப் பெரிய ‘கலை மையம்’ அமைந்துள்ளது. சிறப்பான ஓவியக்காட்சிகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் சமகாலத்தில் அங்கு நடைபெற்றுவருகின்றன.
கடந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞர்கள் பலரின் குறிப்பிடத்தக்க உருவப்படங்களின் (portraits) பெருந்தொகுப்பைக் கொண்ட ஒரு ஒளிப்படக்காட்சி, ART FACES என்னும் மகுடத்தில் இப்போது நடைபெறுகிறது. 2022-06-06 அன்று நிறைவடையவுள்ள இந்த நிகழ்வானது, 2021-07-26 அன்று தொடக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் இரண்டு முறை அங்கு சென்று ஒளிப்படக்காட்சி நிகழ்விற் கலந்துகொண்டேன். வேறு சில ஓவியக்காட்சிகளிலும் கலந்துகொள்ள முடிந்தது. நிரந்தரமாக அங்கு நிறுவப்பட்டுள்ள நூல் நிலையத்தில் இருந்து சில நூல்களை வாங்க முடிந்தது.
இயற்கை வனப்புகள் நிறைந்துள்ள இடத்தில், Bodensee என்னும் நீரேரிக்கு அருகில் WÜRTH HAUS RORSCHACH ‘கலை மையம்’ அமைந்துள்ளது. (முகவரி: Churerstrasse 10, 9400 Rorschach, Schweiz) அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட சந்தர்ப்பங்களில், தமிழர்கள் யாரையும் சந்திக்க முடிந்ததில்லை. இத்தகைய இடங்களுக்கு யாரும் சென்று, பயனுள்ள இனிய அனுபவங்களைப் பெற முடியும்.
அமரதாஸ்
2022-06-03