சிறப்பாக நடைபெற்ற ஒளிப்பட நூல் வெளியீட்டு நிகழ்வு

நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வு, இங்கிலாந்து நாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
லண்டனில் College Rd, Harrow HA1 1BA என்னும் முகவரியில் அமைந்துள்ள Harrow Baptist Church மண்டபத்தில் 2022-10-22 அன்று நடைபெற்ற மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வு, திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
சர்வதேச ஊடகர்கள், சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மேற்படி நூலின் ஒளிப்படங்களிற் தோன்றுபவர்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலானவர்கள் நிகழ்விற் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ், தனது ஒளிப்பட நூலை வெளியிட்டுவைத்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஊடகரும் மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் முதற் பிரதியினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேற்படி நிகழ்வை ஊடகர் நடேசன் நெறிப்படுத்தினார். அமரதாஸ் வெளியீட்டுரை நிகழ்த்தினார். நூலியலாளர் என். செல்வராஜா, எழுத்தாளரும் கலை விமர்சகருமான யமுனா ராஜேந்திரன், ஒளிப்படக் கலைஞர் சபேஸ் சுகுணசபேசன், எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சேனன் ஆகியோர் ஒளிப்பட நூல் தொடர்பாகக் கருத்துரைகளை நிகழ்த்தினர். நிகழ்வு நிறைவுபெற்ற பின்னர், கலந்துரையாடல் இடம்பெற்றது.









