துவாரகாவுக்கும்  அவரது அப்பாவுக்கும் அஞ்சலி…

 
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன் இறுதிவரை போராடித் தியாகச்சாவைத் தேர்ந்துகொண்டார். அவரது உடல் சிறீலங்கா அரச தரப்பினராற் காண்பிக்கப்பட்டது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 
 
விமர்சனங்களுக்கு அப்பால், விடுதலையின் பெயரால் தியாகச்சாவைத் தேர்ந்துகொண்ட அவர் அஞ்சலிக்குரியவர். அவரது இரண்டு பிள்ளைகளும் (சாள்ஸ் அன்ரனி, துவாரகா) போராளிகளாக இருந்து தியாகச்சாவடைந்தவர்கள். அதனால், தியாகச்சாவடைந்த ஏனைய போராளிகளோடு சேர்த்து பிரபாகரனுக்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சலி செலுத்திவருகிறேன்.
 
அஞ்சலி நிகழ்வுகள் பற்றிச் சிலர் நேரடியாக என்னிடம் கேட்பதாலும் பிரபாகரன் மற்றும் அவரது மகள் துவாரகா குறித்த மோசமான போலிச்செய்திகள் தமிழ்ச் சமூகத்திற் பல்வேறு குழப்பங்களை உருவாக்க முனைவதாலும் ‘சாட்சி நிலை’ நின்று இக் கட்டுரையினை எழுத விழைகிறேன். 
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்காக வருடாந்தம் ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகளை முன்னெடுத்து அஞ்சலி செலுத்துகிறவர்கள், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. இதற்குச் சொல்லப்படக்கூடிய காரணங்கள் எதுவும் ஏற்புடையதாக இருக்கப்போவதில்லை.
 
தனது தலைமையின் கீழ் அணிதிரண்டு போராடித் தியாகச்சாவடைந்த போராளிகள் அனைவருக்கும் இறுதிவரை அஞ்சலி செலுத்தத் தவறாத பிரபாகரனை, ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகளில் அஞ்சலிக்குரியவராகச் சேர்த்துக்கொள்ளாமல் விட்டுவிடுவது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல. இத்தகைய ‘நழுவற் போக்கு’ அவருக்கு இழைக்கப்படும் அநீதியும் அவமதிப்புமாகும். 
 
பிரபாகரனின் இறுதி நிமிடங்கள் பற்றிப் பல்வேறு விதமான நம்பிக்கைகள், வதந்திகள் நிலவுகின்றன. அவரது இறுதி நிமிடங்கள் எப்படிக் கழிந்தன என்பதைத் திட்டவட்டமாக யாராலும் இப்போது கூற முடியாது. பொதுவெளியிற் காண்பிக்கப்பட்ட அவரது உடல் சார்ந்த துல்லியமான தரவுகளை அறிந்திருக்கக்கூடிய சிறீலங்கா அரச தரப்பினர், அவற்றை வெளிப்படையாக முன்வைத்து நம்பகத்தன்மையுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
 
இறுதிப் போரின் பேரழிவை நோக்கிய போக்கை உள்ளிருந்து பார்த்த, பிரபாகரனை நன்கு அறிந்த, இறுதிப் போர் பற்றிய பல்வேறு தரவுகளையும் விருப்பு வெறுப்பின்றி ஆராயக்கூடிய ஒருவரால், நிகழ்தகவுகளின் அடிப்படையிலே பிரபாகரனின் இறுதி நிமிடங்களை உண்மைக்கு நெருக்கமாக உணர்ந்துகொள்ள முடியும்.
 
ஒளிப்படங்களில் வீடியோப் பதிவுகளில் மட்டுமல்ல, நேரிலும் பிரபாகரனை உற்று நோக்கியிருக்கிறேன். அவரது தோற்றத்தைப் பலமுறை வரைந்து பார்த்திருக்கிறேன். அந்த வகையில், முக அமைப்பைக் கொண்டு மட்டுமல்ல வேறு சில அடையாளங்களைக் கொண்டும் அவரது உடலை என்னால் உறுதிப்படுத்த முடியும். பொதுவெளியிற் காணப்படாத அல்லது அறியப்படாத ஒளிப்பட ஆதாரங்களையும் தரவுகளையும் இயன்றவரை சேகரித்து, விருப்பு வெறுப்போ முன் முடிவுகளோ இன்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சுயாதீனமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். எனது தனிப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த வகையில், மரபணுப் பரிசோதனை (DNA Test) கூட அவசியமற்றதாகும். 
 
பிரபாகரனை நேரில் அறிந்தவன் என்ற முறையிலும் அவருக்கு நெருக்கமான பலர் எனக்கு நெருக்கமாக இருந்தார்கள் என்ற முறையிலும் அவரது தனிப்பட்ட குண இயல்புகளையும் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருக்கிறேன். இறுதிப் போரின் அவலமான முடிவை முன் உணர்ந்த நானும் சில அரசியல் ஆய்வாளர்களும் போராளிகளும், சில காரணங்களுக்காகப் போரின் இறுதிக் கட்டத்தில் அவரை வெளியேறிச்செல்வதற்கும் வேறு சில மாற்று முடிவுகளை எடுப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கினோம். ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ நடவடிக்கைகளின் மோசமான பின் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தோம். அவருக்கு நெருக்கமாகவும் அடிக்கடி சந்திக்கக்கூடியோராகவும் இருந்தவர்கள் வழியாகக் கூட்டாகவும் தனியாகவும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போது இத்தகைய விடயங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தன. ‘பெக்கன் திட்டம்’ (Project Beacon)  கொண்டிருந்த ஆபத்துகள் பற்றியும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது. நீண்ட காலமாக எனக்கு நெருக்கமானவராகவும் சமர் ஆய்வு மையத்தின் பொறுப்பாளராகவும் இருந்த திரு. யோகரட்ணம் யோகி, ‘பெக்கன் திட்டம்’ குறித்த புரிதலைக் கொண்டிருந்தார். எது எப்படியிருந்தாலும், உரிய காலத்தில் எதுவும் சரியாகப் பரிசீலிக்கப்படவில்லை. 
 
சிறீலங்கா அரச படைகளின் மோசமான போரை எதிர்கொண்டு நின்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளின் பொருட்டும், அழிவின் பிளிம்பில் நின்ற இலட்சக்கணக்கான மக்களின் பொருட்டும், நீண்டகால உயிர்த்தியாகங்களாலும் இழப்புகளாலும் தீவிர உழைப்பாலும் கட்டமைந்த விடுதலைப் போராட்டத்தின் பொருட்டும் முன்வைக்கப்பட்ட ‘மாற்றுத் திட்டங்கள்’ எதையும் பரிசீலிக்க முடியாத ‘பிடிவாதம்’, பிரபாகரனின் தலைமைத்துவத் தோல்வி என்றே மறுவாசிப்புச் செய்யப்பட முடியும்.
 
அழுத்தம் திருத்தமான ஆலோசனைகளையோ மாற்றுக் கருத்துகளையோ முன்வைக்கக்கூடிய எவரையும் பிரபாகரன் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. சில தமிழாக்கத் திரைப்படங்களை மறுபடி மறுபடி பார்த்து, அவற்றிலிருந்து எதிர்மறையான சில விடயங்களை உள்வாங்கிக்கொண்டார். (இரண்டு தமிழாக்கத் திரைப்படங்கள் சார்ந்த பிரபாகரனின் மனநிலைகளும் எதிர்வினைகளும் தனியாகப் பேசப்படவேண்டியவை.) 
 
மிகப்பெரிய விடுதலைப் போராட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்பியதில் அவர் காட்டிய அக்கறையும் தீவிர உழைப்பும் சாதாரணமானவையல்ல. தனக்கெனவோ தன் சந்ததிக்கோ எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் ஆயுள் முழுதும் தியாக வாழ்வை வாழ்ந்து தியாகச்சாவைத் தேர்ந்துகொண்ட அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நேர்மறை அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. அவர் மீதான விமர்சனப் பார்வைகள், அவரது மதிப்பைக் குறைப்பதற்கானவையல்ல. 
 
போரின் இறுதி நாட்களில் அவர் விரும்பியிருந்தாலும் வெளியேற முடியாத மோசமான நிலைமை சூழ்ந்து இறுக்கியது. தரை மற்றும் கடல் வழியான இராணுவ முற்றுகைகளை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆயுதப் போராட்டம் பேரழிவோடு தோற்கடிக்கப்படும் நிலை உருவாவதைத் தெரிந்துகொண்டுதான் அவர் போரை எதிர்கொண்டார். அந்தவகையில், மாற்று முடிவுகளையோ முன்னெச்சரிக்கையுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளையோ உரிய நேரங்களில் மேற்கொள்ள முன்வராத அவரது தலைமைத்துவத்தின் மீதான விமர்சனப் பார்வைகளை அவர் உயிரோடு இருந்த காலத்திலிருந்தே கொண்டிருக்கிறேன். அது அவருக்கே தெரிந்ததுதான். எனது போர்க்கால ஒளிப்படங்கள் வாயிலாகப் பல விடயங்களை அவரது பார்வைக்குக் கொண்டுசெல்ல முடிந்திருக்கிறது. மக்களுடனான அவரது தொடர்பாடல் ‘மாவீரர் நாள்’ உரையுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது என்றும் நெருக்கடியான போர்க்காலத்தில் மக்களுக்காக அவர் பிரத்தியேகமாக உரையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறேன். ”ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…” என்னும் சினமாப் பாடலை அவருக்குத் தமிழர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கலாம் என்று அப்போது நண்பர்களோடு அங்கதமாகப் பேசியிருக்கிறேன். அப் பாடலில் ”ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்…” என்று ஆண் குரலில் ஒலிக்கும் வரி அவரை நினைவுபடுத்தும். 
 
விமர்சனபூர்வமான கருத்தாடல்களை இங்கு விரித்துச்செல்ல அவசியமில்லை என்று தோன்றுகிறது. சில விடயங்களை இப்போது விரிவாகப் பேசக்கூடிய மனநிலையும் அவகாசமும் எனக்கு இல்லை. பிறிதொரு காலத்தில், நான் அறிந்த பிரபாகரன் பற்றியும்  இறுதிப் போரின் அறியப்படாத பக்கங்கள் பற்றியும் விரிவாகப் பேசக்கூடும்.
 
எது எப்படியிருந்தாலும், தனிப்பட்ட முறையில் என் மீதான அக்கறையும் அன்பும் கொண்டிருந்த அவரது இழப்பின் துயரம், இக் கட்டுரையினை எழுதும்போது குறுக்கறுத்துக் கலங்கச் செய்கிறது. பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் சிறுகச்சிறுகக் கட்டிவளர்க்கப்பட்ட மிகப்பெரிய ஆயுதப் போராட்ட இயக்கம் சிதைக்கப்பட்டு அழிந்து போவதையும் தன்னை நம்பியிருந்த தளபதிகளும் போராளிகளும் கொத்துக்கொத்தாகச் சாவடைவதையும் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் மனம் எப்படிக் கலங்கித் தவித்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திரு. தமிழ்ச்செல்வன் தியாகச்சாவடைந்த பின்னர், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவில் வந்திருந்தார் பிரபாகரன். அன்று அவர் கலங்கிநின்ற தோற்றம் அழியாதிருக்கிறது என் மனதில். அப்போது அங்கே நான் ஒளிப்படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். விமானத் தாக்குதல்களும் வேறு பல ஆபத்துகளும் நிறைந்திருந்த காலகட்டம் அது.
 
பிரபாகரன் வருவார் என்றோ அவரது குடும்பத்தினர் வருவார்கள் என்றோ சொல்லக்கூடியவர்கள், அவரை நன்கு அறியாதவர்களாகவோ அவரை முன்வைத்துப் பிழைப்பு நடத்த முனைபவர்களாகவோ மோசமான உள் நோக்கங்கள் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். மட்டுமல்ல, மறைமுகமாக அவரை இழிவுபடுத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
 
பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் பலமுறை நேரில் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன் என்பதால், அவர்களை எங்கு கண்டாலும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். பிரபாகரன் மகள் துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், போராளியாகச் செயற்பட்ட துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் பிரபாகரன் பெயர்களால் முன்னெடுக்கப்படும் ‘மோசடி’ நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை.
 
பிரபாகரனின் அண்ணன் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக்கூடியவர் யாராயினும், முதலில் மரபணுப் பரிசோதனை மூலம் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
 
துவாரகா பெயரில் ஆள் மாறாட்டமும் அரசியல் மோசடியும் செய்யத் துணிபவர்கள், நம்பகத்தன்மை கொண்ட மரபணுப் பரிசோதனைக்கு உடன்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். குளறுபடிகள் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மரபணுப் பரிசோதனை முறைப்படியாக நடக்குமெனில், ‘கூட்டுக் களவாணிகள்’ அம்பலப்பட்டுவிடுவார்கள். 
 
துவாரகாவின் தியாகச்சாவு இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்துவிட்டதையோ அவரது குடும்பத்தினரின் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள் நடந்ததையோ அப்போது வெகு சிலரே அறிந்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் எவருமே இறுதிப் போரில் இருந்து தப்பிப்பிழைக்கவில்லை. ஆக, பிரபாகரனோ அவரது குடும்பத்தினரோ இப்போது இல்லை. 
 
இதை எழுதத்தொடங்கிய பின்னர், துவாரகாவை நன்கு அறிந்த, துவாரகாவின் அண்ணனோடு (சாள்ஸ் அன்ரனி) இயக்கப் பணிகளில் இறுதிவரை இருந்த, எனது நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். துவாரகா பற்றிய நினைவுகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம்.
 
விமர்சனங்களுக்கு அப்பால், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதிலும் விடுதலை அரசியலை முன் நகர்த்துவதிலும் பிரபாகரன் கொண்டிருந்த பங்கு முக்கியமானது. அவருடன் அனைத்தையும் தேக்கி உறைய வைத்துவிட முடியாது. அவரை நினைவுகூரலாம், அஞ்சலிக்கலாம். அவரது வாழ்விலும் சாவிலும் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ‘விடுதலை அரசியல்’ அவரையும் கடந்து ஆரோக்கியமான வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டியது.
 
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களாகவோ ஆதரவாளர்களாகவோ இருப்பவர்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியம். சர்வதேச அளவில் சட்ட ரீதியான சிக்கல்களும் கருத்தியல் மாறுபாடுகளும் நிறைந்திருக்கும் நிலையில், சர்வதேச அரசியல் நிலைமைகளைக் கணக்கிலெடுத்து ராஜதந்திர அடிப்படைகளுடன் ஒருங்கிணைந்து ‘விடுதலை அரசியல்’ வழியில் அறம் பிழைக்காமற் செயற்படுவது அவசியம்.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாகத் தம்மைக் காட்ட முனைவோரும் அந்த இயக்கத்தின் அடையாளங்களையும் பிரபாகரன் போன்ற போராளிகளின் பெயர்களையும் தமது அடையாள அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த விழைவோரும் தெரிந்தோ தெரியாமலோ ‘தவறு’ செய்பவர்கள் ஆவார்கள். அத்தகையவர்கள் தம்மை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். 
 
இறுதிப் போரில் நிகழ்ந்திருக்கும் ஆயுதப் போராட்டத் தோல்வியும் பேரழிவுகளும் விரிவாக விவாதிக்கப்படுவதன் மூலமே புதிய சிந்தனைகளும் செயற்பாட்டுத் தளங்களும் விரிவடையும். ‘முள்ளிவாய்க்கால் முடிவு’ தரக்கூடிய படிப்பினைகளைத் தமிழ்ச் சமூகம் உள்வாங்கிக்கொள்வதும் சனநாயக அடிப்படைகளுடன் ‘விடுதலை அரசியல்’ சார்ந்து முன் நகர்வதும் அவசியம்.
 
வெற்றுச் சடங்குகளாகவோ அடையாள அரசியலின் வினைத்திறன் குன்றிய செயற்பாடாகவோ பொருளாதார வளங்களை வீணடிக்கும் கொண்டாட்டங்களாகவோ அஞ்சலி நிகழ்வுகள் அமைந்துவிடக்கூடாது. அஞ்சலி நிகழ்வுகளில், அரசியல் முதிர்ச்சியும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தேசிய ஒருமைப்பாடும் சனநாயகப் பண்புகளும் அவசியமானவை. 
 
உயிர்த்தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது, ஒருங்கிணைந்த ‘விடுதலை அரசியல்’ முன்னெடுப்புகளின் பகுதியாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசடுத்தனங்கள், போலி நம்பிக்கைகள், அடிப்படைவாத நிலைப்பாடுகள், இயக்க முரண்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து காவியபடி விடுதலை அரசியல் வழியில் ஆரோக்கியமாக முன் நகர முடியாது.
 
2023-11-30
அமரதாஸ்
 
மேலதிக இணைப்பு (2023-12-07)

திரு. பிரபாகரனை நன்கு அறிந்திருக்கிறேன் என்பதால், அவரது உடல் சார்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்த காலத்திலேயே அவரது மரணம் சார்ந்த உண்மைகளை என்னளவில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.

அவர் இருப்பதாக வலிந்து பொய்களை விதைப்பவர்களும் அவற்றை நம்பக்கூடிய சுயசிந்தனை அற்றவர்களும் அவரை வைத்துப் பிழைப்பும் இழிவரசியலும் செய்ய முனைவோரும் பெருகியிருக்கும் நிலையில், மறுக்கவே முடியாத துல்லியமான ஆதாரங்களையும் தர்க்க நியாயங்களையும் சுய அனுபவங்களையும் முன்வைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. 

அவரது மரணம் தொடர்பான பல்வேறு தரவுகளையும் ஆவணங்களையும் நீண்டகாலமாகச் சேகரித்துவருகிறேன். கிடைத்திருக்கும் ஆவணங்களைப் பல்வேறு தரவுகளுடன் ஒப்பாய்வு செய்து மேலும் சில மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. இதுவரை யாரும் அறிந்திராத முக்கியமான சில புள்ளிகள் என்னிடம் உள்ளன.

வருங்காலத்தில் வாய்ப்புள்ளபோது, பிரபாகரன் மரணம் தொடர்பான ‘புலனாய்வு ஊடகவியல்’ (Investigative Journalism) வகைப்பட்ட விரிவான ஆய்வை அறிக்கையாகவோ வீடியோப் பதிவாகவோ வெளியிட முடியும். ஊடகவியல் அறங்களின் அடிப்படையில் அது அமையும். எதுவும் தப்பாகிவிடக் கூடாது என்பதிற் கவனமாக இருக்கிறேன்.

இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், காயமடைந்திருந்த நான் தென் இலங்கைப் பகுதிகளில் இராணுவ வைத்தியர்களின் வைத்தியப் பராமரிப்பில் இருக்க நேர்ந்தது. அப்போது சில இந்திய வைத்தியர்களும் இருந்தார்கள். போரின் முடிவில் இராணுவத்தினராற் பதிவுசெய்யப்பட்டிருந்த போர்க்குற்ற ஆவணங்கள் பலவற்றை அப்போது பார்க்க முடிந்தது. இறுதிப் போரில் நான் ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருந்ததை எப்படியோ அறிந்திருந்த சிலர், தாமாகவே முன்வந்து பல்வேறுபட்ட பிரத்தியேகமான அவலக் காட்சிகளைக் கண்பித்தார்கள். அவற்றுள்ளே பிரபாகரனின் உடல் சாந்த காட்சிகளும் அடங்கியிருந்தன. 

வெவ்வேறு தரப்பினரால் வெவ்வேறு நிலைகளில் அவரது உடல் கையாளப்பட்டிருக்கக்கூடும். இராணுவ வைத்தியர்கள், அவரது தலையில் இருந்து சில பகுதிகளை எதற்காகவோ பிரித்தெடுத்துப் பாதுகாத்திருக்கிறார்கள். அது நடந்த பிறகுதான், வேறு தரப்பினரால் அவரது உடல் திரு. கருணாவுக்கும் திரு. தயாநிதிக்கும் வேறு ஊடகங்களைச் சார்ந்தவர்களுக்கும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. முழு நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை எப்போதாவது வெளிவரக்கூடும்.

இக் கட்டுரையினை எழுதி முடித்தபின்னர், இறுதிவரை மேல் மட்ட இயக்கப் பணிகளில் இருந்து போரின் முடிவில் இராணுவப் பாதுகாப்பில் இருந்துவிட்டு வந்த ‘தம்பி’ ஒருவர் என்னுடன் உரையாடினார். (மிக நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்.) ஒரு இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியில் இருந்து அவர் பார்த்த அந்தரங்கமான வீடியோப் பதிவைக் குறித்து விபரித்தார். அந்தக் கைத்தொலைபேசியின் வகை அவருக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அவரது வாக்குமூலமும் எனது அனுபவங்களும் ஆய்வுகளும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.

பிரபாகரனின் உடல் சார்ந்த மூன்று பிரத்தியேகமான படங்களை, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகர் ஒருவர் எப்படியோ பெற்றிருக்கிறார். முன் அறிமுகம் இல்லாத அவரைப் பல மாதங்களுக்கு முன்னரே தொடர்புகொண்டு உரையாடியிருக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், பிரபாகரனின் மரணம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகிவிட்ட துன்பியல் நிகழ்வு. அவரது மரணம், இனி ஒருபோதும் மர்மமாக இருக்க முடியாது.