ஜெராட் ரொபுஷொன் அவர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரெஞ்சு நட்புறவுக் கழகச் செயலகத்திற் பதிவுசெய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இயங்கிவரும் பிரான்ஸ் நட்புறவுக் கழகத்தின் (அல்லியான்ஸ் பிரான்சேஸ்) பணிப்பாளராகச் செயற்பட்ட ஜெராட் ரொபுஷொன் அவர்கள் மறைந்துவிட்டார். இது ஒரு பேரிழப்பு. அன்னாருக்கு எனது அஞ்சலி…
பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, 2004 இல் பிரான்ஸ் நட்புறவுக் கழகத்தின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார் திரு. ஜெராட் ரொபுஷொன். மொழியியல் மற்றும் கலைகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டுவந்தவர் அவர். அவரது பங்களிப்புடன் நடைபெற்ற ஒரு ஒளிப்பட நிகழ்வில் எனது ஒளிப்படங்களைப் பெற்றுப் பயன்படுத்தினார். அவர் மூலம் பல்வேறு பிரெஞ்சுத் திரைப்படங்களின் பிரதிகளைப் பெற முடிந்திருக்கிறது. அவர் முன்னெடுத்த ஒளிப்படப் போட்டியில், எனது ஒளிப்படம் முதற் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல்துறை சார்ந்த அறிதலையும் தேடலையும் கொண்ட அவர், எல்லோருடனும் எளிமையாகப் பழகக்கூடியவர்.
ஒருமுறை, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்திற்குக் கௌரவ விருந்தினராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு என்னை அழைத்துச்சென்றிருந்தார் ஜெராட் ரொபுஷொன். சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் பல்துறை சார் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அங்கு அப்போது சந்திக்க முடிந்தது. திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான திரு. கே. எஸ். சிவகுமாரன் வந்திருந்தார்.
நண்பரும் எழுத்தாளருமான யேசுராசா அவர்கள், ஜெராட் ரொபுஷொன் தொடர்பான அரிய தகவல்களோடு அஞ்சலிக் குறிப்பை முகநூலிற் பதிவுசெய்திருக்கிறார். ஜெராட் ரொபுஷொன் அவர்களோடு நெருங்கிப் பழகிய வேறு நண்பர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரும் அவரைப் பற்றிய பதிவுகளை மேற்கொள்வது நல்லது.

கொழும்பில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற் பதிவுசெய்யப்பட்டது. (இடமிருந்து: பிரான்ஸ் தூதுவர், அமரதாஸ், திரு. ஜெராட் ரொபுஷொன்)
2024-05-14
அமரதாஸ்