முள்ளிவாய்க்கால் + கஞ்சி


யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடம் பகுதில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் வகையில் 17-05-2024 அன்று ‘கஞ்சி’ பரிமாறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே 12 தொடங்கி மே 18 வரையான காலப்பகுதி, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அக் காலப்பகுதியில், வெவ்வேறு இடங்களிலும் கஞ்சி தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்படும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இறுதிப் போர்க்காலத்தின் பேரவலங்களுக்கு மத்தியில் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்க உதவிய ஒரு உணவு வகையாகிய கஞ்சி, ஒரு நினைவுக்குறியீடாக மாறியிருக்கிறது.

கஞ்சி வழங்கும் நிகழ்வில் 17-05-2024 அன்று பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த ஒளிப்படத்தினை, நீண்டகால நண்பரும் தமிழ்த் தேசிய அரசியற் செயற்பாட்டாளருமான ஐங்கரநேசன் அவர்களது முகநூலிற் காணமுடிந்தது.

பல்வேறு வகையான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கிளர்த்தக்கூடியதாக இந்த ஒளிப்படம் அமைந்திருக்கிறது.

மதிற்சுவரில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தட்டியில் இருக்கும் ஒளிப்படத்தினை, முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் உருவாக்கியிருந்தேன். இலங்கையின் இறுதிப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. அன்றைய நாளில், இது போன்ற வேறு பல ஒளிப்படங்களையும் உருவாக்கினேன்.

அப்போது அந்த இடத்தில் எறிகணைத் தாக்குதல் நிகழக்கூடும் என்னும் அச்சம் நிலவியபோதும், பசியெரிந்து புகையும் வயிறுகளோடு கஞ்சி பெறக் காத்திருந்தனர் மக்கள்.

கஞ்சிக்கான வரிசையிலே கால்கடுக்கக் காத்துநின்று, பாத்திரம் ஒன்றில் வாங்கிய கஞ்சியைப் பக்குவமாய் எடுத்துச்சென்று தன் பெண் பிள்ளைக்கு ஊட்டிவிட்டார் ஒரு தந்தை. அந்த நிகழ்வையும் ஒளிப்படமாக்கிக்கொண்டேன். அந்தத் தந்தையைப் போலவே பசித்திருந்தேன் நானும்…

பசியோடும் தாகத்தோடும் இருந்த என்னால், அன்று அந்தக் கஞ்சியைப் பெற முடியவில்லை. வேறு பல ஒளிப்படங்களை உருவாக்கிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.

2024-05-24
அமரதாஸ்