உலகத் தமிழர்கள் ஒன்றுகூடிய டாவோஸ் மாநாடு

உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் பல்துறைத் திறனாளர்கள் கலந்துகொண்ட மாநாடு, ‘தமிழர் தலைநிமிர் காலம்’ என்னும் தொனிப்பொருளில் ‘எழுமின்’ (The RISE) அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் சுவிற்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

தொழிலதிபரும் சுவிஸ் நாட்டிற்கான எழுமின் அமைப்பின் தலைவருமாகிய திரு. சிறி இராசமாணிக்கம் தலைமையில், இந்த ஆண்டின் (2024) யூன் மாதத்தில் 7, 8, 9 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மாநாட்டில் 27 நாடுகளைச் சார்ந்த 500 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பல்துறைசார் திறனாளர்கள் ஒன்றுகூடி அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இம் மாநாடு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. உலகப் பொருளாதாரம், நவீன தொழில்நுட்பம், வணிக முயற்சிகள், இலங்கைப் பொருளாதாரம், ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் வாழ்வியல் நெருக்கடிகள், புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் போன்ற பல்வேறு விடயப்பரப்புகளை உள்ளடக்கும் வகையிலான கருத்தமர்வுகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றுள்ளன.

வணிகத்துறை சார்ந்தோர் மட்டுமல்லாமல், ஊடகர்களும் கலைத்துறைகள் சார்ந்தோரும் தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் இம் மாநாட்டிற் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் மற்றும் சில பேராசிரியர்கள் உட்பட வேறு சிலரும் இலங்கையில் இருந்து மாநாட்டிற்காக வந்திருந்தனர்.

‘இலங்கையில் தமிழர்களின் சிவில் சமூக வளர்ச்சிக்கு உந்துதல்’ தொடர்பான ஒரு அமர்விலும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் ஊடகராகச் செயற்பட்ட அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு, இங்கிலாந்து மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளரும் ஊடகருமாகிய திரு. ஜெகத் கஸ்பர், 2018 இல் எழுமின் என்னும் அமைப்பை உருவாக்கியிருந்தார். அவரது வழிப்படுத்தலில் எழுமின் அமைப்பினரது கூட்டு முயற்சியில் வெவ்வேறு நாடுகளில் இத்தகைய மாநாடுகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுகின்றன. அந்த வகையிலே தற்போது 13 ஆவது மாநாடு டாவோஸ் நகரில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும்  தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி மூலங்களாக அமைந்து, தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கும் தமிழர்களின் கண்ணியமான வாழ்விற்கும் பன்மைத்துவக் கருத்தாடல்களுக்கும் இத்தகைய மாநாடுகள் வழிவகுக்க வேண்டும் என்று தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2024-06-10