டாவோஸ் மாநாட்டில் ஒளிப்பட நூல் அறிமுகம்
பல்துறைத் தமிழ்த் திறனாளர்கள் மற்றும் உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் கலந்துகொண்ட மாநாடு, ‘தமிழர் தலைநிமிர் காலம்’ என்னும் தொனிப்பொருளில் ‘எழுமின்’ (The RISE) அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் சுவிற்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இரண்டாம் நாளாகிய 2024-06-08 அன்று ‘இலங்கையில் தமிழர்களின் சிவில் சமூக வளர்ச்சிக்கு உந்துதல்’ பற்றிய ஒரு அமர்வு இடம்பெற்றது. இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன், மருத்துவத்துறைப் பேராசிரியர் திரு. ராஜேந்திரா சுரேந்திரகுமாரன் உட்பட மேலும் சிலர் கருத்துரையாற்றினர்.
அந்த அமர்வில், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் ஊடகராகச் செயற்பட்ட அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு, இங்கிலாந்து மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
‘இந்த நூல் காலத்தின் தேவை. பாராளுமன்றத்தில் நான் பேசும்போது சில ஆவணங்களைத் தேடி எடுத்துக் கொடுப்பதுண்டு. அதுமாதிரியான தேவைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கு ஆவணமாகக் கையளிக்கவும் இந்த நூலைப் பயன்படுத்த வேண்டும்.’ என்று, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அறிமுக உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
2024-06-10