தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக ஒரு விடுதலைத் தேசம் அமையவேண்டும் என்று விரும்பி, ‘தமிழ் ஈழ இராணுவம்’ (T.E.A) என்னும் போராட்ட அமைப்பை உருவாக்கிச் செயற்பட்ட தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மறைந்துவிட்டார்.

பனாகொடை மகேஸ்வரன் அல்லது தம்பா என்று அழைக்கப்பட்ட தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களுக்கு எனது அஞ்சலி…

போராட்டச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி எளிமையாக அவர் வாழ்ந்த காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை அதிகமாகக் கொண்டிருந்தார். மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பவர்களோடும் உரையாடக்கூடிய பக்குவம் அவருக்கிருந்தது. தனது போராட்டகால அனுபவங்களையும் பல்வேறு சிறைகளில் இருந்த அனுபவங்களையும் அவர் விரிவாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச்சில சந்தர்ப்பங்களில் உரையாட முடிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. வி. பு. அமைப்பின் தலைவர், தனக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் பற்றி அவ்வப்போது உரையாடியிருக்கிறார்.

ஆளணி குறைவாக இருந்த போராட்ட அமைப்பில் இருந்துகொண்டு அவ்வப்போது அவர் நிகழ்த்திய போராட்டகால நடவடிக்கைகள், ஒரு காலத்திற் பெரும் சாகசங்களாகப் பார்க்கப்பட்டன.

விடுதலைப் போராட்டம் என்பது சாகசங்களாலும் ஆயுதப் பிரயோகங்களாலும் இராணுவவாதங்களாலும் மட்டும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து விடுவதில்லை.

போராட்ட இயக்கங்களின் பின்னணிகளிற் போராளிகளாக வளர்ச்சியடைந்தவர்கள், ‘விடுதலை அரசியல்’ சார்ந்து சேர்ந்தியங்க முடியாமற் போய்விட்ட கசப்பான யதார்த்தங்களில் இருந்து ஈழத் தமிழினம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.

2024-07-19 அமரதாஸ்