விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு அஞ்சலி
இலங்கையின் இடதுசாரி அரசியற் செயற்பாட்டாளர் திரு. விக்கிரமபாகு கருணாரத்ன இன்று (2024-07-25) மறைந்துவிட்டார்.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
அவரைப் போன்ற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் அரசியல் அதிகார மட்டங்களில் நிலைபெற்று, அறம் சார் அரசியலில் ஈடுபட முடியாத ‘சூத்தைச் சனநாயகம்’ நிலவும் நாடாகவே இற்றைவரை இலங்கை சீவித்திருக்கிறது.
2024 ஆம் ஆண்டில் சனாதிபதிக்கான பொது வேட்பாளர் குறித்துச் சிந்திக்கக்கூடிய தமிழர்கள், 2010 ஆம் ஆண்டில் சனாதிபதித் தேர்தலிற் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரத்ன வுக்கு வாக்களித்து அவரை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தியிருக்க முடியும். மாறாக, போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்படுகிற திரு. சரத் பொன்சேகா, திரு. மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வாக்களிக்கும் நிலைமைக்குப் பெருவாரியான தமிழர்களும் சிங்களவர்களும் சென்றமை ‘இழிவு அரசியல்’ என்றே பார்க்கப்பட முடியும். இத்தகைய இழிவு அரசியல் பிரயோகப்படும் சூதாட்டக் களமாகவே சூத்தைச் சனநாயகச் சூழல் விளங்கும். இத்தகைய சூழலில், முற்போக்குச் சனநாயக சக்திகளையும் ‘விடுதலை அரசியல்’ வழியைத் தேர்ந்துகொள்ளக்கூடிய சக்திகளையும் இனங்கண்டு பலப்படுத்துவது அவசியமாகும்.
இலங்கைச் சூழலில் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முற்போக்குச் சிந்தனை கொண்ட சிங்களத் தரப்பினருக்கும் விக்கிரமபாகு கருணாரத்ன வின் மறைவு ஒரு பேரிழப்பாகும்.
சமூக ஏற்றத்தாழ்வுகளும் அரசியல் மோசடிகளும் சிங்களப் பேரினவாதக் கோளாறுகளும் இனப்பிரச்சினைகளும் நிறைந்த இலங்கையில், முற்போக்குச் சிந்தனைகளோடு அநீதிகளுக்கு எதிராகப் போராடக்கூடிய போராளியாக வாழ்ந்து 81 வயதிற் சாவடைந்திருக்கும் அவரை, நிறை வாழ்வடைந்த ஒரு மாமனிதர் என்று குறிப்பிடலாம்.
அன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி…
2024-07-25 அமரதாஸ்