Mothers’ Instinct: தாய்மையின் இருண்மை

 
பிரெஞ்சு ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்ட Benoît Delhomme இயக்கிய ‘Mothers’ Instinct’ என்னும் ஆங்கிலத் திரைப்படம் இந்த ஆண்டில் (2024) வெளிவந்திருக்கிறது. இதன் இயக்குநரே ஒளிப்பதிவு இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். மையப் பாத்திரத்தில் Anne Jacqueline Hathaway நடித்திருக்கிறார். மையப் பாத்திரத்திற்கு இணையான மற்றுமொரு பாத்திரத்தில் Jessica Michelle Chastain நடித்துள்ளார். இருவருமே நடிப்புத்திறன் சார்ந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுக்கொண்டவர்கள். 
 
இந்த ஆங்கிலத் திரைப்படமானது, Barbara Abel எழுதிய (2012) Behind the Hatred (Derrière la haine) நாவலின் அடிப்படையில் Olivier Masset-Depasse இயக்கி 2018 இல் வெளியான ‘Duelles’ என்னும் பிரெஞ்சுத் திரைப்படத்தின் மறு உருவாக்கம் (Re make) ஆகும்.
 
எதிர்பாராதவிதமாக மகனை இழந்துவிடும் ஒரு இளம் தாயின் உளவியல் நெருக்கீடுகளையும் நடத்தைக் கோளாறுகளையும் ஆராய முற்படும் திரைக்கதை இது.
 
ஒன்றாகவே பள்ளிக்குச் செல்லும் இரண்டு ஆண் சிறுவர்களுக்கு அம்மாக்களாக இருக்கும் இரண்டு இளம் பெண்கள், அயலவர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவரது மகன், வீட்டில் நிகழும் விபத்து ஒன்றில் இறந்துவிடுவதைத் தொடர்ந்து உறவுச் சிக்கல்களும் குற்றச் செயல்களும் விளைகின்றன.
 
மகனை இழந்துவிடும் தாய், மகனது அயல் வீட்டு நண்பனைச் சுவீகரிப்பதற்காக மிக நெருக்கமானவர்களையே அடுத்தடுத்துத் தந்திரமாகக் கொலை செய்கிறாள். 
 
அவளது விபரீத நடத்தைகளைக் காட்சிப்படுத்த விழையும் திரைக்கதையிலும் திரைமொழியிலும் ‘மேம்படுத்தல்’ செய்யப்படக்கூடிய பலவீனமான அம்சங்கள் இல்லாமலில்லை. 
 
காட்சியமைப்புகளும் படத்தொகுப்பு நுட்பங்களும் இசைப் பிரயோகங்களும், மேலும் சிறப்பாகப் படைப்புத்திறனுடன் கையாளப்பட்டிருக்க முடியும்.
 
திரைக்கதை நெடுகத் தொடரக்கூடிய ‘உளவியல் இருண்மை’, திகில் உணர்வு மற்றும் புதிர்த்தன்மை (Suspense) போன்றவற்றை இயல்பாகவும் திறம்படவும் பிரதிபலிக்குமாறு ஒளிப்பதிவை இன்னமும் மேம்படுத்தியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
 
மறு உருவாக்கம் என்ற முறையில், மூலத் திரைப்படத்தின் (பிரெஞ்சு) காட்சியமைப்புகளும் உரையாடல்களும் அப்படியே ஆங்கிலத் திரைப்படத்திற் கையாளப்பட்டிருக்கின்றன. எனினும், மிகச்சில இடங்களில் மாற்றம் அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றன. 
 
இரண்டு திரைப்படங்களுக்குமான ஒளிப்பதிவு முறைகள் குறிப்பிடத்தகுந்தவையாகவே அமைந்திருக்கின்றன. எனினும், பிரெஞ்சுத் திரைப்படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை சார்ந்து சற்று மேம்பட்டிருப்பதாக ஒப்பீட்டளவிற் குறிப்பிடலாம்.
 
இரண்டு திரைப்படங்களிலும் வருகிற ஒத்த தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் வெவ்வேறு நடிகர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
 
பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு திரைப்படங்களையும் அடுத்தடுத்து நுண்ணுணர்வோடு பார்க்கக்கூடிய ஒருவர், இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் நுட்பமான வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய புரிதல், திரைப்படத்துறை சார்ந்தோருக்கும் திரைக்கதைப் படைப்பாளிகளுக்கும் துறைசார் நன்மைகளைத் தரவல்லது.
 
2024-10-06
அமரதாஸ்